Sunday, November 25, 2007

நன்றி விழா!

சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு நிறைவு தருகிறது: கருணாநிதி

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 25, 2007

சென்னை: சிறுபான்மை சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது மனதுக்கு நிறைவு தருவதாக அமைந்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்ட பெருமிதம் கிடைத்துள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக அரசு சிறுபான்மை சமூகத்தினருக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டதற்காக, முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து சென்னையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் நேற்று விழா நடத்தப்பட்டது.

விழாவில் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு வீர வாளும், செங்கோலும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், தமிழகத்தில் நன்றி கூறுவார்களா, அடடே ஆச்சரியமாக இருக்கிறதே என்று நான் எண்ணியதுண்டு. இப்போது நன்றி கூறுகிறவர்கள் இவ்வளவு பேரா என்று நான் மகிழ்ச்சி அடையக் கூடிய அளவில் நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

சிறுபான்மையினருக்கு - இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு சம நிலையில் அளிப்பது என்று முடிவு செய்து அதை முதன் முதலாக அறிவித்தது 24.5.2006 அன்று ஆளுநர் உரையில். அதற்கு நன்றி கூறும் விழா இன்று 24ம் தேதி. தமுமுக 1995ம் ஆண்டு உதயமானது என்றார்கள். அந்த வருடத்தின் கூட்டுத் தொகை 24. அவ்வளவு ஏன், நான் பிறந்த ஆண்டே 1924. நம்மிடையே எவ்வளவு ஒற்றுமை இயல்பாக அமைந்திருக்கிறது.

நம்மையா பிரித்து விட முடியும் என்று இதை விட சிறப்பாக, எண் கணித ஜாதகம் என்று இல்லாமல், எண்ணத்தை வைத்து இந்த ஜாதகம் கணிக்கப்பட்டிருக்கிறது.

சிறுபான்மை சமுதாயம் முன்னேற வேண்டும், உரிமைகளைப் பெற வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து, கோரிக்கை விடுத்து, போராடி இந்த உண்மைகளை உணர்ந்து, உணர்வுகளை மதித்து, நாங்கள் செயல்பட்டு தேர்தல் நேரத்திலே அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம் என்றால், மன்னிக்க வேண்டும், இது எங்கள் ரத்தத்தோடு ஊறிய சமாச்சாரம்.

தமுமுக 1995ல் தோன்றியபோது 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டு நலிந்தவர்களுக்கு உதவியதாக கூறினார்கள். இப்போது 31 ஆம்புலன்ஸ்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த இயக்கத்தின் பணி, ஆக்க வேலை மக்களுக்குத் தொண்டாற்றுவது, சமுதாயத்தில் நலிந்த பிரிவினருக்கு நன்மை செய்வது, கருணை இல்லம், அன்பு இல்லம் போல இந்த இயக்கம் ஏற்றுக் கொண்டு மிகக் குறுகிய காலத்தில் 5 ஆம்புலன்ஸ், 31 ஆக பெருகியிருப்பது பாராட்டத்தக்கது.

என் பொறுப்பில், எனது சொந்தப் பொறுப்பில், இன்னும் 2 ஆம்புலன்ஸ்கள் வாங்க, அதற்குரிய நிதி எவ்வளவு என்று கூறினால், என் சொந்தப் பொறுப்பிலே இந்தத் தொகையை வழங்கி - இந்த நாள் நம் நினைவில் நிற்க வேண்டிய நாள். நலிந்தோருக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள - நமக்கு வழிகாட்டியாக உள்ளவர்களின் பெயரால் எடுத்துக் கொண்ட சபதத்தை நிறைவேற்றிய நாள் என்ற வகையிலே இது அமையும்.

நான் சிறப்பு விருந்தினர் அல்ல, விருந்தினர்களை வரவேற்கும் உங்களில் ஒருவன். என்னைப் பெருமைப்படுத்துவதாக எண்ணி வேறுபடுத்தி விடாதீர்கள். நீங்கள் வேறு, நான் வேறல்ல.

இளம் பிராயத்திலேயே ஒரு கையில், முஸ்லீம் லீக் பிறைக் கொடியையும், மற்றொரு கையில் திராவிட இயக்கக் கொடியும் பிடித்து வளர்ந்தவன்.


புதுச்சேரியில், நான் அடிபட்டு, உதைபட்டு உயிர் போய் விட்டது என்று அந்தக் கும்பல் விட்டுச் சென்றபோது நான் அங்கிருந்து தப்பிச் சென்று, பெரியாரிடம் அழைத்துச் செல்லப்பட்டபோது, மீண்டும் வேறு யாரும் என்னை அடையாளம் கண்டு தாக்கி விடக் கூடாது என்பதற்காக நான் கட்டிச் சென்ற ஆடை லுங்கிதான்.

பெரியார், அண்ணா, காயிதேமில்லத் இவர்கள் எல்லாம் நம்மை வழிநடத்திச் சென்றிருக்கிறார்கள். இந்த வழியிலே சகோதரர்களாக செல்வோம் என்று குறிப்பிட்டு - நான் ஒரு கூட்டத்தில் சொன்னதைப் போல இந்து முஸ்லீம் சீக் ஈ சாயி - ஆபஸ் மே ஹை பாயி பாயி என்ற அந்த தத்துவத்தை இந்தியாவிலே கடைப்பிடிப்போம் என்றார் கருணாநிதி.

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், தமிழக அரசு வழங்கியுள்ள இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தத் தடையைத் தாண்டி, இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளவர்கள் நாளை உச்சநீதிமன்றத்தையும் அணுகக் கூடும். எனவே இந்தத் திட்டங்களை முறியடித்து சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை பாதுகாக்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

நன்றிங்க

//இளம் பிராயத்திலேயே ஒரு கையில், முஸ்லீம் லீக் பிறைக் கொடியையும், மற்றொரு கையில் திராவிட இயக்கக் கொடியும் பிடித்து வளர்ந்தவன்.//

அடிச்சிரய்யா "பஞ்ச்"

மேட்டர கச்சிதமா டச் பண்றதுல இவர விட்ட வேற ஆளு இல்லய்யா!

"நன்றியுடன் நடப்போருக்கு இறைவன் கூலி வழங்குவான்" (அல்குர்ஆன்,3:144)

2 comments:

பிறைநதிபுரத்தான் said...

இளம் பிராயத்திலேயே ஒரு கையில், முஸ்லீம் லீக் பிறைக் கொடியையும், மற்றொரு கையில் திராவிட இயக்கக் கொடியும் பிடித்து வளர்ந்தவன். - கலைஞர்.

என்னதான் கலைஞர் 'பஞ்ச்' டயாலக் சொன்னாலும், இடையிலே 'முரசொலி' மாறன் அறிவுறையின் படி ஒரு கையில் திராவிட இயக்கக்கொடியையும் மறுகையில் காவிகொடியையும் பிடித்ததை மறுக்கமுடியுமா?

முஸ்லிம் said...

பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கு நன்றி.

ஒரு முதல்வர் என்றால் நாட்டின் நலன் கருதி எல்லா கொடியையும் பிடிக்க வேண்டிவரும் அதானே ஜனநாயகம்!