Tuesday, December 19, 2006

தினமலரின் குசும்பு.

வெள்ளி நங்கை சாந்தி ஏற்கனவே மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள் குவித்துள்ளதோடு, தென்கொரியாவில் நடந்த உலக அமைதி மற்றும் சமாதான விளையாட்டுப் போட்டிகள், இலங்கையில் நடந்த தெற்கு ஆசியா விளையாட்டுப் போட்டி, பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி உட்பட பல பதக்கங்களை வென்றுள்ளார்.

அப்போதும் சர்வதேச விதிமுறைப்படி இதுபோன்ற பல மருத்துவப் பரிசோதனைகள் அவருக்கு நடத்தப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் அவரது பெண்மை தன்மை குறித்து எந்தவித ஐயப்பாடும் எழுந்ததில்லை.

தோஹா அதிகாரிகளின் இந்த ஐயப்பாடு சாந்தியின் பெண்மைக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக உள்ளது.

கிராமப் பகுதியில் பிறந்து வளர்ந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் சாந்தியிடமிருந்து பதக்கத்தை பறிக்க தோஹா அதிகாரிகள் முயற்சிப்பதாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தலித் அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதைக் கண்டித்து புதுக்கோட்டை புதிய ஸ்டான்ட் பகுதியில் தோஹா அதிகாரிகளின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற திராவிடர் விழிப்புணர்ச்சிக் கழக செயலாளர் நாடிமுத்து, எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்க பொதுச்செயலாளர் பரமசிவம், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் மாயவன், அலெக்ஸ் நடிகர்மன்ற மாவட்டச் செயலாளர் வேம்பரசன், நகர பொருளாளர் பொற்பனையான், தே.மு.தி.க., தொழிற்சங்க செயலாளர் அழகேசன் ஆகியோரை கணேஷ்நகர் போலீஸார் கைது செய்தனர்.

*******************************

தேனுங்க கத்தார் கவுண்டரே!

அம்மிணி சாந்தி முழுசா போம்பிளெ இல்லைன்னு தோஹா வெளயாட்டுக் கமிட்டி சொல்லிச்சுங்களாமா.

ஆனா பாருங்க இந்த தினமலர், அம்மிணி தலித்துங்கறதினாலெதான் வெள்ளி பதக்கத்தெ பறிச்சாங்கண்ணு எழுத.

நெசமாங்களா? கத்தர் அரபிங்களும் தலித்துங்களெ அடெயாளம் கண்டுபிடிப்பாங்களா?

2 comments:

புலமாடன் said...

புதுக்கோட்டை சாந்தி!

கடந்த வாரம் முழுக்க இந்தப் பெயரும், இவரது புகைப்படங்களும்தான் அனைத்து மீடியாக்களிலும் நீக்கமற நிறைந்திருந்தன. கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான எண்ணூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று, அனைவரது புருவங்களையும் ஆச்சரியத்தால் விரியவைத்ததுதான் இத்தனைக்கும் காரணம்.

இந்திய ரசிகர்களும், தமிழக மக்களும் போட்டி போட்டுக் கொண்டு சாந்தியைக் கொண்டாடினார்கள். தொடர்ச்சியாகப் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்த இவருக்கு, தோள்தட்டிக் கொடுக்கும் விதமாக, பதினைந்து லட்ச ரூபாயைப் பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது தமிழக அரசு. இப்படி இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பி.டி.உஷா கிடைத்துவிட்டார் என்று குதூகலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்தான், இந்திய ரசிகர்களை இடியாய்த் தாக்கியது ஒரு செய்தி.

“பதக்கம் வென்ற சாந்திக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் உண்மையிலேயே பெண்தானா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது’’ என்பதே அந்தச் செய்தி.

உண்மையில் தோஹாவில் நடந்தது என்ன என்பது பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.

போட்டியில் பதக்கம் வென்ற பிறகு, சாந்தியுடன் போட்டியில் கலந்துகொண்ட வீராங்கனை ஒருவர், “சாந்தி, பெண் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. அவரது நடவடிக்கைகள் எல்லாம் ஆண்களுக்கு உரியதாகவே இருக்கிறது. ஆகவே, இதுகுறித்து சோதனை நடத்தவேண்டும்’’ என போட்டி அதிகாரிகளிடம் புகார் கூறியிருக்கிறார்.

இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், உடனடியாக இந்தப் போட்டிகளுக்கென நியமிக்கப்பட்ட மருத்துவக்குழுவைச் சேர்ந்தவர்களுக்குத் தகவல் கொடுத்து, சாந்தியைப் பாலினச் சோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். இந்தக் குழுவில் ஒரு மகப்பேறு மருத்துவர் (கைனகாலஜிஸ்ட்), மனநல மருத்துவர், உட்கொள்ளும் மருந்துகள் தொடர்பான சிறப்பு மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் இடம் பெற்றிருப்பார்கள்.

ஊக்க மருந்து சோதனை பொதுவாக எல்லா வீரர்களுக்குமே நடத்தப்படும். ஆனால், இந்தப் பாலினச் சோதனை என்பது யாராவது சந்தேகம் எழுப்பினால் மட்டுமே நடத்தப்படும்.

இந்தப் பாலினச் சோதனை என்பது சம்பந்தப்பட்ட நபரின் பிறப்பில் ஏதேனும் குறைபாடு இருக்கிறதா? அந்தப் பாலினத்துக்கே உரித்தான குரோமோசோம்கள் சரியாக இருக்கின்றனவா? செயல்படுகின்றனவா? ஹார்மோன்கள் உரிய அளவில் சுரக்கின்றனவா என்பதைப் பரிசோதிக்கும் வகையில் நடத்தப்படும்.

இந்தச் சோதனையின் முடிவில் ‘‘சாந்திக்கு பெண்களுக்கென்று பிரத்யேகமாகச் சுரக்கின்ற ஹார்மோன்கள் திருப்தியான அளவில் இல்லை. பெண்ணுக்குரிய குணாதிசயங்களில் சில குறைபாடுகள் உள்ளன. ஆகவே, அவர் உண்மையிலேயே பெண்தானா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது’’ என்கிற தகவலைச் சோதனை அறிக்கையாக மருத்துவக்குழு போட்டி நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளது. இந்தத் தகவலை ஆசிய விளையாட்டுப் போட்டி நிர்வாகம் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அனுப்பியுள்ளது. மேலும் ‘‘இந்தக் குறைபாடு சாந்திக்கு இருக்கிறது என்பது இந்திய விளையாட்டு அதிகாரிகளுக்கு ஏற்கெனவே தெரியும்’’ என்றும் கூறியுள்ளது.

இது ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் கலந்துகொண்டு, பல சோதனைகளையும் கடந்து சாதித்துள்ள பெண், சாந்தி. ஆகவே, இந்தப் பரிசோதனை நடத்தப்பட்ட விதத்திலும், குற்றச்சாட்டுக் கூறிய விதத்திலும் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே, இந்திய விளையாட்டுத்துறை நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

‘‘இந்த விவகாரத்தில் சாந்தியைக் குற்றம் சாட்டுவது மிகப்பெரிய தவறு. போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்னரே, இதுபோன்ற சோதனைகளை நடத்தியிருக்க வேண்டும் என்று கூறுகிறார், முன்னாள் வீராங்கனை பி.டி.உஷா. ஆனால், இந்தப் பாலினச் சோதனை சாந்திக்கு நடத்தப்பட்டு, அதில் தேறிய பின்னர்தான் போட்டியில் கலந்துகொள்ளவே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிறது இந்திய விளையாட்டு நிர்வாகம்.

சாந்தியின் மீதான சர்ச்சையையடுத்து, அவரது சொந்த ஊரான கத்தக்குறிச்சிக்கு நாம் விரைந்தோம்.

கத்தக்குறிச்சி உள்பட வழியில் உள்ள கிராம பேருந்து நிறுத்தங்களில் மக்கள், அதிலும் குறிப்பாக, இளைஞர்கள் கூடி நின்று என்ன நடக்கும் என்பது பற்றிக் கவலையோடு விவாதித்துக் கொண்டிருந்தனர்.

கத்தக்குறிச்சியில் சாந்தியின் வீட்டில் சாந்தியின் தங்கைகளும் தம்பியும் மட்டுமே இருந்தனர். அம்மாவும் அப்பாவும் சாந்தியை வரவேற்க சென்னை போயிருந்தனர். ஒரு துக்க வீட்டின் அடையாளத்துடன் பலரும் வந்து விசாரிப்பதும், ஆறுதல் சொல்வதுமாக இருந்தது வீடு. அத்தை ராஜம்மாள் கவலையுடன் கண்ணீர் விட்டே அழுது விட்டார். “அரிமளம் ஆஸ்பத்திரியில பொறந்த புள்ளைக்கு, பொம்பள புள்ளன்னு சர்ட்டிஃபிகேட்டே இருக்கு. சிலோன், கொரியா, பாங்காக் எல்லாம் போயிட்டு ஜெயிச்சு வந்தாளே, அப்போல்லாம் இப்படி ஒரு பிரச்னை இல்லியே. இங்க பெரிய பாராட்டு விழாவுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணினாங்களே...’’ என்றவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

பக்கத்தில் இருந்த ஜெயக்கொடி என்ற பெண்மணி, “ஒரே அதிர்ச்சியா இருக்கு... இங்க வர்ற நேரத்துலயும் பயிற்சி எடுக்குறேன், பயிற்சி எடுக்குறேன்னு ஓடிக்கிட்டே இருக்கும். போன திங்கள் கிழமை ஒரு நல்ல சேதிய சொல்லிட்டு, இந்த ஞாயித்துக் கிழமை ஒருகெட்ட சேதியவும் சொல்லிப்புட்டாங்க’’ என்று சொல்லி வருத்தப்பட்டார்.

நாம் சாந்தியின் சகோதரிகள் ஜானகியையும் சரளாவையும் தனியே அழைத்துப் போய் ‘சாந்தி வயசுக்கு வந்தது எப்போ?’ என்று கேட்டோம். “அது எங்களுக்குத் தெரியாது. நாங்க அப்ப சின்னப் புள்ளைங்க... எங்களுக்கு வெவரம் தெரியுற வயசுல அக்கா எங்ககூட இல்ல. கடைசியா அது வந்தே ஒரு வருசம் ஆவுது. எங்க பாட்டி செத்ததுக்கே வரலை’’ என்றனர் வருத்தத்துடன்.

அவர்களைச் சந்தித்து விட்டு, புதுக்கோட்டை வந்தோம். எம்.ஜி.ஆர். மக்கள் இயக்கம், தே.மு.தி.க. போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் புதிய பேருந்து நிலையம் அருகே ஆசிய விளையாட்டுத் துறை நிர்வாகியின் உருவ பொம்மையை எரிக்க முயல, அவர்களை மடக்கிப் பிடித்து, கைது செய்தது காவல்துறை. புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல்நிலையத்தில் அமர வைக்கப்பட்டிருந்த அவர்களிடம் பேசினோம். ‘‘இதற்கு முன்னர் இதே பெண் பல மெடல்களை வாங்கியபோது இல்லாத பிரச்னை, இப்ப மட்டும் எப்படி வந்துச்சு? அதுகூடப் பரவாயில்ல. இப்ப அந்தப் பொண்ணை ஏதோ அரவாணி மாதிரி சொல்லுறது வேதனையா இருக்கு. தமிழக வீராங்கனை, அதுவும் தாழ்த்தப்பட்ட பெண்ணுங்கிறதுனாலேயே வஞ்சிக்கப்படுதான்னு எங்களுக்குத் தெரிஞ்சாகணும்...’’ என்றனர் நம்மிடம்.

அடுத்து திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை செய்துவரும், சாந்தியின் முன்னாள் கோச் லோகநாதனிடம் பேசினோம்.

‘‘ஏற்கெனவே ஒருதடவை இதே மாதிரி பிரச்னை வந்தப்போ, சாந்தியோட அம்மாவைக் கூப்பிட்டு கேட்டேன். ‘சாந்தி வயசுக்கு வந்து, பத்திரிகை அடிச்சு விசேஷம் வச்சோம்’னு சொன்னாங்க’’ என்றார்.

இதற்கிடையே சாந்தியின் பதக்கம் பறிபோவது உறுதியாகிவிட்டது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் பரிந்துரை செய்ய, இந்திய ஒலிம்பிக் சங்கம் அதை ஏற்று பதக்கத்தை திரும்பப் பெற்றுத் தரும்படி இந்திய தடகள கூட்டமைப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சாந்தி விவகாரம் குறித்து விசாரித்து இந்திய ஒலிம்பிக் சங்க மருத்துவக் கமிஷன் தலைவர் மன்மோகன்சிங் 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்.

ஏற்கெனவே இந்திய வீராங்கனைகள் அனுசூயா பாய், நானிராதா, தமிழகத்தின் சோலைமதி, பாண்டீஸ்வரி ஆகியோர் பாலின சோதனையில் தவறி பதக்கத்தை இழந்திருக்கிறார்கள்.

என்றாலும் ‘‘என் மனசாட்சிப்படி நான் எந்தத் தவறும் செய்ய வில்லை’’ என்பதே சாந்தியின் அந்தராத்மா தற்போது கூறும் செய்தி.

முதல்வர் தந்த உர்ச்சாகம்

இதற்கிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரிடம் பரிசு பெற வந்த சாந்தி, மற்ற இரண்டு வீரர்களைப்போல் உற்சாகமாக இருக்கவில்லை. வாடிப்போய் இருந்தார். கலைஞர் இதைப் புரிந்து கொண்டாரோ என்னவோ? ‘‘என்னம்மா நீ பெண்தானே?அதில் உனக்கு நம்பிக்கை இருக்கில்லே? பிறகென்ன?’’ என ஜாலி மூடில் பேசி, சாந்தியை உற்சாகப்படுத்தினார்.

பரிசுத் தொகையை வழங்கிய பிறகு, அருகிலிருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பெரிய கலர் டி.வி. பார்சலை காட்டி, ‘‘இந்த அளவு டி.வி.யை உங்கள் வீட்டில் வைத்துப் பார்க்க வசதி இருக்கிறதா?’’ எனக் கேட்க, அப்போதும் சாந்தி ‘இல்லை’ என்று தயக்கத்தோடுதான் கூறினார்.

அதன் பின் கலைஞர், ‘‘பதக்கத்தை யாராவது கேட்டால் கொடுத்து விடாதே! கேட்டு வற்புறுத்தினால் பதக்கம் என்னிடம் இருப்பதாகச் சொல்’’ என்று சாந்திக்குத் தைரியமூட்டினார்.

தொடர்ந்து வெளியே வந்த சாந்தியை பத்திரிகையாளர்கள் கேள்விகளால் கொத்தத் தொடங்கினார்கள். ‘‘நான் முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். வெற்றியும் என்னிடம்தான் இருக்கிறது. பதக்கமும் என்னிடம் தானிருக்கிறது. அதற்கு நான் தகுதியற்றவள் என்று அதிகாரபூர்வமான எந்த அறிவிப்பும் வரவில்லை’’ என்று பதில் கூறினார் சாந்தி.

தொடர்ந்து பத்திரிகையாளர்கள் முற்றுகைக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கானும் ஆளானார். ‘சர்ச்சையிலிருக்கும்போது எப்படிப் பரிசு கொடுக்கலாம்’ என்று ஒருவர் கேள்வியை விடாமல் தொடுக்க,

‘‘இத பாருங்க. இந்தப் பரிசு அறிவிப்பு நான்கு நாளுக்கு முன்பாகவே அறிவித்தது. இந்த நிமிடம் வரை தமிழக அரசுக்கோ, தமிழக விளையாட்டுத்துறைக்கோ முறைப்படியான எந்தத் தகவலும் அங்கிருந்து வரவில்லை. அப்படியிருக்கும் போது, நிறுத்த முடியாதே!’’ என்றவர் ‘‘தமிழகப் பெண் உலகளவில் ஓடிப் பரிசு பெற்றதை நாமெல்லாம் உற்சாகப்படுத்த வேண்டுமே ஒழிய, முடிவு தெரியாமல் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடாது. சாந்திக்கு தமிழக அரசு தொடர்ந்து உற்சாகத்தைக் கொடுக்கும். உதவியாக இருக்கும்’’ என்றார் அவர்.

‘‘சாந்தியின் பதக்கம் பறிக்கப்படுமா? என்ற கேள்வி பரபரப்பாக எழுந்துள்ள நிலையில், தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியின், தடகளப் பிரிவின் தொழில்நுட்ப கமிட்டி உறுப்பினர் வல்சனிடம் கேட்டபோது அவர், ‘‘போட்டியில் வென்ற வீரர் அல்லது வீராங்கனைக்கு ஹார்மோன் குறைபாடு இருந்தால், அதற்காக அவரது பதக்கத்தைப் பறிக்க முடியாது. அடுத்த சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்ள தடை வேண்டுமானால் விதிக்கலாம். தோஹாவில் இருந்து இதுபற்றி தமிழ்நாடு தடகள சங்கத்திற்கோ, இந்தியத் தடகள சங்கத்திற்கோ இதுவரை எந்தக் கடிதமும் வரவில்லை’’ என்றார்.

படங்கள்: சுதாகர், ஆனந்த்.
ஸீ ஆர். முத்துக்குமார், பா. ஏகலைவன், ஷானு

குமுதம்- 24/12/2006

முஸ்லிம் said...

புலமாடன் உங்கள் வரவுக்கும் நீண்ட தகவல்களை மறுமொழியில் பகிர்ந்தமைக்கும் நன்றிகள்.