Friday, December 29, 2006

குடியும் குடுத்தனமும்.

இஸ்லாமிய சட்டப்படி கணவன்_மனைவி இடையேயான திருமண பந்தத்தை முறைப்படி முடிவுக்குக் கொண்டுவரும் 'தலாக்' என்ற வார்த்தையை, குடிபோதையில் உளறிக் கொட்டிவிட்டு, குடும்பத்தோடு சேர முடியாமல் நடுத்தெருவில் நிற்கிறார் ஓர் அப்பாவி. இவருக்கு ஏற்பட்டுள்ள இந்த அனுபவம், இவரது குடும்பத்தை மட்டுமின்றி நாடு முழுக்க உள்ள இஸ்லாமிய சமூகத்தவரிடையே தாக்கத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பர்போதி கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது அக்தர். குடிப்பழக்கம் உடைய அக்தர், தன் மனைவி சகினாவுடன் அவ்வப்போது வாய்த் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இருபது நாட்களுக்கு முன்பு ஓர் இரவில் கொஞ்சம் அதிகமாகவே குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்ய, பக்கத்து வீட்டுக்காரர்களும் இவர்கள் வீட்டு முன்பு கூடிவிட்டார்கள்.

அக்தரின் போதை அதிகமானதால் டென்ஷனான மனைவியும் சூடாகி சப்தம் போட, கோபம் தலைக்கேறிய அக்தர், மனைவியைப் பார்த்து ''தலாக்.. தலாக்.. தலாக்..'' என்று மூன்று முறை சொல்லிவிட்டார். சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க, யாரோ ஒருவர் லோக்கல் மௌலவியான (முஸ்லிம் திருமணப் பதிவு மற்றும் முறிவு விவரங்களைப் பதிவு செய்யும் அதிகாரம் படைத்தவர்) இம்மானுல் ஹக் கானுக்குத் தகவல் சொல்லிவிட்டார்.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இம்மானுல் ஹக், நடந்த விஷயம் பற்றிக் கேட்டறிந்து 'அக்தர் தலாக் சொன்னது இஸ்லாமிய சட்டப்படி செல்லுபடியான ஒன்றுதான். எனவே, மனைவி சகினாவைப் பிரிந்துதான் இனி அவர் வாழவேண்டும்!'' என்று தீர்ப்பளித்து அதைப் பதிவும் செய்து கொண்டார்.

அடுத்த நாள் காலையில் போதை தெளிந்த அக்தர், நடந்தவற்றைக் கேள்விப்பட்டு, துடிக்க ஆரம்பித்துவிட்டார். ''போதையில் நான் என்ன சொன்னேன் என்றே தெரியவில்லை. தலாக்கை எத்தனை முறை சொன்னேன் என்பதுகூட நினைவில்லை. ஆனால் நான் மூன்று முறை சொன்னதாகக் கிராமத்தினர் வலியுறுத்திச் சொல்கிறார்கள். என் மனைவியையும் அதை ஒப்புக்கொள்ளச் சொல்லி நிர்ப்பந்திக்கிறார்கள்.

நான் மூன்று முறை தலாக் சொன்னதாகவே வைத்துக் கொண்டாலும், அதை நான் போதையில் சொன்னதை எல்லோரும் அறிவார்கள். எனவே, அதை மன்னித்து, என்னை என் மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்.'', என்கிறார் கதறி அழுதபடி. அவர் சொன்ன வார்த்தைகளை கிராமத்தினர் யாரும் காதில் வாங்கவில்லை.

''அவர் குடிபோதையில்தான் தலாக் சொன்னார். என்னைப் பிரியும் நோக்கம் அவருக்கு இல்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து வாழவே விரும்புகிறோம். ஆனால் சமூகக் கட்டுப்பாட்டுக்குப் பயந்து தனியாக வாழவேண்டியுள்ளது. எங்கள் நிலையை உணர்ந்து, அவரை மன்னிக்க வேண்டும்!'' என்று சகினா விடுத்த வேண்டுகோளுக்கும் இன்றுவரை பாஸிடிவான பதில் கிடைக்கவில்லை.

'சேர்ந்து வாழ்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. மூன்றுமுறை தலாக் சொன்ன அந்தக் கணமே விவாகரத்து அமலுக்கு வந்துவிடுகிறது. மதுவை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஆனால் குடித்துவிட்டு தலாக் சொன்னாலும், அது விவாகரத்து என்றே ஏற்றுக்கொள்ளப்படும்!'' என்று மௌலவி இம்மானுவேல் ஹக் தனது இறுதித்தீர்ப்பையும் சொல்லிவிட, அதன் பிறகுதான் நாடு தழுவிய சர்ச்சையும் ஆரம்பமானது.

இஸ்லாமிய பழைமைவாதிகள் நிறைந்த இந்த ஊரில், மதப் பெரியவர்கள் என்று சொல்லப்படும் சிலர் ஒரு யோசனையைச் சொல்லியிருக்கிறார்கள். 'அக்தர், விவாகரத்தான தன் மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டுமானால், சகினா இன்னொருவரைத் திருமணம் செய்து, அவரையும் விவாகரத்து செய்ய வேண்டும். அதன்படியே அக்தர் சகினாவை மீண்டும் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ முடியும்'', என்பதுதான் அந்த யோசனை.

சம்பவம் நடந்த நாளிலிருந்தே தான் வைத்திருக்கும் டெய்லரிங் கடையில் தனியாகக் குடியிருந்து வரும் அக்தர் இதைக் கேட்டுக் கொதித்துப் போனார். 'இவர்கள் சொல்வது மாதிரி, சகினா இன்னொரு திருமணம் செய்வது நடந்தால், நான் தற்கொலை செய்து கொள்வேன்!' என்றும் சொல்லிவருகிறார் அக்தர்.

ஒரு கிராமத்துக்குள் நடந்த இந்த வாதப் பிரதி வாதங்கள்தான் இன்று நாடு முழுக்க ஒரு விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்லாமிய சட்டப்படியே பார்த்தாலும், தன் மனைவியைப் பிரிய நினைக்கும் அவர் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மூன்றுமுறை 'தலாக்' சொல்ல முடியாது.

'தலாக்' சொன்ன பிறகு இத்தா காலம் எனப்படும் கரு அறியும் காலம் வரை (மூன்று மாதங்கள்) காத்திருக்க வேண்டும். அந்த நேரத்திலும் கணவன், மனைவி ஒரே வீட்டில் வசிக்கலாம். மூன்று மாத முடிவில் மத்தியஸ்தர்கள் மூலமாக சமாதானம் ஏற்படுத்த முயற்சிப்பதையும் அனுமதிக்கிறது இஸ்லாம். சமாதானம் ஏற்பட்டால் நடந்ததை மறந்து சேர்ந்து வாழலாம்.

இந்தப் பிரிவுகள் மற்றும் சமாதானங்கள் நடக்கும்போது, இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் இருவர் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. விதிமுறைகள் இப்படி இருக்க, இதில் எதையும் கடைப்பிடிக்காமல், தவறுதலாக அக்தர் சொன்ன தலாக்கை ஏற்று இருவரையும் பிரித்து வைத்திருப்பதைக் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள், பெண்ணுரிமையை நிலைநாட்ட விரும்பும் இஸ்லாமிய சமூகத்தினர் பலரும். தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் முன்னாள் தலைவரும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஃபதர் சயீத், இந்த சம்பவத்தைக் கடுமையாக எதிர்க்கிறார். ''லோக்கல் மௌலவி செய்தது இஸ்லாமிய சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது. தலாக் சொன்ன பிறகு மூன்று மாதம் கால அவகாசம் தரவேண்டும். மனப்பிணக்கைச் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். சமாதானம் ஏற்பட்டால் சேர்த்து வைக்கலாம் என்றெல்லாம் உச்சநீதிமன்றமே பலமுறை தெளிவுபடுத்தி தீர்வுகளை வழங்கியிருக்கிறது. இஸ்லாமிய சட்டமும் அதைத்தான் சொல்கிறது.

இதை மனதில் கொள்ளாமல் அவசரக் கோலத்தில், குடியின்பிடியில் சொல்லப்பட்ட தலாக்கை ஏற்றுக்கொண்டதாகச் சொல்வது தவறான நடவடிக்கை. என்னைப் பொறுத்தவரை அக்தரும், சகினாவும் சேர்ந்தே வாழலாம். அவர்கள் இருவருக்கும் அதற்கு ஆசை இருக்கும் போது, பிரிந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. இஸ்லாத்தின் மீது உண்மையான பற்றுக்கொண்ட யாருமே லோக்கல் மௌலவி செய்துள்ள காரியத்தை ஆதரிக்க மாட்டார்கள். ஆதரிக்கவும் கூடாது!'' என்று உறுதியான குரலில் சொன்னார் ஃபதர் சயீத்.

இஸ்லாமியப் பெண்களின், உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதிலும், அதுகுறித்த கருத்துக்களை வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் சொல்லும் கவிஞர் சல்மாவும் இதே கருத்தைத்தான் சொல்கிறார். ''ஒவ்வொரு தலாக்குக்கும் ஒரு மாத இடைவெளி இருக்க வேண்டியது அவசியம். ஒரே நேரத்தில் மூன்று முறை சொன்னால் அதை இஸ்லாமிய சட்டப்படி விவாகரத்தாகக் கருத முடியாது.

இஸ்லாமிய நாடுகளில் 'தலாக்' முறையை விதிமுறைகளின் படியே கடைப்பிடிக்கிறார்கள். அதனால், அங்கு இதுமாதிரி தவறான முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. இஸ்லாத்தை சரியாகப் புரிந்துகொள்ளாத பழைமைவாதிகளால்தான் இந்தியாவில் இதுமாதிரியான சர்ச்சைகள் எழுகின்றன. மதத்தை வழி நடத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் சில மதப் பெரியவர்களே இப்படிச் செய்வது இஸ்லாத்துக்கும், இஸ்லாமிய பெண்களுக்கும் எதிரான காரியமாகும்.

இது மாதிரி தவறுகள் நடக்கும்போது அதைச் சுட்டிக்காட்டிக் கொண்டேதான் இருக்கிறோம். இஸ்லாமிய சட்டப்படி பெண்களுக்கு உள்ள உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு, இச் சமூகப் பெண்களிடம் இன்னும் அதிகமாகப் பரவ வேண்டி உள்ளது. அந்த விழிப்புணர்வைப் பெறாதவரை இது மாதிரியான ஆணாதிக்க விளைவுகளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

ஆனாலும் இது மாதிரி மதத்தைத் தவறாக அணுகுவோருக்கு மதம் துணை போகாது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனவே அக்தரும், சகினாவும் தவறான தீர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு சேர்ந்தே வாழலாம். சமூகத்தின் பெயரைச்சொல்லி, யாராவது துன்புறுத்த நினைத்தால், பாதுகாப்புக் கேட்டு போலீஸ§க்குப் போவதிலும் தவறில்லை,'' என்று ஆவேசப்பட்டார் சல்மா.

இந்த வாதப் பிரதிவாதங்கள் குறித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச் ஜவாஹிருல்லாவிடம் பேசினோம். ''அக்தரின் விஷயத்திற்குள் போகும் முன்பாக ஒரு கருத்தைச் சொல்லிவிடுகிறேன். இந்தியாவில் சமீபகாலமாக முஸ்லிம்கள் விஷயத்தில் பாரபட்சமான போக்கையே ஊடகங்கள் கடைப்பிடிக்கின்றன. சின்ன விஷயங்களைக்கூட, தேசியப் பிரச்னைபோலக் காட்டி விவாதத்தைக் கிளப்புகிறார்கள். இது முஸ்லிம் சமுதாயத்தின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் முயற்சி. ஊடகங்களின் ஒரு பிரிவினர் செய்யும் இந்தக் காரியங்களால் முஸ்லிம்களின் மனம் ரணமாக்கப்பட்டிருக்கிறது. இனி பிரச்னைக்குள் வருகிறேன். தொழுகைக்குப் போகும்போது, மது அருந்திவிட்டுப் போகக்கூடாது என்று வலியுறுத்துகிறது திருக்குரான். குடித்து, சுய நினைவு இழந்த நிலையில் செய்யப்படும் தொழுகையை அங்கீகரிக்க முடியாது என்பதால்தான் அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே, குடித்துவிட்டு மூன்றுமுறை அல்ல... முந்நூறு முறை தலாக் சொன்னாலும் அது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது அல்ல.

அக்தர் விஷயத்தில் நடந்த விஷயங்கள்அனைத்தையும் ஊடகங்கள் சரியாக வெளிக்கொண்டு வந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால் இது மாதிரி நடந்திருக்குமானால் அது தவறுதான்.

திருமணம், பிரிவு, வாழ்க்கை முறை என்று எல்லா விஷயங்களைப் பற்றியும் இஸ்லாமியச் சட்டம் தெளிவாக எடுத்துச் சொல்லுகிறது. ஒரு சிலர் விதிவிலக்காக மனம் போனபடி செயல்படுகிறார்கள் என்பதற்காக, இந்த மதத்தையே ஒட்டுமொத்தமாகக் குறை சொல்ல யாரேனும் முற்பட்டால் அதை ஏற்க முடியாது.

குடும்ப நல நீதிமன்றங்களில் இன்று நிலுவையில் உள்ள வழக்குகளைப் பாருங்கள்... முஸ்லிம் சமுதாயத்தவரின் வழக்குகள் அதில் குறைவாகவே இருக்கும். இந்தச் சமுதாயத்தில் அதுமாதிரியான பிரச்னைகள் குறைவு என்பதற்கு இதுவே சாட்சி . இந்த நிலையில், இம்மதத்தின் செயல்பாடுகளை பழைமைவாதிகள், புதுமைவாதிகள் என்று பிரித்துப் பார்ப்பது தவறான செயலாகும்!'' என்று சொல்லி முடித்துக் கொண்டார் ஜவாஹிருல்லா.

இதற்கிடையில் அக்தரின் நிலைமை பற்றி அறிந்த 'அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம்' மேல் விசாரணைக்காக அக்தரை வரவழைத்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

''எவரேனும் அறியாமையின் காரணமாக யாதொரு தீமையைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக வருந்தி, அதிலிருந்து விலகி சீர்திருத்திக்கொண்டால் அவனுடைய குற்றங்களை இறைவன் மன்னித்து விடுவான். ஏனென்றால், மிக மன்னிப்போனும் கிருபையடையவனுமாக அல்லாஹ் இருக்கின்றான்'' என்ற குரான் வாசகத்திற்கு ஓர் அர்த்தம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த விசாரணையை எதிர்கொண்டிருக்கிறார் அக்தர்.

நன்றிங்க

போதைப் பொருள் அனைத்தும் ஹராம் என்று இஸ்லாம் தடுத்திருத்திக்க போதைக்கு அடிமையாகிய முஹம்மது அக்தரை செருப்பால் அடித்து அதே கையோடு 'இம்மானுல் ஹக் கான்' என்ற அடி முட்டாள் மத புரோகிதரையும் நாலு சாத்து சாத்த வேண்டும். இஸ்லாத்தை விளங்காத இந்தப் புரோகிதர்களால் முஸ்லிம் சமூகத்துக்கு இழுக்கு.

போதையிலுள்ளவன் மற்றும் நிர்ப்பந்திக்கப்பட்டவனின் மணவிலக்கு செல்லாது என்பதே இஸ்லாத்தின் ஷரியாவிலிருந்து பெறப்படும் சட்டம்.

'எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், தவறுதலாக செய்திருப்பினும் எங்களைத் தண்டித்து விடாதே' (அல்குர்ஆன் 2:286)

No comments: