போலீசாரின் "வாடா...போடா'வுக்கு இனி "தடா' தரக்குறைவாக பேசினால் நடவடிக்கை பாயும்.
கோவை:
"மக்களிடம் மரியாதையின்றி பேசும் போலீசார் மீது கடும் நடவடிக்கை பாயும். இச்செயல் சட்ட விரோதமானது மட்டுமல்ல; அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பானது,''என தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.
"காவலர்கள் பொதுமக்களின் நண்பர்கள்' திட்ட துவக்க விழா, கோவை சி.ஐ.டி., கல்லூரியில் நேற்று நடந்தது. இதில், மேற்கு மண்டல ஐ.ஜி.ராஜேந்திரன் பேசியதாவது:
"காவலர்கள் பொதுமக்களின் நண்பர்கள் திட்டம்' 275 போலீஸ் ஸ்டேஷன்களில் நாளை (இன்று) முதல் அமலுக்கு வருகிறது. புகார் பதிவு செய்ய ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தலா இரு வரவேற்பாளர்கள், புகார் பதிவு செய்யும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் போலீஸ் ஸ்டேஷன் செல்லலாம்.
இன்ஸ்பெக்டர் இல்லை, எஸ்.ஐ. இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். புகார் பதிவு செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் எப்.ஐ.ஆர்.நகல் வழங்கப்படும். அதன் பின் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை, நியாயமானதாக இருக்கும். இடைத்தரகர்களுக்கு செலவழிக்க வேண்டிய அவசியமிருக்காது. அதிகாரிகளை சந்திக்க, மக்கள் தவமிருக்க தேவையில்லை. இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் தினமும் காலை 8.30 முதல் 9.00 மணி, மாலை 7.00 முதல் 8.00 மணி வரை ஸ்டேஷனில் கட்டாயம் இருப்பர்.
போலீஸ் நடவடிக்கை திருப்தி இல்லை என்றால், உயர் அதிகாரிகளை சந்திக்கலாம். அதிகாரிகளுக்கு நம்பிக்கையான நபர்களை கொண்டு போலீசாரின் செயல் உளவு பார்க்கப்படும். இதற்கான பணியை எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி.,க்கள் மேற்கொள்வர். அவசியம் ஏற்பட்டால், ஐ.ஜி. அலுவலகமும் கவனிக்கும்.
"வாய்யா... போய்யா... வாடா...போடா...' என மரியாதையின்றி போலீசார் பேசக்கூடாது. "தற்கொலை' வழக்குகளில் தரகர்களுக்கு இடமளிக்காமல், உறவினர்களை துன்புறுத்தாமல் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். மக்களை மரியாதையுடன் நடத்தும் பொறுப்பு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்களை சாரும். இவர்களை கண்காணிக்க வேண்டியது டி.எஸ்.பி.க்களின் பொறுப்பு. இதில், தவறு நேர்ந்தால் கடுமையான நடவடிக்கையும், சிறப்பாக செயல்பட்டால் வெகுமதியும் வழங்கப்படும். ஏழைகளை அவமதிப்பதும், புறக்கணிப்பதும் சட்ட விரோதமானது மட்டுமல்ல அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பானது.
ஏழை, ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனில் மரியாதை குறைவாக நடத்தப்பட்டால், பணம் செலவழிக்கப்பட்டால், எப்.ஐ.ஆர்.வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை (3பி, சார்ஜ்) எடுக்கப்படும். உளவுப்பணியில் கோட்டை விட்ட, நுண்ணறிவுப்பிரிவு அதிகாரி மீதும் நடவடிக்கை பாயும்.
இவ்வாறு ஐ.ஜி.,ராஜேந்திரன் பேசினார்.
இக்கருத்தரங்கில் டி.ஐ.ஜி.க்கள் மஞ்சுநாதா(கோவை), அலெக்ஸாண்டர் மோகன்(சேலம்), சேலம் போலீஸ் கமிஷனர் கோபாலகிருஷ்ணன், எஸ்.பி.க்கள் துரைக்குமார் (கோவை), வித்யாகுல்கர்னி (நீலகிரி), பாஸ்கர்(சேலம்), தீபக் டமோர் (நாமக்கல்), ஜெயராம் (தர்மபுரி), தேன்மொழி (கிருஷ்ணகிரி) மற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட 400 போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நன்றிங்க-23/12/2006 தினமலர்.
பொது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல் துறையினரின் அலட்சியப் போக்கு காவல் துறை என்றாலே நீதி கேட்டு நெருங்க முடியாத அளவுக்கு மக்களை கிலி பிடிக்க வைத்து விட்டது. புகார் செய்வதற்கு காவல் நிலையத்தை அணுகினால் எடுத்த எடுப்பிலேயே தண்டம் அளந்து விட்டுத்தான் காவல் நிலைய படியைத் தாண்டி உள்ளே செல்ல முடிகிறது. காவல் துறை உங்கள் நண்பன் என்று எழுதிக் கொண்டு பொதுமக்களின் விரோதியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
புகார் செய்ய வருபவர்கள் மரியாதையாக நடத்தப்படுவதில்லை என்பதை அவர்களே சம்மதிக்கிறார்கள். இதெல்லாம் சட்ட விரோதமானது என்றும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பானது எனவும் இப்பொழுது தூசி தட்டுகிறது காவல் துறை. எப்படியோ ''காவல்துறை செய்தாலும் குற்றம் குற்றமே'' என நடவடிக்கை எடுத்தால் சரி.
''என் மீதா புகார் கொடுக்கிறாய் இரு இரு உன்னை கவனித்துக் கொள்கிறேன்'' என்று புகார் கொடுக்க வந்த அப்பாவியின் மீது சிறப்பு குண்டர் சட்டம் அல்லது தடுப்புக் காவல் சட்டம் அல்லது வகுப்புவாத பயங்கரவாதி என்று செக்ஷனை போட்டு உள்ளே வைக்காமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் "காவலர்கள் பொதுமக்களின் நண்பர்கள் திட்டம்'' வெறும் ஏட்டளவில் இருந்து காவல்துறை மீதான பொது மக்களின் அவநம்பிக்கை நீடிக்கும்.
No comments:
Post a Comment