Saturday, December 15, 2007

என்னதான் நடக்கிறது மலேசியாவில்...?

திரு. வீரபாண்டியன் (சன் டி.வி அரசியல் விமர்சகர்) சிங்கப்பூர் வானொலி முன்னாள் தயாரிப்பாளர்)

இந்தியாவைப் போலவே மலேஷியாவும் பிரிட்டிஷ் காலனி நாடாயிருந்தது. பின்னர் 1957 ஆகஸ்டில் விடுதலை பெற்றது. மலாயாவுக்கு (மலேஷியாவின் பழைய பெயர்) விடுதலை கொடுத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறும் போது, ஆங்கிலேயர்கள் ஒரு முக்கிய மான நிபந்தனையை விதித்தனர். 'உழைப்புக் கூலிகளாக இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் கொண்டு வரப்பட்டு மலாயா மண்ணையே தங்கள் வாழ்விடமாக ஏற்று வாழ்ந்து வரும் இந்திய, சீன வம்சா வழி மக்களுக்கும் பூர்வீக மலாய் மக்களைப் போல குடியுரிமை வழங்க வேண்டும்' என்பது தான் அந்த நிபந்தனை. மலாயாவின் அன்றைய தேசியத் தலைவர்கள் இதனை மனமுவந்து ஒப்புக் கொண்டனர். அதன்படி சுதந்திரத்துக்கு முன்னர் யார், யாரெல்லாம் மலாயாவில் வாழ்ந்து வந்தார்களோ அவர்கள் அனைவருக்கும் இனப் பாகுபாடின்றி குடியுரிமை வழங்கப்பட்டது.

பிரிட்டீஷ் ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்ட தமிழ் தொழிலா ளர்கள் ஏராளமான உரிமைகளையும் வாழ்க்கை வசதிகளையும், மேம்பாடு களையும் அடைந்து மேன்மையோடு வாழத் தலைப்பட்டனர். அந்த நாட்டின் பூர்வீகத் தாய்மொழியான மலாய் மொழி தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறவியிலேயே மொழி வல்லமை மிக்குடையவர்களான தமிழர்கள் மலாய் மொழியைக் கற்றுத் தேர்ந்து பூர்வீகக் குடிகளோடு இரண்டறக் கலந்தனர். பள்ளிகளில் சீனமொழியும், தமிழும் பாடமொழியாகப் பயிற்றுவிக்கப் பட்டது. சிறுபான்மைச் சமுதாயமான மலாய் அல்லாதார் தங்கள் மொழியை ஒரு பாடமாகப் பயில அனுமதிக்கப் பட்டனர். தமிழ் வானொலியும், தொலைக் காட்சியும் இருபத்து நான்கு மணிநேரமும் இன்னிசை முழங்கி இன்பத்தில் ஆழ்த்துகின்றன. திரையரங்குகளில் தமிழ்ப்படங்கள் கொடிகட்டிப் பறக் கின்றன. தமிழ்நாட்டுக் கலைஞர்களும், பேச்சாளர்களும் அடிக்கடி அங்கே சென்று பைந்தமிழ் முழங்கிப் பரவசப் படுத்தி விருந்துண்டு வெற்றியோடு திரும்புகின்றனர்.

இந்தியத் தமிழர்கள் ஏராளமானோர் இப்போது மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாவும் கொடிகட்டிப் பறக்கின்றனர். அந்த நாட்டின் மிகச் சிறந்த கல்விமான்களில் பலர் தமிழர்கள் என்பது உலகறிந்து உண்மை. நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் வார்த்தையில் சொல்வதாயிருந்தால் 'தாய் நாட்டுத் தமிழனை விட மலேஷியத் தமிழன் மகிழ்ச்சியாயிருக்கிறான்'. அந்தச் சின்னஞ்சிறு நாட்டில் வெளிவரும் தமிழ் நாளிதழ்களின் எண்ணிக்கை மட்டும் 3. தமிழ் வார இதழ்கள் ஆறும், மாத இதழ்கள் ஏழும் வெளிவருகின்றன. மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் மட்டும் 14க்கும் மேற்பட்ட திரையரங்கு களில் தமிழ்ப்படங்கள் திரையிடப்படு கின்றன. நாடு முழுவதும் ஏறத்தாழ 30 அரங்குகளில் தமிழ்ப்படங்கள் வருடம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

மலேஷியத் தமிழர்களின் நலனுக்காகவே தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் மலேஷிய இந்தியன் காங்கிரஸ் (ம.இ.கா) இதன் புகழ் பூத்த தலைவராயிருக்கும் டத்தோ ஸ்ரீ சாமிவேலு, அந்த நாட்டின் கேபினட் மந்திரியாயிருக்கிறார். இவரோடு திரு. பழனிவேலு போன்ற மேலும் மூன்று பேர் துணை அமைச்சர்களாயிருக்கின்றனர். இவர்களை அல்லாமல் 3 பேர் நாடாளு மன்ற உறுப்பினர்களாகயிருக்கின்றனர். சிற்றூர்களிலும், நகராட்சிகளிலும் பல முக்கியமான பொறுப்புகளைத் தமிழர்கள் வகிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். அந்த நாட்டின் தலைமை நீதிபதியாகவே 'அஜித் சிங்' என்னும் இந்தியர் பணியாற்றி ஓய்வு பெற்றார். மேலும் பலர் நீதிபதிகளாக இப்போதும் பணியாற்றுகின்றனர். நாடாளுமன்ற செயலர்களாக (parliment secreatary) நம்மவர்கள் பலர் சிறப்பாகச் செயலாற்றுகின்றனர்.

1965ஆம் ஆண்டு வரை ஒரு மாநில மாயிருந்த சிங்கப்பூர், தனி நாடாகப் பிரிந்து சென்றது. அது முதல் உலக வரைபடத்தில் சிங்கப்பூர் குபேரபுரியாகக் கோலோச்சத் தொடங்கியதைக் கூறத் தேவையில்லை. சிங்கப்பூரில் தமிழ் ஓர் அதிகார மொழியாக அங்கீகரிக்கப் பட்டது. நாணயத்தில் தமிழ் பொறிக்கப் பட்டது. சீனர்களுக்கு மட்டுமல்ல: எல்லா இன மக்களுக்கும் பொதுவான நாடு' என்று சிங்கப்பூர் பிரதமர் சொல்லி மகிழ்ந்தார். ஆனால், மலேசியா தனது மலாய் மொழியையே ஆட்சி மொழி யாக்கி அழகு பார்த்தது. அந்த மொழியைக் கற்றவர்கள் மட்டுமே அதிகாரத்துக்கும், அரசுப் பதவிகளுக்கும் வர முடியும் என்ற நிலை வந்தது.

மலேஷியாவின், மண்ணின் மைந்தர் கள் (பூமி புத்ரா) எனப் பூர்வீகக் குடிமக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டனர். அவர்கள்,
1. பரம்பரை, பரம்பரையாக மலேஷியா வில் வாழ்வோராயிருக்க வேண்டும்.
2. மலாய் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருக்க வேண்டும்.
3. இஸ்லாத்தைச் சேர்ந்தவர்களா யிருக்க வேண்டும்.
இந்த விதிகளுக்குள் வருவோர் மட்டுமே, 'பூமி புத்ரா' என அழைக்கப் படுவர். இந்த விதிகளை வகுத்ததோடு மட்டுமின்றி, மலேஷிய அரசாங்கம், தங்களுடைய நாட்டை ஓர் இஸ்லாமிய நாடு எனப் பிரகடனப்படுத்திக் கொண்டது. சட்ட பூர்வமான மத வழிப்பட்ட இஸ்லாமிய நாட்டில் அரசாங்கத்தின் மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே முன்னுரிமை பெறுவது உலகெங்கும் நடைமுறையில் உள்ளதுதான்.

நிலைமை இவ்வாறிருந்தும், பூர்வீகக் குடிமக்களான மலாய் மக்கள் மத்தியில் மன நிறைவு இல்லாமலிருந்தது. அதற்குக் காரணம் அந்தச் சமூக மக்கள் பெரும் பாலும் கடற்கரை ஓரங்களில் மீன்பிடித் தொழிலைச் செய்து படிப்பும், முன்னேற்ற முமில்லாமல் வாழ்ந்ததுதான். இயற்கையி லேயே ஊக்கம் மிகுந்த சமூகமான சீனர்களும் இந்தியர்களும் வர்த்தகத் திலும், வேலை வாய்ப்பிலும் மிக முன்னணிக்கு வரத் தொடங்கினர். பொதுத் தேர்தல்களில் நகர்ப் புறங்களில் சீனர்களே வெற்றி பெற்றனர். இவற்றைக் கண்ட மலாய் சமூகத்தினரை தங்கள் எதிர்காலம் பற்றிய அச்சம் ஆட் கொண்டது. கல்வியிலும், வேலை வாய்ப் பிலும் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வேண்டுமெனப் போராடினர்.

1969 ஆம் ஆண்டு மே 13 அன்று மலேசியாவில் மிகப்பெரிய இனக்கலவரம் வெடித்தது. பெரும்பான்மை மலாய் மக்களுக்கும், சீனர்களுக்கும் ரத்தவெறி கொண்ட யுத்தம் நடந்தது. தெரு வெல்லாம் பிணங்கள் விழுந்தன. இறுதியில் அரசாங்கம் மலாய் மக்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 30 விழுக்காடு இட ஒதுக் கீட்டைச் செய்தது. 26 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் எட்டு விழுக்காட்டினராயிருக்கும் இந்தியர் களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் 4 சதவீதம் ஒதுக்கியது மலேசிய அரசு. கலவரம் நடந்த அந்த நாளை இன்று வரை மலேசிய வரலாற்றில் 'கறுப்பு நாள்' என்று அழைக்கின்றனர்.

போராட்ட உணர்ச்சியோடு போர்க் கோலம் பூண்ட பூர்வீகக் குடிமக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்த மலேசிய அரசு, இந்திய சீன சிறுபான்மை மக்களுக்கும் நியாயம் வழங்கித்தானிருக்கிறது. இலங்கையைப் போலவோ, ஏனைய உலக நாடுகளில் தமிழர்களுக்கு நிகழ்ந்ததைப் போலவோ 'இன ஒதுக்கல்' எதுவும் அங்கே நடைபெறவில்லை. திரைகடலோடித் திரவியம் தேடச் சென்ற நமது தமிழர்கள் இன்று வரை இங்கே வந்து போய்க் கொண்டிருக்கின்றனர். சம்பாதிக்கிற செல்வத்தைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் தான் சொத்துகளை வாங்குகின்றனர். கூத்தாநல்லூர், கடைய நல்லூர், தோப்புத்துறை போன்ற வட்டாரத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் தமிழ் மண்ணுக்கு ஏராளமான வருவாயை ஈட்டிக் கொடுக்கின்றனர். அந்த நாட்டில் சம்பாதிப்பதை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது என்கிற எந்த நிபந்தனையும் மலேசிய அரசு விதிப்பதில்லை என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இதுதான் மலேஷியாவின் பூர்வ கதை. இப்போது அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இனி நாம் சற்று ஆழமாய்ப் பார்ப்போம்.

மலேஷியாவின் பிரதானமான தொழிலாய் இருந்த ரப்பர் தோட்டங்கள் லாபகரமாய் இல்லாததால், அவை இப்போது செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன. பல தனியார் தோட்டங்கள் அரசுடைமையாக்கப் படுகின்றன. அவ்வாறு அரசுடைமையாக் கப்படும்போது அங்கே குடியிருப்பு வசதிகளை அரசே செய்து கொடுக்கிறது. அந்த இடத்தில் இருந்த கோவில்களோ, பள்ளிவாசல்களோ அகற்றப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. புதிய குடியிருப்புகளில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைத் தொழிலாளர்கள் அமைத்துக் கொள்ள அரசு அறிவுறுத்தியது. பத்து கோவில்கள் இருந்த இடத்தில் ஒரே ஒரு கோவிலுக்கு இடம் கொடுப்பதாக அரசு சொல்கிறது.

உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லாத இஸ்லாமிய அரசு, உருவ வழிபாடு கொண்ட இந்து சமயக் கோவில்களைத் தடை செய்ததில்லை. 'செந்தூர் முருகன்' கோவிலும், 'பத்துமலை முருகன் கோவிலு'ம் தைப்பூசவிழா கொண்டாடி மகிழ்கின்றன. நாடெங்கும் ஏராளமான சிறுதெய்வ வழிபாட்டுக் கோவில்களும் பரந்து காணப்படுகின்றன. 59 சதவீத மலாய் முஸ்லிம்கள் இருக்கும் நாட்டில் 4,000 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் 8 சதவீத இந்தியர்கள் வாழும் நாட்டில் 17,000 இந்துக் கோவில்கள் அனுமதிக்கப் பட்டிருக்கின்றன என்பது உன்னதமான வரலாறு அல்லவா? (அரசாங்கமே நிதியுதவி கொடுத்துக் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடத்தி பிரதமர் பரிவட்டம் கட்டிக் கொண்ட காட்சியை நாமே பார்த்து ரசித்திருக்கிறோம். இதற்கிடையில் அரசாங்கத்தின் பொது இடங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும் கட்டப்படும் கோவில்களை அரசு அப்புறப்படுத்தத் தானே செய்யும்? அவ்வாறு அத்துமீறிக் கட்டப்பட்ட கோவில்களும் பள்ளிவாசல் களும் ஆயிரக்கணக்கில் அப்புறப் படுத்தப்பட்டதைக் கடந்த காலம் கண்டிருக்கிறது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் அங்கே வாழும் குடியுரிமை பெற்ற தமிழர்கள், இதுநாள் வரை இதைப் பிரச்சினை ஆக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகக் கணினி விற்பன்னர் களாகவும், உயர் தொழில் நுட்பக்காரர் களாகவும் அங்கே சென்ற இந்தியர் சிலர் 'இந்துக் கோவில்களுக்கு ஆபத்து' என்கிற விஷ விதையை ஊன்றத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களது இந்தக் கருத்தின் உள்நோக்கம் புரியாத பூர்வீகத் தமிழர்களும் இதற்குப் பலிகடா ஆகியிருப்பதுதான் பரிதாபமான செய்தி. மலேஷிய பல்கலைக் கழகத்தில் இந்தியப் பிரிவு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே 'தமிழ் கலை, இலக்கியத்திற்கே இதுகாறும் முக்கியத்துவம் தரப்பட்டு மேம்பாடு காணப்பட்டது. அங்கே அண்மைக் காலத்தில் 'பாரதீயப் பண்பாட்டு விழா' என்கிற விழாவை ஏற்படுத்தி அதில் இந்துத்துவச் சாயல் கொண்ட நிகழ்ச்சிகளையெல்லாம் நடத்தத் தொடங்கினர். 'பாரதீயம்' என்கிற வார்த்தை எத்தகைய பூர்வீகம் கொண்டது என்பதை நாம் விளக்கத் தேவையில்லை. கடந்த 2006 ஆம் ஆண்டில் இப்படிப் பட்ட ஓர் விழாவை ஏற்பாடு செய்து தமிழ்நாட்டிலிருந்து இந்துத்துவச் சிந்தனையாளர்கள் சிலரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்துப் போயிருக்கின்றனர். தமிழகத்திலிருந்து போனவர்கள் 'சமஸ்கிருத ஸ்லோகம்' பஜனைஆன்மீகப் பயிற்சி என்ற வரிசையில் ஆர்.எஸ்.எஸ்.பாணியில் விழாவை நடத்தியிருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேஷியா விலிருந்து தமிழர்கள் சிலரைக் கலாச்சாரப் பயிற்சி கொடுக்கிறோம் என்று சொல்லித் திருச்சிக்கு அழைத்து வந்திருக்கின்றனர். அங்கே அவர்கள் நடத்திய வகுப்புகளில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் தமிழர் பண்பாட்டுக்கெதிரான ஆரியத்தின் கூரிய ஆயுதங்கள் என்பதைக் கண்டு கொண்ட மலேஷியத் தமிழர்கள் வகுப்பைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு மலேஷியா திரும்பி விட்டனர். (பெயர்களைச் சொல்வது நல்லதல்ல என்பதால் விடுகிறோம்)

இந்தியர்கள் நலனுக்காகப் போராடுவதாகக் கிளம்பியிருக்கும் இவர்கள் தங்கள் அமைப்புக்கு வைத்திருக்கும் பேர் என்ன தெரியுமா? 'ஹிண்ட்ராஃப்' என்பதுதான். (இந்து மக்கள் உரிமை படை) அதாவது, 'மொழிவழி மக்களான தமிழர்களுக்கான போராட்டமெனில் 'தமிழர் கோரிக்கைக் குழு' எனப் பெயர் சூட்டியிருக்கலாம் அல்லது 'இந்தியர் நலம் நாடும் சங்கம்' எனச் சொல்லியிருக்கலாம். இடையில் 'ஹிந்து உரிமை', எங்கிருந்து வந்தது. ஓர் இஸ்லாமிய நாட்டில் இந்து மதத்தின் பெயரால் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கினால் ஓர் தேசிய அரசு அதை எவ்வாறு பொறுத்துக் கொள்ளும்? துபாய் போன்ற அரபு நாடுகளில் இப்படிப்பட்ட அமைப்பு ஒரு நிமிடம் உயிர் வாழ முடியுமா என்பதை எண்ணிப்பாருங்கள், தென் கிழக்கு ஆசியாவிலேயே மதத்தின் பேரால் ஆளும், மிகச் சிறந்த ஜனநாயக நாடு என மலேஷியா பேர் பெற்றிருக்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது பிரிட்டிஷ் தூதரகத்திடம் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துப் போராடு கின்றனர். தங்கள் மூதாதையர்களைத் தமிழ்நாட்டிலிருந்து கப்பலில் உழைப்புக் கூலிகளாக அழைத்து வந்து பிரிட்ஷ் அரசு ஏமாற்றிவிட்டது என்றும், அதற்காக ஒரு தமிழருக்கு 1 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மலேஷியாவை விட்டுப்போய் அரை நூற்றாண்டாகிவிட்டது. இப்போது இப்படியொரு வினோதமான கோரிக்கை: உலக நாடுகள் இதைப் பார்த்து எள்ளி நகையாடாதா? இந்தக் கோரிக்கையோடு இங்கிலாந்து தூதரகத்திற்கு ஊர்வலம் புறப்பட்ட போதுதான் மலேஷியக் காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தியது. கலவரம் வெடித்தது. முன் அனுமதி மறுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை ஓர் அரசு எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்? கடந்த தீபாவளிக்கு முதல் நாள் (2007 அக்டோபர்), அத்துமீறிக் கட்டப்பட்ட ஒரு கோவில் ஒரு பள்ளிவாசல் முப்பத்திரண்டு வீடுகளை அரசு அப்புறப்படுத்தியது. இதுகுறித்தும் 'ஹின்ட்ராஃப்' அமைப்பு ஆத்திரப்படுகிறது.

அன்னிய மண்ணில் வாழப் போன வர்கள் அந்த அரசின் சட்ட திட்டங்க ளுக்கு உட்பட்டே வாழ்க்கை நடத்த வேண்டும். அத்துமீறினால் அல்லல்தான். இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களவர்கள் செய்யும் கொடுமையைப் போன்றதல்ல மலேஷிய நிலை. இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டமும், போர்ப்பாட்டும் தொடரு மானால் எதிர்காலத்தில் இந்தியர்கள் யாருக்கும் அங்கே விசாவோ குடியுரிமையோ கிடைக்காமல் போகலாம். இது கொள்ளிக்கட்டையால் தலையில் எடுத்துச் சொறிந்து கொள்ளும் முயற்சி.

நன்றி: ஜனசக்தி நாளிதழ்

நன்றிங்க

6 comments:

koothanalluran said...

//சம்பாதிக்கிற செல்வத்தைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் தான் சொத்துகளை வாங்குகின்றனர். கூத்தாநல்லூர், கடைய நல்லூர், தோப்புத்துறை போன்ற வட்டாரத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் //

இனி கூத்தாநல்லூரான் எழுதுவது..,

இந்திய வம்சாவளி தமிழர்கள்/இந்துக்கள் இந்தியா வரும்போது தப்பித்தவறிக் கூட நாங்கள் இந்திய வம்சாவளிகள் எனச் சொல்லிக் கொள்ளமாட்டார்கள். இந்தியாவிற்கு திரும்ப வந்து விடுவீர்களா எனக் கேட்டால்

canna(t) la... malaysian la...

என்பார்கள். இப்போது ஏன் இந்திய அரசு தலையீட வேண்டும், கலைஞர் தலையிட வேண்டும் என எதிர்பார்க்க்கிறார்கள். வீரபண்டியன் அருமையாக எழுதியிருக்கிறார்.

முஸ்லிம் said...

koothanalluran உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

முன்பு பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது அதை கண்டித்து பேசிய அயல் நாட்டாரிடம் ''இது எங்கள் உள் நாட்டு விவாகாரம் இதில் யாரும் மூக்கை நுழைக்க வேண்டாம்'' என்று பேசியவர்கள்...

...இப்போ ஒரு அயல் நாட்டின் இறையான்மையில் நாம் மூக்கை நுழைப்பது சரிதானா? என்று யோசித்திருக்க வேண்டும்.

ஆனந்தன் said...

யாரோ சொன்னதை கேட்டு இங்கு சில அறிவு ஜீவிகள் குரல் கொடுப்பதை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது. தமிழன் என்கிற உணர்வு கூடா இல்லாமல் தன்னை ஒரு இஸ்லாமியன் என்ற போர்வையில் இந்து வெறுப்பு கொள்கை மட்டுமே புரிகிறது. முதலில் அங்கு நடக்கும் உண்மையை புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் முதலில் தமிழன் அப்புறம்தான் இந்து.

வணங்காமுடி said...

//யாரோ சொன்னதை கேட்டு இங்கு சில அறிவு ஜீவிகள் குரல் கொடுப்பதை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது. தமிழன் என்கிற உணர்வு கூடா இல்லாமல் தன்னை ஒரு இஸ்லாமியன் என்ற போர்வையில் இந்து வெறுப்பு கொள்கை மட்டுமே புரிகிறது. முதலில் அங்கு நடக்கும் உண்மையை புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் முதலில் தமிழன் அப்புறம்தான் இந்து.//


ஆனந்தன்!

"தமிழன் என்கிற உணர்வு கூட இல்லாமல் தன்னை ஒரு இஸ்லாமியன் என்ற போர்வையில் இந்து வெறுப்பு கொள்கை மட்டுமே புரிகிறது" என்று சொல்லியிருப்பதில் இருந்து ஒன்று தெளிவாகப் புரிகிறது;- நீங்கள் பதிவைப் படிக்கவில்லை; பதிவரின் பெயரை மட்டும் படித்துள்ளீர்கள்.

பதிவு சன் தொலைக்காட்சி வீரபாண்டியனாரின் கருத்து. அவர் எப்படி இஸ்லாமியன் போர்வை...?

சேகுவராவின் படத்தைப் போட்டுவிட்டு ஆனந்தன் எப்படி இந்து..?

புரியவில்லை.

நிற்க , ஒரு தமிழ் இந்துவின் கருத்தைக் கீழே தந்துள்ளேன்; படியுங்கள். தெளிவு பிறக்கும்.

******

மலேசியாவில் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்திய இந்திய வம்சாவழியினரை தடியடி நடத்திக் கலைத்ததுடன், இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழுவினர் ஐந்து பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் சிறையில் அடைத்தது மலேசிய அரசு. இதைக் கண்டித்து நடந்து வரும் பிரசாரத்தில், மலேசிய அரசுக்கு இணையாக தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்து வருகிறார் என்று மலேசிய இந்தியன் காங்கிரஸின் தலைவரும், மலேசிய அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும் டத்தோ சாமிவேலுவுக்கு எதிராகவும் கடும் பிரசாரம் நடந்து வருகிறது.

இந்த நேரத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்த அமைச்சர் டத்தோ சாமிவேலுவை நேரில் சந்தித்துப் பேசினோம்.

மலேசியாவில் இந்திய வம்சாவழியினரை, குறிப்பாக தமிழ் மக்களை இரண்டாம்தர குடிமக்களாக மலேசிய அரசு நடத்துவதைக் கண்டித்து இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு நடத்திய போராட்டத்தை மலேசிய அரசு இரும்புக்கரம் கொண்டு நசுக்கியது நியாயம்தானா?

''மலேசிய நாட்டில் எல்லா தமிழர்களையும் கொடுமைப்படுத்துவதாகவும், அவர்களை சித்திரவதை செய்து தெருத்தெருவாக மலேசிய அரசு இழுத்துச் செல்வதைப் போலவும், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் நம்பும் அளவிற்கு ஒரு பையன்(வேதமூர்த்தி) பிரசாரம் செய்தால் அதை தமிழகம் நம்பலாமா?

'பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து ஒரு கோடி ரூபாயை நாங்கள் பெற்றுத் தருகிறோம். அதற்கு வழக்குத் தொடரவேண்டுமானால் ஒரு லட்சம் இந்தியர்கள் திரண்டால்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் மலேசிய அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்' என்று சொல்லி எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள். இவர்களின் பிரசாரத்தை _ சதி நாடகத்தை நம்பி ஏமாந்த மக்களைப் பார்த்து நாங்கள் வருத்தமடைந்தோம்.

எங்கள் நாட்டில் கூட்டத்தைக் கலைப்பதற்கு தடியடி செய்வது கிடையாது. தண்ணீரால் அடிப்போம். கண்ணீர்ப் புகை குண்டு போடுவோம். அது போடவில்லை என்றால், கூட்டம் கலையாது. தண்ணீர் அடித்து, கண்ணீர்க் குண்டு போட்டு கலைத்தது மாபெரும் குற்றம் என்றால், தமிழ்நாட்டில்... ஏன்? இந்தியா முழுவதிலும் போராடும் மக்களை மாட்டையடிப்பதைப் போல அடிக்கும் சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் நடக்கிறதே, இதையெல்லாம் யார் கேட்பது?''

மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவழியினருக்கு அரசின் எல்லா சலுகைகளும் கிடைக்கிறதா என்ன?

"எங்கள் நாட்டைப் பொறுத்தவரை மூன்று இனங்கள். இதில், அறுபத்தாறு சதவிகிதத்தினர் மலாய்க்காரர்கள். இருபத்தாறு சதவிகிதத்தினர் சீனர்கள்.7.8 சதவிகிதத்தினர் இந்தியர்கள். இவர்களைத் தவிர பழங்குடியின மக்களும் இருக்கின்றனர். இப்படி பலவகையான மக்கள் உள்ள சமுதாயத்தில் எது செய்தாலும் பார்த்துத்தான் செய்ய வேண்டும்.

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு இந்தியர்கள் எல்லாம் பட்டதாரிகளாக இருந்தார்கள். டாக்டர்கள், வக்கீல்கள் என எங்கே பார்த்தாலும் இந்தியர்கள்தான் இருந்தனர். அந்த நேரத்தில் மலாய் இனம் வீழ்ந்துகிடந்த இனம். அவர்களை முன்னேற்ற வேண்டுமென ஒரு அரசாங்கம் நினைக்குமா, நினைக்காதா? அந்த நேரத்தில் தமிழர்கள் பல நாட்டிலிருந்து விரட்டப்பட்டார்கள். அதுபோல எங்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று ஒரு சமூக ஒப்பந்தம் செய்துகொண்டோம்.

மலாய், சீனர்கள், இந்தியர்கள் என மூன்று இனங்களுக்குள்ளே செய்துகொண்ட அந்த ஒப்பந்தத்தில், இந்தியர்களுக்கு முழு பிரஜா உரிமை வழங்க வேண்டும் என முடிவானது. அப்போது இருபத்திரண்டு லட்சம் இந்தியர்கள் இருந்தனர். ஆனால், சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் தகராறு வரப் போகிறது என்று பலர் பயந்துகொண்டு இந்தியாவிற்கு ஓடிவந்துவிட்டனர். அங்கிருந்த தொழிலாளர்கள் மட்டுமே அந்த நாட்டை நம்பி இருந்தனர்.

அப்போதுதான் நாட்டை சமநிலைக்குக் கொண்டுவர சமூக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் சமரீதியில் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி இந்தியர்களுக்கு சமநிலை கிடைக்கவில்லை என்பது அமைச்சரவையில் அமர்ந்திருக்கும் எனக்குத் தெரியும். அதற்காக நான் எப்படியெல்லாம் போராடினேன் என்பதை அமைச்சரவைக் கூட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட ரகசிய அறிக்கையை நான் வெளியே கொண்டு வந்து காட்ட முடியாது.

கல்வித்துறையில் அரசு உதவி கொஞ்சம் குறைந்ததால், நாங்களே தனியாகக் கல்வி வளர்ச்சிக் கழகம் ஒன்றை ஆரம்பித்து இதுவரை பதினான்காயிரம் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளோம். இப்படி நாங்கள் தமிழர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பல்வேறு வழிகளில் பாடுபட்டிருக்கிறோம்.''

அப்படியானால் போராட்டம் நடத்தியவர்களின் நோக்கம்தான் என்ன?

"ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த மலேசிய இந்தியன் காங்கிரஸ் தேர்தலில், முன்னாள் துணைத்தலைவர் சுப்பிரமணியம் தோல்வியடைந்துவிட்டார். அவர் எனக்கு முன்பே பதவிக்கு வந்தவர். அவர் பதவிக் காலத்தில் அவர் செய்த ஒரே சாதனை, ராமலிங்க ஈஸ்வர் என்ற கோயிலுக்கு நிலம் வாங்கிக் கொடுத்தது மட்டும்தான் என்று அவரே சொல்வார். அவர் தோற்றுப் போன பிறகு, அவர் செய்கிற ஒரே வேலை எங்களுக்கு எதிராக பிரசாரம் செய்வதுதான். அதற்காக, அவர்கள் ஆரம்பித்ததுதான் 'இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு' என்ற அமைப்பு. அது என்ன இந்து என்ற வார்த்தை. அப்படியென்றால், அங்குள்ள இந்திய கிறிஸ்துவ, முஸ்லிம், சீக்கிய மக்களுக்கு எல்லாம் அவர்கள் முக்கியமாகப் படவில்லையா?

அவர்களின் நோக்கம் எல்லாம்... அரசியலில் எதையோ சாதிக்க வேண்டும் என்று நினைத்தனர். அது நடக்கவில்லை. மலேசிய அரசு ஒன்றுமே செய்யவில்லை என்கிறார்களே? எங்கள் நாட்டிற்கு வந்து பாருங்கள். ஒரு பிச்சைக்காரனைக்கூட பார்க்க முடியாது. சாதாரண நபருக்குக்கூட ஆயிரக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் அளவிற்கு வேலைவாய்ப்பு உள்ளது.

எங்களுக்குள்ள ஒரே பிரச்னை உரிய பங்கீடு கிடைக்கவில்லை என்பதுதான். அதற்காக படிப்படியாகப் போராடி உரிய இடத்தைப் பெற்று வருகிறோம். கல்வியில் உரிய பங்கீடு கிடைக்கவில்லை என்பதற்காக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாங்களேஆசிய மருத்துவ தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் என்ற ஒன்றை ஆரம்பித்தோம். அதில், எல்லாவிதமான படிப்புகளும் படிக்கலாம்.

இந்தியர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கு எந்தவிதமான போராட்டம் நடத்த வேண்டுமோ, அத்தனை போராட்டத்தையும் நாங்கள் நடத்தியிருக்கிறோம்.''

இந்துக் கோயில்களை எல்லாம் மலேசிய அரசு இடிப்பதாகக் குற்றம் சுமத்தப்படுகிறதே?'

"சமீபத்தில் ஒரு கோயிலை இடித்த மலேசிய அரசு, முழுமையாக நீங்களே இடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டது. அந்தக் கோயில் நிலம் தனியாருக்குச் சொந்தமானது. அவர் வேறு ஒருவருக்கு அந்த நிலத்தை விற்றுவிட்டார். இதுதொடர்பான வழக்கு மூன்று வருடம் நடந்து கோயிலுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனால், அந்தக் கோயிலை வேறு இடத்தில் கட்ட மலேசிய அரசு நிலம் ஒதுக்கியது. ஆனால், அங்கே போக மாட்டோம் என்கின்றனர்.

அங்குள்ள மக்களின் எண்ணிக்கையே பதினெட்டு லட்சம். ஆனால், இருக்கும் கோயில்களோ இருபத்துநான்கு லட்சம். இதில், பதிவு செய்யப்பட்ட கோயில் மூன்றாயிரம் கோயில்கள்தான். தினமும் ஒரு கோயிலைக் கட்டுவது, ஒவ்வொருத்தரும் ஒரு கோயிலை வைத்துக் கொள்வோம் என்பது நியாயமா?''

இந்தியாவின் நட்பு நாடாக இருக்கும் மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்படும்போது, அதைக் கண்டித்து தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டபோது, உங்களது அமைச்சரவையில் உள்ள ஓர் அமைச்சர் எச்சரிக்கும் விதமாக அறிக்கை வெளியிடுவது நியாயமானதா?

"அமைச்சரின் அறிக்கையில் என்ன சொன்னார். 'இது எங்கள் நாட்டுப் பிரச்னை. நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் தலையிடாதீர்கள்' என்றுதான் சொன்னார். இந்தப் பிரச்னையில் மேலும் மேலும் இங்கிருந்து அறிக்கை கொடுத்தால், அங்கே என்ன நடக்கும்? ஐநூறு பேர் சாவார்கள். அங்கிருக்கும் இந்தக் குழுவினர் மலாய்க்காரர்களைத் தாக்கிப் பேசி வருகின்றனர். 1969_ல், 1989_ல் நடந்த வன்முறைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை எல்லாம் நாங்கள் மறந்துவிடவில்லை. இந்தநேரத்தில் நமக்குச் சமாதானம்தானே தேவை.

இவர்களை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இந்தியாவில் இருந்து ஒரு சில குழுக்கள் மலேசியாவுக்கு வந்து, இந்துக்கள்தான் ஆட்சி புரிய வேண்டும் என்று தூண்டிவிடுகின்றனர். அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். மேலும், வேதமூர்த்தி இலங்கைக்குச் சென்று திரும்பியவர். அங்கு ஆயுதம் ஏந்திப் போராடுவதைப் போல இங்கேயும் போராடுவோம் என்று அறிக்கை வெளியிட்டார். அது முடியுமா? அப்படியே போராட்டம் நடந்தாலும் அவர் அங்கே இருக்கமாட்டார். பாதிக்கப்படுவது மலேசியாவில் உள்ள நாங்கள்தான் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.''

நன்றி:-
குமுதம்.காம்

http://www.kumudam.com/magazine/Reporter/2008-01-06/pg2.php

ஆனந்தன் said...

வணக்கம்

உங்களின் தகவலுக்கு நன்றி. மலேசியாவில் நடக்கும் பிரச்சனை இந்துக்களால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது போல் திரித்து எலுதியிருந்ததைதான் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. அதனால்தான் நான் 'இந்து' என்ற வார்த்தையை பயன்படுதினேன். மற்றபடி, நான் என்னை தமிழன் என்று அழைப்பதில்தான் பெருமை கொள்கிறேன். மதத்தை விட மனிதமே மேன்மையானது என்பதில் உறுதியாக உள்ளேன். மலேசியாவின் பிரஜை என்ற முறையில் "குமுதம்" இதழில் குறிப்பிட்டிருக்கும் செய்தி முலுவதும் உண்மைக்கு புறம்பான ஒன்று. கூடிய விரைவில் இப்பிரச்சனை குறித்து ஒறு முலுமையான தகவலை அளிக்கிறேன்.

நன்றி நண்பரே

முஸ்லிம் said...

ஆனந்தன் உங்கள் வரவுக்கு நன்றி.

//யாரோ சொன்னதை கேட்டு இங்கு சில அறிவு ஜீவிகள் குரல் கொடுப்பதை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது. தமிழன் என்கிற உணர்வு கூடா இல்லாமல் தன்னை ஒரு இஸ்லாமியன் என்ற போர்வையில் இந்து வெறுப்பு கொள்கை மட்டுமே புரிகிறது. முதலில் அங்கு நடக்கும் உண்மையை புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் முதலில் தமிழன் அப்புறம்தான் இந்து.//

1. தமிழன் என்ன செய்தாலும் அவனுக்கு முதுகு சொறிந்து விடுவதுதான் தமிழ் உணர்வு என்றால் அந்த உணர்வு எம்மிடம் இல்லை.

2. நாம் முஸ்லிம் என்ற போர்வையும் போர்த்திக் கொள்ளவில்லை! கீழே ஜமுக்காளத்தையும் விரித்துக்கொள்வில்லை! அகமும், புறத்தோற்றமும் முஸ்லிம் என்பதைத் தவிர எம்மிடம் நரித்தனம் எதுவுமில்லை.

3. அங்கு நடக்கும் உண்மையை விளம்புகிறேன் என்று நீங்கள் சொல்லிக்கொண்டாலும் அதுவும், ''யாரோ சொன்னதைக் கேட்டு இங்கு சில அறிவு ஜீவிகள் குரல் கொடுப்பதை கேட்டால் நகைப்பு தான் வருகிறது'' என்று வேறு சில அறிவு ஜீவிகள் எழுதுவார்கள் இது ஏன் உங்களுக்கு புரியாமல் போயிற்று? ஒருவேளை நீங்கள் ஒருவர் தான் உத்தமர், நீங்கள் சொல்வது தான் நிஜம் என்ற உணர்வு உங்களுக்கு இருக்கலாம். அதை அப்படியே மற்றவர்களும் ஏற்க வேண்டும் என நீங்கள் கருதினால் அதுவும் நகைப்பிற்குரியது.

இன உணர்வை சுத்தமாக துடைத்து எறிந்து விட்டு விமர்சனம் செய்யுங்கள். இப் பதிவுக்கு அதுதான் நேர்மையாக இருக்கும்.

மீண்டும் நன்றி.