பெனாசிரை நாங்கள் கொல்லவில்லை, முஷாரப் அரசுதான் கொன்றது: அல் கொய்தா
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 30, 2007
இஸ்லாமாபாத்: பெனாசிர் பூட்டோவா அல் கொய்தா அமைப்பு கொல்லவில்லை. பாகிஸ்தான் அரசுதான் திட்டமிட்டுக் கொன்று விட்டு எங்கள் மீது பழி போட முயலுகிறது என்று அல் கொய்தா அமைப்பு அறிவித்துள்ளதால், பெனாசிர் சாவில் மர்மம் நீடிக்கிறது.
ராவல்பிண்டி அருகே 27ம் தேதி இரவு பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அடுத்த நாள் பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சீமா செய்தியாளர்களிடம் பேசுகையில், பெனாசிர் பூட்டோவை நோக்கி ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டான். அப்போது மனித வெடிகுண்டும் வெடித்தது.
இந்த அதிர்ச்சி அலைகள் பெனாசிரைத் தாக்கியதால், உயிர் தப்புதவற்காக அவர் வேகமாக வேனுக்குள் குணிந்தார். அப்போது வேனின் மேற்கூரை கம்பி தலையில் பலமாக இடித்ததில் அவர் மரணமடைந்தார் என்று கூறினார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
மேலும் இந்த சம்பவத்திற்கு அல் கொய்தா அமைப்புதான் காரணம் என்றும் கூறிய சீமா அதுதொடர்பான அல் கொய்தா அமைப்பினரின் தொலைபேசி உரையாடலையும் வெளியிட்டார். இக்ரமுல்லா, பிலால் ஆகிய இருவரே பெனாசிரைக் கொன்றவர்கள் என்றும் கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் அல் கொய்தா அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான பைதுல்லா மசூத்துடன் அல் கொய்தா தீவிரவாதி ஒருவர் உரையாடியதும் அதில் இருந்தது.
முஷாரப் அரசே காரணம்:
இந்த நிலையில் நேற்று அல் கொய்தா அமைப்பு இந்த கூற்றை மறுத்தது. முஷாரப் அரசுதான் பெனாசிர் சாவுக்குக் காரணம் என்று அல் கொய்தா அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மசூத்தின் உதவியாளரான மெளலவி மெளலானா உமர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பாகிஸ்தான் தலைவர்கள் யார் மீதும் நாங்கள் தனிப்பட்ட முறையில் விரோதம் கொண்டிருக்கவில்லை. அவர்களை எதிரிகளாகவும் கருதியதில்லை.
எங்களது ஒரே எதிரி அமெரிக்கா மட்டுமே. பாகிஸ்தான் தலைவர்களைக் கொல்ல நாங்கள் ஒருபோதும் திட்டமிட்டதில்லை.
பெனாசிரை நாங்கள் கொல்லவில்லை. அதிலும் ஒரு பெண்ணை கொல்வதற்கு இஸ்லாமிய பழங்குடியின சமுதாயமும், பாரம்பரியமும், கலாச்சாரமும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
பெனாசிர் கொலை தொடர்பாக மெளலவி மசூத்துடன், அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பேசியதாகவும், அதை தாங்கள் ஒட்டுக் கேட்டதாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது கட்டுக்கதையாகும்.
அவர்களது தவறை மறைக்க எங்கள் மீது குற்றம் சாட்டப் பார்க்கிறார்கள். இது முழுக்க முழுக்க பாகிஸ்தான் அரசு, முஷாரப் அரசு செய்த செயலாகும்.
பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் தலைவர் மட்டுமல்ல, சர்வதேசப் புகழ் பெற்ற ஒரு உலகத் தலைவர் ஆவார். அவரது பாதுகாப்பு வளையத்திற்குள் ஊடுறுவுவது என்பது சாதாரண விஷயமல்ல. எனவே இதில் அரசு மட்டுமே நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது.
பெனாசிர் மறைவுக்கு அல் கொய்தா சார்பில் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார் உமர்.
அல் கொய்தா அமைப்பின் இந்த திடீர் மறுப்பால் பெனாசிர் மரணம் எப்படி நடந்தது, யாரால் நிகழ்த்தப்பட்டது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சுட்டுத்தான் கொல்லப்பட்டார் - பெனாசிர் உதவியாளர்
இதற்கிடையே, பெனாசிர் பூட்டோ சுட்டுத் தான் கொல்லப்பட்டார். அவரது தலையின் பின்புறம் குண்டு பாய்ந்து, முன்புற வழியாக துளைத்துச் சென்ற அடையாளத்தை நான் பார்த்தேன் என்று பெனாசிர் பூட்டோவின் உதவியாளரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ஷெர்ரி ரஹ்மான் கூறியுள்ளதால் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.
பெனாசிருடன் எப்போதும் கூடவே இருப்பவர் ஷெர்ரி. சம்பவ நாளன்றும் அவர் பெனாசிரின் காரில்தான் இருந்தார். நடந்தது என்ன என்று அவர் கூறுகையில், சம்பவத்தின்போது நான் காரில்தான் இருந்தேன். அப்போது சில அடையாளம் தெரியாத நபர்கள் என்னை சுற்றி நின்று கொண்டனர். இதனால் காருக்குள் நின்றபடி மேலே தொண்டர்களை நோக்கி பெனாசிர் கையாட்டிக் கொண்டிருந்தபோது என்ன நடந்தது என்று எனக்கு சரியாக தெரியவில்லை. மேலும் கொலையாளியின் முகமும் எனக்குத் தெரியவில்லை.
துப்பாக்கியால்தான் முதலில் சுட்டனர். பிறகுதான் குண்டு வெடித்தது. அப்போது நான் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டேன். எனது காலில் காயம் ஏற்பட்டது. பிறகு எனது காரில்தான் பெனாசிரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.
பெனாசிர் மரணத்திற்குப் பின்னர் அவரது உடல் மத வழக்கப்படி குளிப்பாட்டப்பட்டது. நானும் அப்போது உடன் இருந்து குளிப்பாட்டுவதற்கு உதவினேன்.
அவரது வயிற்றில் எந்தக் காயமும் இல்லை. ஆனால் தலையில் பெரிய குண்டுக்காயம் இருந்தது. அதாவது தலையின் பின்னால் பாய்ந்த கண்டு முன்புறம் வழியாக வெளியே பாய்ந்திருந்தது.
குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட ரத்தப் பெருக்கு நிற்காமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அதிக ரத்தம் வெளியாகியதும் பெனாசிரின் மரணத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
உண்மை இப்படி இருக்க, பெனாசிர் கார் மேற் கூரைக் கம்பி இடித்து இறந்ததாக பாகிஸ்தான் அரசு கூறுவது மிகவும் மோசமான கற்பனை, கேலிக்கூத்தாகும். முட்டாள்தனமான இந்த கூற்றைப் பார்க்கும்போது அவர்கள் உண்மையை மூடி மறைக்க முயற்சிப்பதாக தெரிகிறது என்று கூறினார் ஷெர்ரி.
இப்படி மாறி மாறி குழப்பங்கள் தொடர்வதால் பெனாசிர் உண்மையில் எப்படி இறந்தார் என்பதற்கு இன்னும் விடை கிடைக்காத நிலை உள்ளது.
நன்றிங்க
பெநஸீர் படுகொலை செய்யப்பட்ட மர்மம் நீடிக்கிறது!
8 comments:
குழப்பங்கள் எப்பொழுது தீரும் என்பது தெரியவில்லை.
ஆனால் தொடர்ந்து நடக்கும் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் பாகிஸ்தானை எங்கு கொண்டுப்போய் விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முஸ்லிம்,
பேநசீரின் பிரேத பரிசோதனை நடத்தப் படவில்லை. என்ன தான் குடும்பத்தினர் வேண்டிக் கேட்டுக்கொண்டாலும், அரசு, முறைப்படி பிரேத பரிசோதனை நடத்தி இருக்க வேண்டும்.
மேலும், சீமா அறிக்கையை வாசித்த பொழுது, பேநசீரின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த அரசு தயார் என்று அறிவித்திருக்கிறார். அப்படி நிகழ ஒரு சதவிகித வாய்ப்பு கூட இல்லை என்று முழுமையாகத் தெரிந்து தான் அவர்கள் இத்தகைய சவால் விடுக்கின்றனர்.
சாவைக் குறித்த கேள்விகளை மக்கள் எழுப்புவார்கள் என்ற அறிவு கொஞ்சமும் இல்லாததைப் பார்க்கும் பொழுது, எப்படியெங்கிலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற முடிவு கட்டியே பிரேத பரிசோதனை வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதும் உடன் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நவீன அறிவியல் உலகில், இப்படி எல்லாம் ஏமாற்ற முடியும் என நினைப்பது என்ன ஒரு அறிவீனம்.
நிற்க, அல்கொய்தா ஒன்றும் யோக்கிய சிகாமணிகள் இல்லை. பாக்கிஸ்தான் தலைவர்கள் எவரும் எங்கள் எதிரிகளல்ல என்று சொல்வது அண்டப் புளுகு. இல்லையென்றால், முஷரஃபின் மீது இரண்டு தற்கொலையைப் படையை ஏவி விட்டதேன்? இல்லை, அதுவும் முஷரஃப்பே தன் மீது கூலிப் படைகளை ஏவி விட்டு, அனுதாபம் தேட முயற்சித்தாரா?
தன்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று முஷரஃப்பிற்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அதை அவர் பேநசீர் விஷயத்தில் வேண்டுமென்றே அசட்டையாகக் கடை பிடியாது இருந்து விட்டார். அதன் காரணமாகவே எல்லோருடைய சுட்டுவிரலும் அவரை நோக்கி நீள்கிறது. ஆனால், இப்படி சந்தேகப்பட்டுக் கொண்டு, அல்கொய்தாவை புனிதப்படுத்தி விடக் கூடாது.
அவர்கள் பேநசீரைக் கொல்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவர்களது கூற்றுப் படி, பேநசீர் - அமெரிக்காவின் கைகூலி. இரு கைக்கூலிகள் இணைந்து கொண்டு, நம்மை அடக்கி ஒடுக்க முனைகிறார்கள் என்ற எண்ணம் அல்கொய்தாவிற்கு உண்டு. மேலும், ஈரானுக்கு அணு ஆய்த ரகசியங்களை விற்ற விஞ்ஞானி கான் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவார் விசாரணைக்காக என்று பேநசீர் அறிவித்ததும், அல்கொய்தா எளிதாக எடுத்திருக்காது. அதை துரோகம் என்றே கருதி இருக்கும் - நம்பி இருக்கும்.
பெண்களை கொலை செய்வது பழங்குடி இன வழக்கமல்ல என்பது சுத்த பூச்சுத்தல். பெண்களை ஒரு மனுஷியாக இவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பது உலகறிந்த விஷயம்.
உண்மை வெளிவர, எந்தச் சார்புகளுமற்ற நடுநிலையாளர்களைக் கொண்டு, முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். அது ஒன்று மட்டுமே உண்மையை வெளிக் கொண்டு வரும்....
மஞ்சூர் ராசா உங்கள் வரவுக்கு நன்றி.
//குழப்பங்கள் எப்பொழுது தீரும் என்பது தெரியவில்லை.//
பொது மக்களுக்குத் தான் குழப்பங்கள் படுகொலை செய்தவர்கள் எவ்வித குழப்பமும் இல்லாமல் கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
ஒரு அசம்பாவிதம் நடந்தால் அதைப் பின்னணியாக்கி பல வன்முறைகள் நிகழ்வது உலக வழக்கமாகி விட்டது.
நண்பன்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
பெநஸீரின் சடலத்துடன் அவர் படுகொலை செய்யப்பட்ட உண்மையையும் அவசரமாக மண்ணறையில் அடக்கம் செய்து விட்டனர்.
அல் கொய்தா அமைப்புதான் கொலை செய்தது என்று ஆளும் கட்சியும், ஆளும் கட்சிதான் கொலை செய்தது என்று அல் கொய்தாவும் கூறுகின்றன. இருவரும் யோக்கியர்களல்ல.
இந்த அரசியல் படுகொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே நமது ஆதங்கம்!
பிரேத பரிசோதனை தேவையில்லை
என்பது பல உண்மைகளைப் புதைக்க
வாய்ப்பாகி விட்டது.
அல் கொய்தாவின் அறிக்கையை
குழந்தை கூட நம்பாது.
முஷாரப், முன்னாள் பிரதமர்கள்
தேர்தலில் போட்டியிடுவதை
விரும்புவார் என எவருமே நம்பமுடியாது.
யோகன் பாரிஸ் உங்கள் வரவுக்கு நன்றி.
//பிரேத பரிசோதனை தேவையில்லை
என்பது பல உண்மைகளைப் புதைக்க
வாய்ப்பாகி விட்டது.
அல் கொய்தாவின் அறிக்கையை
குழந்தை கூட நம்பாது.
முஷாரப், முன்னாள் பிரதமர்கள்
தேர்தலில் போட்டியிடுவதை
விரும்புவார் என எவருமே நம்பமுடியாது.//
சரியாகச் சொன்னீர்கள்!
கொலை நடந்த சின்னேரத்திலேயே கொலை நடந்த இடம் அரசால் நீர் விட்டு சுத்தம் செய்யப்பட்டது. ஆதாரங்கள் ஏதும் கிடைக்க கூடாதென்பதற்காக செய்யப்படுகிறதோ என்ற ஐயம் எழுவதாக ஏ ஆர் ஒய் மற்றும் சி.என்.என். செய்தி ஊடகங்கள் அப்போதே தெரிவித்தன.
சுல்தான் உங்கள் வரவுக்கு நன்றி.
எல்லாம் முன் திட்டப்படியே நடந்திருக்கின்றன என்றே எண்ணத் தோன்றுகிறது.
Post a Comment