Saturday, December 29, 2007

புது தகவல் (!?)

பெனாசிர் கார் மேற்கூரை கம்பி இடித்து இறந்ததாக புது தகவல்

சனிக்கிழமை, டிசம்பர் 29, 2007

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மனித வெடிகுண்டினாலோ அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்ததாலோ மரணமடையவில்லை. மாறாக, தனது காரின் இரும்புக் கம்பி தலையில் பலமாக பட்டதால் படுகாயமடைந்தே அவர் இறந்ததாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராவல்பிண்டி அருகே படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் உடல் நேற்று மாலை அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தந்தை சுல்பிகர் அலி பூட்டோவின் சமாதிக்கு அருகே பெனாசிரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் பெனாசிர் கொல்லப்பட்டது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பெனாசிரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதனால்தான் அவர் மரணமடைந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த ராவல்பிண்டி அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவேத் சீமா கூறுகையில், சம்பவத்தன்று, பெனாசிர் பூட்டோ தனது காரின் மேல் பகுதியில் நின்றபடி தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்ததால் அதைப் பயன்படுத்தி கொலைகாரன் துப்பாக்கியால் சுட்டுள்ளான். ஆனால் துப்பாக்கி குறி தவறியதால் பெனாசிர் உடலில் குண்டு பாயவில்லை. இதையடுத்து அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளான்.

இதனால் ஏற்பட்ட பெரும் அதிர்ச்சி அலைகள் பெனாசிரைத் தாக்கியது. அவர் தப்பிப்பதற்காக வேகமாக காருக்குள் புக முயன்றுள்ளார். அப்போது காரின் மேல் கூரை கம்பிகள், அவரது தலையில் பலமாக மோதியுள்ளன.

இதில் அவரது தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மேலும் அந்தக் காயம் மூளையையும் தாக்கியது. இதுவே அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்தது என்றார்.

பெனாசிருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறுகையில், மனித வெடிகுண்டு வெடித்தபோது அதில் இருந்து வந்த வெடிகுண்டுச் சிதறல்கள், பெனாசிரின் தலையைத் தாக்கியுள்ளன. இதனால்தான் அவர் மரணமடைந்தார். அவரது உடலில் குண்டுகள் எதுவும் பாயவில்லை என்று கூறியுள்ளார்.

பெனாசிர் சுடப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. அதில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகளும், பெனாசிர் தப்பிக்க முயல்வதும் தெரிய வருகிறது.

ஆனால் அரசு மற்றும் டாக்டர்களின் கூற்றை பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் மறுக்கிறார்கள். பெனாசிர் துப்பாக்கியால் சுடப்பட்டுத்தான் இறந்தார் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இப்படி மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெனாசிர் மரணம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நன்றிங்க

இது என்னய்யா புது கதை... (!?)

No comments: