Thursday, December 20, 2007

தண்ணீர் தேசம.

தண்ணீர் தேசமான தமிழகம் - மழைக்கு 33 பேர் பலி - இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007

சென்னை: தமிழகம் முழுவதும் கொட்டித் தீர்த்த கன மழையால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி விட்டன. மழைக்கு இதுவரை 33 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வட கிழக்குப் பருவ மழைக் காலம் தொடங்கியது முதல் சரிவர மழை பெய்யாமல் இருந்து வந்தது. ஆங்காங்குதான் மழை பெய்து வந்தது. ஆனால் பருவ மழைக் காலம் முடியப் போகும் தருவாயில், வானம் உடைப்பெடுத்து, தமிழகத்தை தத்தளிக்க வைத்து வருகிறது.

கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தின் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை புரட்டி எடுத்து வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 4 நாட்களாக நிற்காமல் பெய்து வரும் பலத்த மழையால் தமிழகமே தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகரமே தண்ணீரில் மிதக்கிறது. பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடிக் கொண்டிருக்கிறது. புறநகர்ப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து தீவுகள் போல மாறியுள்ளன.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான,பூண்டி நீர்த்தேகம் நிரம்பியுள்ளது. இதையடுத்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் தொடர்ந்து தாமதமாகவே வந்து கொண்டுள்ளன. இதேபோல, திருச்சி, மதுரை, நெல்லையிலும் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கண்ணீரில் மிதக்கும் காவிரி விவசாயிகள்:

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையும், சோகமும் அடைந்துள்ளனர். லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

சீர்காழி, நாகப்பட்டனம், பூம்புகார், தலைநகர், கோடியக்கரை ஆகிய பகுதிகளில் பல கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு தீவுகள் போல ஆகியுள்ளன.

பல கிராமங்களில் வீடுகள் இடிந்தும், சுவர்கள் இடிந்தும் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

வயர்கள் அனைத்தும் குளங்கள் போல மாறிக் கிடக்கின்றன. தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் மட்டும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன.

மிதக்கும் விருத்தாச்சலம் பஸ் நிலையம்:

காவிரி டெல்டா மாவட்டங்களுக்குப் பிறகு அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாவட்டம் கடலூர்தான்.

இங்கு பெரும்பாலன பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. நெய்வேலி அணல் மின் கழகத்தில், சுரங்கத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

விருத்தாச்சலத்தில் வெள்ளம் மக்களை பாதித்துள்ளது. அங்குள்ள பேருந்து நிலையம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மணிமுத்தாறில் வெள்ள் கரைபுரண்டோடுகிறது. இதனால் மணிமுத்தாறில் உள்ள தரைப்பாலம் மூடி விட்டது. இதன் காரணமாக கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 250 கிராமங்களுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது நீர்மட்டம் 46 அடியாக உள்ளது. ஏரியின் கரைகள் பலவீனமாக இருப்பதால் கரை உடைந்து பெரும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள பெரிய ஏரி நிரம்பி விட்டது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது அருகில் உள்ள 5 கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் வெள்ளம் மக்களைப் பாதித்துள்ளது. திருவண்ணாமலையில், உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குள் நீர் புகுந்தது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் மீட்பு நடவடிக்கைக்கு ஒரு அதிகாரியும் வராததால் அவர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர்.

ரிஷிவந்தியம் பகுதியில் ஏரி, குளங்கள் மழையால் நிரம்பி வழிகின்றன. பகண்டையை அடுத்த எகால் கிராமத்தில் ஏரி உடைந்து, நூறு ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது.

கரையாம்பாளையம் கிராமத்தில் குளம் உடைந்ததால், தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. ஏழு வீடுகள் இடிந்து தரைமட்டமானது. அறுவடை செய்து அடிப்பதற்கு தயாராக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் கட்டுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

மரூர் பாப்பாந்தாங்கள் ஏரியில் இருந்து வழிந்த தண்ணீர் திருக்கோவிலூர் -சங்கராபுரம் சாலையில் கடம்பூர் அருகே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பெருக்கெடுத்து ஓடியது. திருக்கோவிலூரில் இருந்து சங்கராபுரம் சென்ற ஒரு அரசு பஸ் வெள்ளத்தில் சிக்கியதால், இப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

உடுமலைப்பேட்டையில் இருவர் பலி:

உடுமலைப்பேட்டையில் வீடு இடிந்து முறுக்கு வியாபாரிகளான நாகராஜன், பிரபு ஆகியோர் பலியானார்கள். தேனி மாவட்டம் அழகாபுரியில் மின்சாரம் தாக்கி தாயும், மகனும் உயிரிழந்தனர்.

சென்னை அருகே ஆ.முல்லைவாயில் என்ற இடத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோபி என்பவர் உயிரிழந்தார். திருவள்ளூர் மணலி புதி நகர் பகுதியில் மாடி வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பலியானார்.

இதுவரை மழைக்கு 33 பேர் பலியாகியுள்ளனர். சென்னை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேரும், தஞ்சை, திருவண்ணாமலையில் தலா 3 பேரும், விழுப்புரம், மதுரை, திருவள்ளூர், சேலம், தேனி, கோவையில் தலா 2 பேரும், புதுக்கோட்டை, தர்மபுரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

இதற்கிடையே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, திருவாரூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

இதற்கிடையே மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும், தரைக்காற்று பலமாக இருக்கும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

நன்றிங்க

No comments: