வம்சாவளி இந்தியர் கைது விவகாரம்: `எங்கள் நாட்டு சட்ட நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம்' அமெரிக்காவுக்கு மலேசிய துணை பிரதமர் பதில்
கோலாலம்பூர், டிச.16-
வம்சாவளி இந்தியர்கள் 5 பேரை கைது செய்தது தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த மலேசிய துணை பிரதமர் நாஜிப் ரசாக், `எங்கள் நாட்டு சட்ட நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம்` என்று மலேசிய துணை பிரதமர் நாஜிப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கருத்து
மலேசியாவில் வாழும் வம்சாவளி இந்தியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை முன் நின்று நடத்திய `இந்த்ராப்` அமைப்பைச் சேர்ந்த 5 பேரை `உள்நாட்டு பாதுகாப்பு சட்ட`த்தின் கீழ் மலேசிய அரசு கைது செய்தது. இந்த சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களை விசாரணையே இல்லாமல் குறைந்தது இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம்.
இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. வாஷிங்டனில் கடந்த வியாழன் அன்று பேட்டி அளித்த அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் சீன் மெக்கார்மக், "மலேசியாவில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டப் பூர்வமாக வாதாடும் உரிமை வழங்கப்படும் என்று நம்புகிறோம். அவர்கள் மீதான விசாரணை விரைவாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்'' என்றார்.
துணை பிரதமர் பதில்
அமெரிக்காவின் இந்த கருத்துக்கு மலேசிய துணை பிரதமர் நாஜிப் ரசாக், கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையை `நியு ஸ்ட்ரைட்ஸ் டைம்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
போராட்டத்தை ஆரம்பித்த போதே, மலேசியாவில் உள்ள மக்கள் சட்டத்துக்கு கீழ் பணிந்து நடக்க வேண்டும் என்றும் சட்டத்தை விட மேலானவர்கள் யாரும் கிடையாது என்றும் கூறினோம். இதை அறிவுரையாகவும் பின்னர் எச்சரிக்கையாகவும் தெரிவித்தோம். எனவே உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததில் ஆச்சரியம் எதுவும் கிடையாது.
குவாண்டனமோ சிறை
கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரும் தங்களை சட்டப்பூர்வமாக பாதுகாத்து கொள்ள மலேசிய சட்டப்படி தேவையான வாய்ப்புகள் தரப்படும். பிற மலேசிய குடி மக்களுக்கு அளிப்பது போலவே அவர்களுக்கும் அனைத்து உரிமைகளும் தரப்படும். அந்த உரிமைகளும் விரைவாகவும் வெளிப்படையாகவும் நடைபெறும்.
எனவே, அமெரிக்கா எதுவும் கூறத் தேவையில்லை. முதலில் `குவாண்டனமோ கடற்படை தள'த்தில் அவர்கள் அடைத்து வைத்துள்ள அனைவருக்கும் நியாயமான விசாரணையை வழங்கட்டும். அதன் பிறகு அவர்கள் கூறும் கருத்துகளுக்கு நாங்கள் மரியாதை அளிக்கிறோம். இவ்வாறு நாஜிப் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினரை கிïபா நாட்டில் உள்ள `குவாண்டனமோ வளைகுடா கடற்படை தள'த்தில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ளது. அங்கு அடைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு எந்த விசாரணையும் கிடையாது. அதைத்தான் நாஜிப் குறிப்பிட்டு, மலேசிய விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் உறுதி
இதற்கிடையே, மலேசிய இந்து கவுன்சில் என்ற அமைப்பின் தலைவர் நடராஜா தலைமையில் 14 அமைப்புகளை சேர்ந்த வம்சாவளி இந்தியர்கள், மலேசிய பிரதமர் அப்துல்லா படாவியை நேற்று முன்தினம் சந்தித்தனர். கைது நடவடிக்கைக்கு பிறகு இந்த சந்திப்பு நடந்தது.
அப்போது அவர்களிடம், வம்சாவளி இந்தியர்களின் குறைகளை கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். சந்திப்புக்கு பிறகு, நடராஜா இந்த தகவலை தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது மலேசிய மந்திரியும் வம்சாவளி இந்தியருமான சாமிவேலு உடன் இருந்தார்.
நன்றிங்க
அடுத்தவருக்கு அறிவுரை சொல்வதற்கு முன் முதலில் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும்.
என்ன நாஞ்சொல்றது...!
No comments:
Post a Comment