Saturday, December 08, 2007

வயதான பெற்றோரை கவனிக்காமல் கைவிட்டால் சிறை!

வயதான பெற்றோரை கவனிக்காமல் கைவிட்டால் சிறை

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 7, 2007

டெல்லி: வயது முதிர்ந்த பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளைத் தண்டிக்கும் வகையிலான சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் வயதான காலத்தில் பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு 3 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

வயது முதிர்ந்தவர்கள் கடைசிக்காலத்தில் நிராதரவாக விடப்படும் அவல நிலையை களையும் வகையில், மத்திய அரசு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட மசோதா நேற்று நாடாளுமன்ற ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய சமூக நலம் மற்றும் அமலாக்கத் துறை அமைச்சர் மீரா குமார் பேசுகையில், வயது முதிர்ந்த பெற்றோரை புறக்கணித்து வீடுகளில் வைத்துப் பராமரிக்காமல் இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும். இதுதவிர 3 மாத சிறைத் தண்டனையும் கிடைக்கும். அல்லது இரண்டு தண்டனைகளும் ஒரே நேரத்தில் விதிக்கப்படும்.

இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்பது இந்த சட்டத்தின் சிறப்பம்சமாகும்.

பிள்ளைகள், தங்களது வயது முதிர்ந்த பெற்றோரை அன்போடு அரவணைத்துக் காக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது.

இந்த சட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்படும். வயது முதிர்ந்தவர்கள் தங்களைப் பராமரிக்காத பிள்ளைகள் குறித்து இங்கு புகார் அளிக்கலாம்.

இதுதவிர மாவட்டந்தோறும் முதியோர் இல்லங்களும் திறக்கப்படும். ஆனால் இது குழந்ைதகளற்ற முதிய தம்பதிகள், வறுமையில் வாடும் முதியோர்களுக்கானது.

குடும்ப உறவுகள் தற்போது சிதறி வருகின்றன. மூத்தவர்களை வீட்டில் வைத்துக் கொள்வது, மதிப்பது, பராமரிப்பது போன்றவை குறைந்து வருகிறது. இந்தியாவின் முக்கிய சிறப்பம்சமே மூத்தவர்களை மதிப்பதும், கூட்டுக் குடும்ப வாழ்வும்தான். அதைக் காக்கும் வகையிலேயே இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது என்றார் மீரா குமார்.

ஏற்கனவே இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதையடுத்து இந்த சட்ட மசோதா அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைக்கப்படும்.

நன்றிங்க

எதுவும் தானாக கனிய வேண்டும்.

No comments: