Friday, July 27, 2007

இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலை.

அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலை

வெள்ளி, 27 ஜூலை 2007

சிட்னி: இலண்டன் மற்றும் கிளாஸ்கோ விமானநிலையங்களைத் தகர்க்க நடந்த சதியில் தீவிரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃபின் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கருதி அவரை விடுதலை செய்ய இருப்பதாக ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் அரசு தலைமை வழக்கறிஞர் டேமியன் பக் பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் மருத்துவர் ஹனீஃபுக்கு எதிராக அரசு தரப்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் கைவிடப்பட்டுத் திரும்பப் பெறப்படுவதாகக் கூறினார். இவ்வழக்கைக் கையாண்டதில் அரசின் அனைத்துத் துறையினரும் பொறுப்பற்ற நிதானமின்மையை வெளிப்படுத்தினர் என அவர் ஒப்புக் கொண்டார்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கும் உளவியல் ரீதியான தாக்குதலுக்கும் ஆளான மருத்துவர் ஹனீஃபின் குடும்பத்தினர் மட்டுமல்லாது பெங்களூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களும் இச்செய்தி குறித்து மகிழ்ச்சி ஆரவாரம் தெரித்தனர்.

கடுமையான சூழலுக்கு உட்படுத்தப்பட்ட மருத்துவர் ஹனீஃபிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்புக் கோருமா என்ற நிருபர்கள் கேள்விக்கு ஆஸ்திரேலியப் பிரதமர் ஜான் ஹோவர்டு அதற்கான சாத்தியம் இல்லை என்று பதிலளித்தார். குற்றம் சாட்டுவதும் வழக்குத் தொடுப்பதும் காவல் துறையினரதும் அரசு வழக்கறிஞரதுமான வேலை. இதில் நிகழ்ந்த குளறுபடிகளுக்கு பிரதமர் ஏன் மன்னிப்புக் கோரவேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் ஹனீஃப் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் அவர் இந்தியாவிற்கு புறப்படுவதற்கான முறையான அனுமதியை ஆஸ்திரேலியா இன்னும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இது குறித்து ஆஸ்திரேலிய அரசுக்கு இந்திய அரசு தரப்பிலும் வேண்டுகோள் வைக்கப்படும் என இந்திய வெளியுறவு இணை அமைச்சர் E. அஹமது தெரிவித்தார். மருத்துவர் ஹனீஃப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபணம் ஆகியுள்ள நிலையில் இனியும் அவருக்கு அனுமதி வழங்குவதில் கால தாமதம் கூடாது என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே பல்வேறு மனித உரிமைக்குழுக்களும், மருத்துவர் ஹனீஃபின் வழக்கறிஞர்களும் பொய்யாகப் பயங்கரவாதி எனக் குற்றம் சாட்டி மருத்துவர் ஹனீஃபை கொடுமைப் படுத்தியதற்காக ஆஸ்திரேலிய அரசு மீது மான நஷ்ட வழக்குத் தொடுக்கப்போவதாகக் கூறியுள்ளனர்.

நன்றிங்க

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற மரபுப்படி நிரபராதி விடுதலையடைந்தார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் சேர்ந்து, முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக டாக்டர் ஹனீஃப் மீது பயங்கரவாதி என குற்றத்தைச் சுமத்தி கைது செய்தார்கள். விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. பொய் பித்தலாட்டங்கள் செய்து குழப்பங்கள் எஞ்சியது. இங்கிலாந்து சொன்னதால் நாங்கள் கைது செய்தோம் என்று ஆஸ்திரேலிய சமாதானம் சொன்னாலும் டாக்டர் ஹனீஃபை கைது செய்யச் சொன்ன இங்கிலாந்திடம் ஆதாரம் கேட்டிருக்க வேண்டும். இரு நாடுகளும் டாக்டர் ஹனீஃபின் விஷயத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது என்பது தெளிவு.

எல்லாம் ''இஸ்லாமோஃபோபியா''

4 comments:

அழகு said...

இங்கிலாந்தின் அதீத அச்சத்தாலும் இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய மேற்குலகின் தவறான கணிப்புகளாலும் டாக்டர் ஹனீஃப் அநியாயமாகக் கைது செய்யப் பட்டார். மனித உரிமை ஆர்வலர்களாலும் நேர்மையான ஊடகங்களின் இடைவிடாப் போராட்டங்களாலும் தன் காவல் துறையின் மானம் பறிபோய் விட்ட நிலையில், அதை ஒப்புக் கொண்டு, குறுகிய காலத்தில் டாக்டர் ஹனீஃபை விடுதலை செய்த ஆஸ்திரேலிய அரசு பாராட்டுக்குரியது.

இவ்வேளையில், நமது காவல் துறையின் 'வைத்து' எடுக்கும் ஆதாரங்களையும் நீதித்துறையின் ஆமைவேக நடவடிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

சுல்தான் said...

நீங்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறீங்க.
ஒரு முஸ்லீமை தீவிரவாதி இல்லைன்னு சொன்னா.......!!
மலர்மன்னன்கள் பின்னாலே ஏதா வச்ச மாதிரி எரியும். இப்போது எப்படி வருத்தப்படுகிறார்களோ? பாவம்.!
(ஜடாயுவின் சமீபத்திய பதிவைப் படித்து நொந்ததால்)

முஸ்லிம் said...

அழகு உங்கள் வரவுக்கு நன்றி

//இவ்வேளையில், நமது காவல் துறையின் 'வைத்து' எடுக்கும் ஆதாரங்களையும் நீதித்துறையின் ஆமைவேக நடவடிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.//

சரியாகச் சொன்னீர்கள்.

குற்றம் சுமத்தியபின் குற்றத்திற்கான ஆதாரங்கள் இல்லை என்றவுடன் விடுதலை செய்த ஆஸ்திரேயா அரசு பாராட்டுக்குரியதுதான்.

நமது காவல் துறையும், நீதித் துறையும் விசாரணைக் கைதியாகவே பல வருடங்கள் சிறையில் அடைக்கும் செயலுக்கு ஈடாக இல்லாமல், ஆஸ்திரேலியா அரசு சில நாட்களிலேயே விசாரணையை முடித்து, விடுதலை செய்தது நல்ல ஜெட்வேகம்.

முஸ்லிம் said...

சுல்தான் உங்கள் வரவுக்கு நன்றி

மகிழ்ச்சியெல்லாம் இல்லீங்க, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கம்தான். எந்த மதத்தை சேர்ந்தவருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது. ஒரு குற்றமும் செய்யாமல் தண்டனை அடைவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

முஸ்லிம்களெல்லம் தீவிரவாதிகள் இல்லை.

ஆனால் தீவிரவாதிகளெல்லாம் முஸ்லிம்கள். என்று
மலர்மன்னர்கள் இப்படிச் சொல்றாதாலேதாங்க அவங்க இஸ்லாத்தின் எதிரிகள் + சங்பரிவார மெம்பர்கள்.