ஆஸி. போலீஸ் நடத்திய நாடகம்: ஹனீப்
ஜூலை 30, 2007
பெங்களூர்: நான்கு வார கால ஆஸ்திரேலிய துயரத்திற்குப் பிறகு டாக்டர் முகம்மது ஹனீப் நேற்று இரவு பெங்களூர் வந்து சேர்ந்தார். அவரை குடும்பத்தினரும், உறவினர்களும் உணர்ச்சி பொங்க வரவேற்றனர்.
இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக ஜூலை 2ம் தேதி கைது செய்யப்பட்டார் ஹனீப். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்களில் எந்த உண்மையும் இல்லை, ஆதாரமும் இல்லை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து ஹனீப் மீதான வழக்கை கைவிட்டது ஆஸ்திரேலிய காவல்துறை. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இந்தியாவுக்குக் கிளம்பினார் டாக்டர் ஹனீப். பாங்காக் வழியாக நேற்று இரவு 9.30 மணியளவில் விமான நிலையத்தில் ஹனீப்புக்கு குடும்பத்தினரும், உறவினர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
ஹனீப்பின் தாயார் மற்றும் பிறந்து ஒரு மாதமே ஆன மகள் ஹனியாவுடன் மனைவி பிர்தோஸ் அர்ஷியா ஆகியோர் கண்ணீர் மல்க ஹனீப்பை வரவேற்றனர்.
ஹனீப் வருகையையொட்டி விமான நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஹனீப்பிடம் பேசுவதற்காக நேற்று காலை முதலே பத்திரிக்கை நிருபர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் குவிந்திருந்தனர். ஆனால் ஹனீப் வந்து இறங்கியவுடன் போலீஸார் அவரை அங்கிருந்து பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விட்டனர், பேசவும் செய்தியாளர்களை அனுமதிக்கவில்லை. இதனால் பத்திரிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஹனீப்புடன் அவரது உறவினர் இம்ரான் சித்திக், வழக்கறிஞர் பீட்டர் ரூஸோ ஆகியோரும் வந்துள்ளனர்.
பெங்களூரை வந்தடைந்ததும் பி.டி.எம். லேஅவுட்டில் உள்ள தனது மனைவியின் வீட்டுக்கு ஹனீப் சென்றார். அங்கு அவருக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
முன்னதாக பி.டி.எம்.லேஅவுட் வீட்டின் முன்பு பெரும் திரளான பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்தனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து ஹனீப்பை முதலில் ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
நீண்ட நேரம் கழித்தே அவரை பி.டி.எம். லேஅவுட் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அதற்கு முன்னதாக மதீனா மசூதிக்குச் சென்று ஹனீப் பிரார்த்தனை செய்தார்.
பி.டி.எம். லேஅவுட் வீட்டின் முன்பு ஹனீப், ரூஸோ, இம்ரான் ஆகியோரை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
ஹனீப் மீண்டும் பெங்களூர் திரும்பியது குறித்து கபீல், சபீல் அகமது சகோதரர்களின் சகோதரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது மோதிய ஜீப்பை கபீல் அகமதுதான் ஓட்டிச் சென்றார். 90 சதவீத தீக்காயத்துடன் அவர் இங்கிலாந்து ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்ட சபீல் அகமது மீதும் இன்னும் எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் நன்றி:
தனது மாமனார் வீட்டுக்குத் திரும்பிய பின்னர் எழுதி வைக்கப்பட்டிருந்த அறிக்கையை ஹனீப் செய்தியாளர்களிடம் வாசித்தார்.
அப்போது அவர் கூறுகையில், எனது கஷ்டமான காலத்தில் பெரும் ஆதரவாக இருந்த எனது குடும்பத்தினர், இந்திய அரசு, ஆஸ்திரேலிய மக்கள் ஆகயோருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய, ஆஸ்திரேலிய மீடியாக்களுக்கும் எனது நன்றிகள்.
கடவுளுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இத்தனை நாள் துயரத்திற்குப் பின்னர், தேவையற்ற குற்றச்சாட்டின் மூலம் ஆஸ்திரேலிய காவல்துறையால் பழிவாங்கப்பட்ட பின்னர், மீண்டும் குடும்பத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.
இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான நேரம். ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகள் என்னை பலி கொடுக்க முயன்றனர். இதற்காக ஒரு நாடகத்தையும் அவர்கள் அரங்கேற்றினர். ஆனால் அதிலிருந்து நான் மீண்டு வந்துள்ளேன். இதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கும், சட்டக் குழுவுக்கும் எனது நன்றிகள் என்றார் ஹனீப்.
நான் தீவிரவாதி அல்ல:
முன்னதாக ஆஸ்திரேலியாவின் சேனல் 9 தெலைக்காட்சிக்கு ஹனீப் கொடுத்த பேட்டியில், நான் தீவிரவாதி அல்ல. வார்த்தையால் கூட அடுத்தவரை புண்படுத்த நினைக்காத நான் எப்படி எனது செயலால் மற்றவர்களுக்கு துன்பம் ஏற்படுத்த முடியும்.
என்னைத் தீவிரவாதி என்று ஆஸ்திரேலிய போலீஸார் கூறியபோது எனக்கு எதுவும் புரியவில்லை. என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வரும் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை.
தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு அளிக்கும் குணம் என்னிடம் இல்லை. சபீல் அகமது எனது குடும்ப உறுப்பினர். எனது சிம் கார்டை பயன்படுத்திக் கொள்வதாக கேட்டார். அதனால் கொடுத்தேன். தீவிரவாத செயலுக்காக வடிவமைக்கப்பட்ட சிம் கார்டு அல்ல அது.
எனது உறவினர்களால் நான் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் அகமது சகோதரர்களின் பெற்றோர் கவுரமான டாக்டர்கள், மதிக்கப்படக் கூடியவர்கள். அவர்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன். எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
எனக்கு எந்தத் தீவிரவாத அமைப்புடனும் தொடர்பு இல்லை, தீவிரவாதப் பயிற்சியும் நான் எடுத்ததில்லை. பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ நான் போனதே இல்லை.
எனது மகளைப் பார்க்க விரும்புகிறேன். அவள் ஒரு தேவதை. எனது அதிர்ஷ்டம். மீண்டும் குடும்பத்தினரை சந்திக்க ஆவலாக உள்ளேன் என்றார் ஹனீப்.
வேலை கொடுக்க தயார் - குமாரசாமி:
இதற்கிடையே டாக்டர் ஹனீப் விரும்பினால் அவருக்கு பெங்களூரிலேயை வேலை தர கர்நாடக அரசு தயாராக இருப்பதாக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று கூறுகையில், டாக்டர் ஹனீப் குடும்பத்தை நாளை (இன்று) சந்திப்பேன். டாக்டர் ஹனீப்புக்கு பெங்களூரில் உயர்ந்த பதவியைத் தர அரசு தயாராக உள்ளது.
மேலும் அவர் மீண்டும் ஆஸ்திரேலியா செல்ல விரும்பினாலோ அல்லது வேறு நாட்டுக்கு செல்ல விரும்பினாலோ அதுகுறித்து பிரதமரிடம் பேசி தேவையான உதவிகளைப் பெற்றுத் தரவும் அரசு தயாராக உள்ளது என்றார் குமாரசாமி.
நன்றிங்க
நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment