Monday, July 09, 2007

விவாகரத்து சர்ச்சை.

05. தபால் மூலம் "தலாக்' முஸ்லிம் பெண் சர்ச்சை

டாங்க் (ராஜஸ்தான்): முஸ்லிம் மதத்தினரில் பெண்கள் விவாகரத்து கோருவது மிக அரிது. அதிலும் தபால் மூலம் "தலாக்' அனுப்பி, விவாகரத்து பெறுவது அரிதிலும் அரிது. அப்படி தபாலில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ராஜஸ்தான் பெண் ஒருவர்.

ராஜஸ்தானில் உள்ள டாங்க் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஹசீனா. இவரது கணவர் முகமது ஷரீப். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்த கணவரை சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். கேட்டபோதெல்லாம் பிறந்த வீட்டில் இருந்து பணம் பெற்று தந்தார். மீண்டும் ஒரு லட்ச ரூபாய் வாங்கி வரும்படி, ஹசீனாவை அடித்து உதைத்துள்ளார் ஷரீப். ஆவேசமடைந்த ஹசீனா, தனது பிறந்த
வீட்டில் இருந்து, தபால் மூலம் கணவருக்கு "தலாக்' நோட்டீஸ் அனுப்பிவிட்டார். ஆனால், இந்த விவாகரத்தை ஏற்க மறுக்கிறார் ஷரீப். "தவறு செய்வது மனித இயல்பு தான். நான் தவறை திருத்திக் கொள்கிறேன். ஏழு குழந்தைகளுடன் நான் தனியே வசிப்பது முடியாத காரியம். எனக்கு இன்னொரு வாய்ப்பு வேண்டும்' என்று வாதிடுகிறார்.

ஷரீப்புக்கு முஸ்லிம் மத குருக்களும் ஆதரவாக உள்ளனர். முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் மஞ்சூர் அலாம், ""தபால் மூலம் தலாக் நோட்டீஸ் அனுப்பியது சரியானது அல்ல,'' என்று கூறுகிறார். டாங்க், காந்தெனா அமேரியா மசூதியின் மதகுரு உமர் நத்வி, ""ஆண்கள் மட்டுமே இது போன்ற முறையில் "தலாக்' நோட்டீஸ் அனுப்பி விவாகரத்து செய்ய முடியும். பெண்களுக்கு முஸ்லிம் சட்டத்தில் இதுபோன்ற செயல்களுக்கு இடம் இல்லை,'' என்கிறார்.

இது தொடர்பாக இஸ்லாமிய பண்டிதர்களிடம் கேட்ட போது, "பெண்கள் விவாகரத்து கோரும் போது, அதற்கு முஸ்லிம் மதத்தில் சில நிபந்தனைகளும், விதிமுறைகளும் உள்ளன. ஹசீனா விஷயத்தில், அவர் செய்தது சரியானது தானா என்பதை முஸ்லிம் சட்டப்புத்தகத்தை அலசி ஆராய்ந்து தான் முடிவு சொல்ல முடியும்' என்றனர். ஹசீனாவுக்கு
ஆதரவாக அவரது தந்தை உறுதியுடன் உள்ளார். ஹசீனாவும், யார் என்ன சொன்னாலும், இனி ஷரீப்புடன் சேர்ந்து வாழப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

நன்றிங்க 08.07.07 தினமலர்.

தலாக் எனும் விவாகரத்து செய்து கொள்ளும் சட்டம் கணவன், மனைவி இருவருக்குமே பொதுவானதாக இருக்கிறது. விவாகரத்து செய்து கொள்ளும் முறைகளில் வேண்டுமானால் சற்று வித்தியாசம் இருக்கிறது. மற்றபடி கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பொருந்திப் போகவில்லையென்றால் இருவருக்குமே பிரிந்து கொள்ளும் உரிமையை இஸ்லாம் வழங்கி இருக்கிறது.

எழுத்து மூலம் விவாகரத்து செய்யக்கூடாது என்று இஸ்லாத்தில் எந்த சட்டமும் இல்லை. ஆனால் எழுத்து மூலம் விவாகரத்தைத் தெரிவிக்கும் முறைக்கு ஒரு நிபந்தனை உண்டு. திருமணத்துக்கு எவ்வாறு இரு சாட்சிகளை ஏற்படுத்திக்கொள்கிறோமோ அதே முறையில் எழுத்து மூலம் தெரிவிக்கும் விவாகரத்துக்கும் இரண்டு சாட்சிகளை ஏற்படுத்தி உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும், தன் கணவரிடமிருந்து பிரிந்து விட வேண்டும் என்பதில் ஹஸீனா உறுதியாக இருக்கும் நிலையில், அதை மறுக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. அவருடைய கணவருடன் சேர்ந்து வாழ வற்புறுத்தும் உரிமையும் எவருக்கும் இல்லை. இஸ்லாம் இதில் தலையிடுவதில்லை.

பெண்கள் குலா முறையில் விவாகரத்து பெற முன் வரும்போது அதை புறக்கணித்து கண்டிப்பாக உன் கணவருடன் நீ வாழ்ந்தாக வேண்டும் என்று சொல்லவும் இஸ்லாமிய மத பண்டிதர்களுக்கும் உரிமை இல்லை. அப்படி உரிமை உள்ளது என்று சொல்ல வருபவர்கள் தமது தரப்பு வாதத்திற்கான ஆதாரங்களை இஸ்லாத்திலிருந்து எடுத்தெழுதலாம்.

தன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய படவா முகமது ஷரீபை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

8 comments:

╬அதி. அழகு╬ said...

சரியாச் சொன்னீங்க!

ஆமா ... 'படவா'ன்னா என்னங்க?

முஸ்லிம் said...

அழகு உங்க வரவுக்கு நன்றி

//ஆமா ... 'படவா'ன்னா என்னங்க?//

'படவா'ன்னா என்னான்னு உங்களுக்கும் தெரியாதா?

Unknown said...

//ஹசீனாவும், யார் என்ன சொன்னாலும், இனி ஷரீப்புடன் சேர்ந்து வாழப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.//

மற்றவர்கள் இரண்டு பேருக்கும் சமாதானம் செய்து வைக்க முயல முடியுமே தவிர, இஸ்லாமிய சட்டப்படி அநதப் பெண்ணை யாரும் நிர்ப்பந்தப்படுத்த முடியாது. நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்.

படுவா என்ற உருது வார்த்தைக்கு பெண்களை வைத்து பிழைப்பு நடத்தும் மாமா என்று பொருள். தமிழில் அது படவா என்று மருவி விட்டது. விபரம் தெரியாமல் நாம் அதைச் சொல்கிறோம். அழகு தெரிந்துதான் கேட்கிறார் என் நினைக்கிறேன்.

வணங்காமுடி said...

ஸுல்தான் சொன்னது சரியே என்றாலும் தென் தமிழ் நாட்டில் அப்பொருளில் பயன் படுத்தப் படுவதில்லை அச்சொல்.

தம் கண்டனத்தைத் தெரிவிக்கவே அச்சொல்லை முஸ்லிம் ஐயா பயன்படுத்தியுள்ளார் என்று நினைக்கிறேன்.

முஸ்லிம் ஐயாவிடம் ஒரு வினா..

ஏன் உங்கள் சமய ஆசான்கள் கூட மண விலக்கு எனும் "தலாக்" பற்றி அதிகம் அறிவற்றவர்களாக இருக்கிறார்கள்? அவர்களால்தான் மணவிலக்குச் சிக்கல் இடியாப்பச் சிக்கலாகிறது என நான் நம்புகிறேன்.
இது குறித்துத் தாங்கள் கருதுவது என்ன?

முஸ்லிம் said...

சுல்தான் உங்கள் வரவுக்கு நன்றி

//படுவா என்ற உருது வார்த்தைக்கு பெண்களை வைத்து பிழைப்பு நடத்தும் மாமா என்று பொருள். தமிழில் அது படவா என்று மருவி விட்டது. விபரம் தெரியாமல் நாம் அதைச் சொல்கிறோம். அழகு தெரிந்துதான் கேட்கிறார் என் நினைக்கிறேன்.//

படவா என்னும் வார்த்தைக்கு நீங்கள் சொல்லும் உருது அர்த்தங்கள் இருப்பது எனக்குத் தெரியாது. தென்
மாநிலங்களில் 'ஏலே படவா ராஸ்கல்' என்ற வார்த்தைகள் சாதாரணமாகவே புழங்கப்படும்.

நெருங்கிய நண்பர்களுக்குள்ளும் இப்படிப் பேசிக்கொள்வார்கள். சேட்டைகள் செய்யும் பேரனைக் கண்டிக்கும் தாத்தாக்களும்
''ஏலே படவா'' என்றும் ''எங்கே அந்த படவாப்பயல்?'' என்றும் சொல்வார்கள்.

இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் படவா என்ற வார்த்தை கண்டிப்பதற்காக பேசப்படுகிறது.

வணங்காமுடி அய்யா சொன்னது போல் கண்டிப்பதாக எண்ணியே அவ்வார்த்தையைப் பயன்படுத்தினேன். நானும் தென்
தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்பதால் அவ்வார்த்தைகள் எழுத்தில் வந்து விட்டது.

படவா என்பதற்கு நீங்கள் சொல்லும் உருது அர்த்தத்தின் பொருள் என்றால் இனிமேல் அவ்வார்த்தையைக்
கண்டிப்பாக தவிர்த்துக் கொள்வேன்.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

முஸ்லிம் said...

வணங்காமுடி அய்யா உங்கள் வரவுக்கு நன்றி

//முஸ்லிம் ஐயாவிடம் ஒரு வினா..

ஏன் உங்கள் சமய ஆசான்கள் கூட மண விலக்கு எனும் "தலாக்" பற்றி அதிகம் அறிவற்றவர்களாக இருக்கிறார்கள்? அவர்களால்தான் மணவிலக்குச் சிக்கல் இடியாப்பச் சிக்கலாகிறது என நான் நம்புகிறேன்.
இது குறித்துத் தாங்கள் கருதுவது என்ன?//

மிக நன்றாகவே உங்கள் கருத்தைச் சொல்லியுள்ளீர்கள். மணவிலக்கு சட்டம் தொடர்பாக மார்க்கத்தில் சிக்கல்களும் இல்லை. நீங்கள் கூறுவது போல் எங்கள் அறிவற்ற மார்க்க அறிஞர்களால் சிக்கல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு அதைத் தீர்ப்பதற்கான வழியை ஏற்படுத்துவோமா!

மனைவியைப் பிரிந்து அயல் நாட்டுக்கு வேலைக்குச் செல்லும் கணவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியாகி கைது செய்யப்படுகிறான். அவன் செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

ஆயுள் தண்டனை என்றால் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் காலங்களில் எந்த வருவாயும் ஈட்ட முடியாமல், அவனால் ஊரில் இருக்கும் மனைவியை, குடும்பத்தைப் பராமறிக்க முடியாமல் போய் விடுகிறது.

மனைவிக்குத் தேவையான பொருளாதாரதைப் பூர்த்தி செய்ய முடியாமல் போனதை எண்ணி, தன் மனைவி வெறொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவளை விவாகவிலக்கு செய்ய முன்வருகிறான். அயல் நாட்டில் ஆயுட்கைதியாக இருக்கும் கணவனை நேரில் வந்துதான் தலாக் சொல்ல வேண்டும் என்று சொல்ல முடியுமா? அப்படிச் சொல்வது அறிவுக்கு உகந்ததாகுமா?

இந்த சூழ்நிலையில் கணவன் தக்க சான்றுகளுடன் எழுத்து மூலமாக தனது விவாகரத்தைத் தெரிவிக்கலாம்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கணவன் மரண நாள் என்று எனத் தெரியாத நிலையில் நாட்களைக் கடத்தாமல் மனைவி மறுமணம் செய்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் மனைவிக்கு தலாக் சொல்ல முன்வரும் மரண தண்டனை கைதியால் நேரில் வந்து விவாகரத்துச் சொல்ல முடியாது. இங்கும் எழுத்து மூலமாகவே விவாகரத்தைத் தெரிவிக்க முடியும்.

நேரில் விவாகரத்துச் சொல்ல முடியாத இப்படிப் பல சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கணவன் எழுத்து மூலமாக தனது தலாக்கைத் தெரிவிக்கலாம்.

மனைவியும் எழுத்து மூலமாக கணவனை குலா எனும் விவாகரத்துச் செய்யலாம்.....

தொடர்வோம்

முஸ்லிம் said...

மனைவியும் கணவனை குலா எனும் விவாகரத்து செய்யும்போது எழுத்து மூலமாக அதை முறையிடலாம். கணவன், மனைவி உறவுகளில் மனைவியின் அனைத்துத் தேவைகளுக்கும் கணவனே பொறுப்பேற்க வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகிறது. இதிலிருந்து சந்தர்ப்பத்தால் மனைவிக்கு செய்யும் கடமைகளிலிருந்து விலகுவது, அல்லது வேண்டுமென்றே மனைவியைப் புறக்கணிப்பது, வேறு பெண்னை மணந்து கொண்டு முதல் மனைவியை அந்தரத்தில் விட்டுவிடுவது, அல்லது ஓடிப்போய் விடுவது, காணாமல் போய் விடுவது.

இந்த சூழ்நிலைகளில் கணவனே கண்கண்ட தெய்வம் என்று கட்டியவனையே எண்ணிக்கொண்டு அவனுக்காக மனைவி வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை. உணர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கணவன், மனைவி இருவரும் தமக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டாலும், மனைவிக்கு உணவு, உடை, தங்குமிடம் வழங்குவதை கணவன் நிறைவேற்றி வரவேண்டும்.

இதிலிருந்து தவறும் கணவனை சகித்துக் கொள்வது மனைவியின் விருப்பத்திற்குட்பட்டது. தனது தேவைகளை நிறைவேற்றாத கணவனைப் புறக்கணித்து அவனிடமிருந்து விலகிட எண்ணினால் தனது விருப்பத்தை நேரடியாக ஜமாத்தில் முறையிடலாம், அல்லது தமக்கு நேர்ந்த நிர்க்கதியை எழுத்து மூலமாகவும் ஜமாத்துக்குத் தெரிவிக்கலாம்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப கணவன், மனைவி இருவருமே எழுத்து மூலம் தமது விவாகரத்தைத் தெரிவிக்கலாம் என்பதை சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. எழுதியவற்றில் எதிர்கணைகள் இருந்தால் தொடுக்கலாம்.

இதுவரை எழுதியவற்றுக்கு மார்க்க ஆதாரம் என்ன? என்று கேட்டால், சமூக சீர் கேடுகளை உருவாக்கும் செயல்களில் தவிர மற்ற சட்டங்களைக் கொண்டு இஸ்லாம் யாரையும் நிர்ப்பந்திப்பதில்லை. உண்பதற்கு தடை செய்யப்பட்டவைகள் என்று கட்டளையிடும் (அல்குர்ஆன் 5:3) இறைவன், அதே வசனத்தின் இறுதியில், நிர்ப்பந்தத்திற்குள்ளானோரை உண்ணவும் அனுமதிக்கிறான்.

கபில்து, ஏற்றுக்கொண்டேன் என்று மும்மொழிந்து வாழ்க்கையில் மணமக்களாக இணைந்த கணவன், மனைவி இருவருக்குமே பிரிவதிலும் நிர்ப்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இருக்கிறதா? இல்லை! என்பதற்கு செய்தியில் உள்ள ஒரு சம்பிளை வணங்காமுடி அய்யாவுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

//ஷரீப்புக்கு முஸ்லிம் மத குருக்களும் ஆதரவாக உள்ளனர். முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் மஞ்சூர் அலாம், ""தபால் மூலம் தலாக் நோட்டீஸ் அனுப்பியது சரியானது அல்ல,'' என்று கூறுகிறார். டாங்க், காந்தெனா அமேரியா மசூதியின் மதகுரு உமர் நத்வி, ""ஆண்கள் மட்டுமே இது போன்ற முறையில் "தலாக்' நோட்டீஸ் அனுப்பி விவாகரத்து செய்ய முடியும். பெண்களுக்கு முஸ்லிம் சட்டத்தில் இதுபோன்ற செயல்களுக்கு இடம் இல்லை,'' என்கிறார்.//

வணங்காமுடி அய்யா

எங்கள் மசூதியின் மதகுரு உமர் நத்வியின் கூற்று எப்படி இருக்கிறது பார்த்தீர்களா...

தொடர்வோம்

வணங்காமுடி said...

//நீங்கள் கூறுவது போல் எங்கள் அறிவற்ற மார்க்க அறிஞர்களால் சிக்கல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன//

முஸ்லிம் ஐயா மன்னீக்க வேண்டும்.

அறிவற்றவன் எப்படி அறிஞனாக இருக்க முடியும்.?

உங்கள் சமய ஆசான்கள் இக்குறிப்பிட்ட மணவிலக்குச் சிக்கலில் மட்டும் ஆணாதிக்கப் போக்கில் அல்லது உங்கள் மார்க்கம் கூறும் விதிகளை முழுமையாக் உணராமல் தீர்ப்பு வழங்குகிறார்கள்.

வேண்டுமானல்ல் அவர்களை மார்க்க "அரிஞர்"கள் என்று அழைத்துக் கொள்ளலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.