Wednesday, July 04, 2007

ஜீவனாம்சம் சம்பள உயர்வா?

விவாகரத்தானவருக்கு சம்பள உயர்வா? மாஜி மனைவிக்கு அதிக ஜீவனாம்சம்

மும்பை: விவாகரத்தான ஆண்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தால், மாஜி மனைவிக்கு ஜீவனாம்ச தொகையை அதிகரித்து கொடுக்க வேண்டும் என்று மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.விவாகரத்தான ஆண்களுக்கு இனிமேல் சம்பள உயர்வு கிடைத்தால், அது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்காது. மாஜி மனைவிக்கு இன்னும் அதிகமாக ஜீவனாம்சத்தை கொடுக்க வேண்டுமே என்ற வருத்தம் தான் இருக்கும்.மும்பையைச் சேர்ந்த அரசு ஊழியர் மோகன் ஹரி மோரே .

குடும்பப் பிரச்னையால் அவருக்கும், மனைவி சுஜாதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதனால், கடந்த 1999ல், அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து விட்டனர். அப்போது, சுஜாதாவுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் ஜீவனாம்சமாக மோகன் கொடுக்க வேண்டும் என்று குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, மோகன் ஜீவனாம்சம் கொடுத்து வந்தார்.இந்நிலையில், சுஜாதா சமீபத்தில் குடும்பநல கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "என்னை விவாகரத்து செய்த போது, எனது மாஜி கணவருக்கு சம்பளம் ரூ.மூன்று ஆயிரம் மட்டுமே. அத்துடன், அவருடைய வயதான பெற்றோர் அவருடன் இருந்தனர். அவர்களையும் பராமரிக்க வேண்டி இருந்தது. அதனால், அப்போது ஆயிரம் ரூபாய்

தான் ஜீவனாம்சம் தர முடியும் என்று கூறி விட்டார். சில ஆண்டுகள் கடந்த பிறகு, ஐந்தாவது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, எனது மாஜி கணவருக்கு சம்பளம் ரூ.எட்டு ஆயிரமாக உயர்ந்தது. ஆனால், எனக்கு கொடுத்து வந்த ஜீவனாம்ச தொகையை மட்டும் உயர்த்தவில்லை.

மேலும், அவருக்கு சம்பள உயர்வு நடைமுறைக்கு வந்த போது, நிலுவைத் தொகையாக ஆயிரக்கணக்கில் பணம் கிடைத்தது. அவருடைய வயதான பெற்றோரும் இப்போது இறந்து விட்டனர். அதனால், அவருக்கு நிதி நெருக்கடி எதுவும் கிடையாது. எனக்கு கொடுக்கும் ஜீவனாம்சத்தை அதிகரித்து கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்து இருந்தார்.அந்த மனுவை விசாரித்த குடும்பநல கோர்ட், "சுஜாதாவுக்கு கொடுக்கும் ஜீவனாம்ச தொகையில், மோகன், இனிமேல் ரூ.500 அதிகமாக கொடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது. அதைக் கேட்டு பதறிப் போன மோகன், மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

மோகனின் மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் ஜே.என்.பாட்டீல் மற்றும் ஏ.ஏ.சையது அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது, "விலைவாசி உயர்ந்து வருவதால் தான் அரசு, மோகனுக்கு சம்பள உயர்வை அளித்தது. அதே போல, விலைவாசி உயர்வு சுஜாதாவுக்கும் உண்டு. அதை சமாளிக்க, அவருக்கு வேறு எந்த ஆதாயமோ அல்லது ஆதரவோ கிடையாது. அதனால், மோகன் அதிகப்படியாக ஊதியம் பெறும் போது, அவருடைய மனைவிக்கும் ஜீவனாம்ச தொகையை ரூ.500 அதிகரித்து தான் கொடுக்க வேண்டும்.

ஏற்கனவே கொடுக்கும் ஆயிரம் ரூபாயில், உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ செலவு மற்றும் பிற செலவுகளை சுஜாதா சமாளிக்க முடியாது. அதனால், சுஜாதாவுக்கு இனிமேல் மோகன் ஜீவனாம்சமாக மாதந்தோறும் ரூ.ஆயிரத்து 500, கொடுத்து தான் ஆக வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது.

நன்றிங்க

சட்டங்களில் இருக்கும் பல ஓட்டைகளில் இது பெரிய ஓட்டை என்று சொல்லலாம்.

மணமுடித்து இல்லற வாழ்வில் தம்பதியராக இணையும் ஆண், பெண் இருவருக்கும் கணவன், மனைவி என்ற உறவு ஏற்படுகிறது. இந்த உறவினால் சுக, துக்கம். லாப. நஷ்டம் என வாழ்க்கையில் ஏற்படும் இன்பம் துன்பங்களில் இருவரும் பங்கேற்கிறார்கள்.

கணவனுக்கு மனைவி உதவுவது, மனைவிக்கு கணவன் உதவுவதும் பரஸ்பரம் இருவர் மீதும் கடமை.

திருமணத்திற்கு பின் இருவரும் கருத்து வேறுபாடு கொண்டு இனி கணவன் மனைவியாக இணைந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்து விவாகரத்துக்கு செய்து கொண்டு பிரிந்த பின் அவன் யாரோ அவள் யாரோ என்று ஆகிவிடுகிறார்கள்.

இப்படி நீ யாரோ நான் யாரோ என்று பிரிந்த பின்னும் மனைவி என்ற அந்தஸ்தை முற்றாக முறித்துக் கொண்ட பெண்ணுக்கு கொஞ்ச காலம் மனைவியாக இருந்திருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக அவளுக்கு காமெல்லாம் ஜிவனாம்சம் என்ற பெயரில் ஒரு தொகையை கணவனாக இருந்தவன் கொடுத்து வரவேண்டும் என்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஆண்களுக்கு இழைக்கப்படும் ஒரு அநீதி.

இங்கே நீதி மன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாக கருதாமல் விவகாரத்து பெற்றுக்கொண்ட ஒரு பெண் இனிமேல் கணவன் என்ற குறுக்கிடு இல்லாமல் தன் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ள முடியும். திருமணத்திற்கு முன்பு என்ன நிலையோ அதே சுதந்திர நிலையை அந்தப் பெண் பெற்று விடுகிறார்.

இந்த நிலையில் தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணுக்கு ஜிவனாம்சம் என்ற பெயரில் மாத மாதம் ஒரு தொகையை கொடுப்பது எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?

உழைப்புக்கு கிடைப்பதே ஊதிய உயர்வு.

விவாகரத்து செய்துகொண்ட பெண் என்ன உழைக்கிறார் என்று அவருக்கும் மாஜி கணவனின் ஊதிய உயர்விலிருந்து பங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்வதை எப்படி நேர்மைப்படுத்த முடியும்?

No comments: