Friday, June 29, 2007

அமைதித் தூதராக டோனி பிளேயர்!

மத்திய கிழக்கின் அமைதித் தூதுவராக பிளேய்ர் நியமனம்

வெள்ளி, 29 ஜூன் 2007

மிக நீண்ட பிரவுபசாரத்திற்குப் பிறகு பிரிட்டனின் பிரதமர் பதவியை விட்டுவிலகிய டோனி பிளேய்ர், உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள மத்திய கிழக்கின் பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே அமைதியைத் தோற்றுவிக்கும் தூதுவராக மத்தியகிழக்கு அமைதிக்கான நான்கு உறுப்பினர் குழுமம் (Middleeast Peace Quartet) நியமித்துள்ளது. இந்த குழுமத்தின் உறுப்பினர்களாக ஐநா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன உள்ளன.

டோனி பிளேய்ர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டதால் நன்மை ஏதும் விளையப் போகிறதோ இல்லையோ, பாலஸ்தீன மக்கள் நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதாகப் பாலஸ்தீன மக்கள் கருதுகிறார்கள். பிளேய்ர் அமைதித் தூதுவராக நியமிக்கப்பட்டதற்கு இஸ்ரேலின் பிரதமர் உல்மர்ட்டும், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸும் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், பாலஸ்தீனத்தில் சமீபத்தில் கவிழ்க்கப்பட்ட ஹமாஸ் அரசின் செய்தித் தொடர்பாளராக இருந்த காஸி ஹமத், "பிளேய்ர் பிரிட்டனின் பிரதமராக இருந்த வரை இஸ்ரேலிய அமெரிக்க அரசுகளின் ஊதுகுழலாகவே இருந்தார், பாலஸ்தீன மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்டவராக நடக்கவேயில்லை, எனவே இவரால் பாலஸ்தீனர்களுக்குத் தீமை விளையவே வாய்ப்புள்ளது" என AFP செய்தி நிறுவனத்திற்கு அளித்திருந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

"இது (பிளேய்ர் நியமனம்) மேற்குக் கரையையும் காஸாவையும் நிரந்தரமாகப் பிரித்துவிடும் இஸ்ரேலிய தந்திரத்தைச் செயல் படுத்தவே உதவும்" என பாலஸ்தீனப் பெண்ணிய ஆர்வலர் உலா அல்ஹிலோ தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தில் பங்குத் தரகராக இருக்கும் முஆம்மர் லோலோ, "ஃபத்தாஹ் கட்டுப்பாட்டில் இருக்கும் மேற்குக் கரைக்கு மட்டுமே உதவியாக இருப்பார், காஸா பகுதியைத் தனிமைப்படுத்தி ஒடுக்கவே உதவுவார்" என்று கூறியுள்ளார்.

"பாலஸ்தீனர்களின் நலனுக்கு இதுவரை ஒரு துரும்பைக் கூடக்கிள்ளிப் போடாத பிளேய்ர், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேன்மேலும் தொடரவே உதவுவார்" என இன்னொரு ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஃபவ்ஸி கூறியுள்ளார்.

இருப்பினும் இனிவரும் காலங்களில் அவர் ஹமாஸுடன் நடந்து கொள்ளவிருப்பதைப் பொறுத்தே பிளேய்ர் எந்த அளவுக்கு அமைதித் தூதுவர் பணியை உண்மையில் மத்திய கிழக்கின் அமைதியை அடைய நிறைவேற்றுவார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நன்றிங்க

ஏகாதிபத்திய மூர்க்க குணங்கொண்ட டோனி பிளேயரை அமைதித் தூதுவராக நியமித்தால் என்ன நடக்கும்?

இரண்டு பூனைகள், தமக்குக் கிடைத்தப் பணியாரத்தை சமமாகப் பங்கு போட்டுத் தரும்படி குரங்கின் உதவியை நாடி, பிறகு குரங்கு பூனைகளை ஏமாற்றிய கதைதான் நினைவுக்கு வருகிறது.

அய்யோ பாவம் பூனைகள்!

No comments: