Monday, April 30, 2007

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.

முஸ்லீம்கள் பணத்தில் படித்து முஸ்லீம்களை வேட்டையாடிய 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்'

ஏப்ரல் 30, 2007

அகமதாபாத்: என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என குஜராத் காவல்துறையினரால் வர்ணிக்கப்பட்டு, இப்போது 13 பேரை போலி என்கவுண்டர்களில் கொன்று தீர்த்த கொலைகாரனாக மாறி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் குஜராத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ்.அதிகாரி டி.ஜி.வன்சாரா.

போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லீம்களை சுட்டுக் கொன்றதாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டது, குஜராத்தை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியது.

இவர்களில் ஒருவரான ராஜ்குமார் பாண்டியன் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி. இன்னொரு முக்கியமான நபர் வன்சாரா.

வன்சாராவுக்கு குஜராத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என பெயராம். இதுவரை 13 பேரை என்கவுண்டர் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளார் வன்சாரா. அதிலும் 2003ம் ஆண்டில் மட்டும் 7 பேரை போட்டுத் தள்ளியுள்ளார். அத்தனை பேரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

தற்போது சொரப்தீன் ஷேக், அவரது மனைவி கெளசர் பீபி மற்றும் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்த விவகாரத்தில் சிக்கியுள்ள வன்சாரா, இதுவரை நடத்திய என்கவுண்டர்கள் அனைத்துமே போலியானவை என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

என்கவுன்டர்களுக்குப் பின்னர் கொல்லப்பட்ட 'தீவிரவாதிகளிடமிருந்து' பிடிபட்டதாக சில நாட்டுத் துப்பாக்கிகளை மேலிடத்தில் ஒப்படைத்துள்ளார் வன்சாரா.

வன்சாராவுக்கு பெரிய அளவில் அரசியல் தொடர்புகளும் உள்ளன. இதன் மூலம் இவர் ரூ.150 கோடிக்கு மேல் சொத்தும் சேர்த்து வைத்துள்ளார். இதுகுறித்தும் விசாரிக்கப்படவுள்ளது.

வன்சாரா, குஜராத் மாநிலம் இலால் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இந்தக் கிராமத்தில் உள்ள 12 ஆயிரம் மக்களில் 60 சதவீதம் பேர் முஸ்லீம்கள் ஆவர். சிறு வயதில் மிகவும் ஏழ்மையில் வாடியவர் வன்சாரா. அவரது பள்ளிப் படிப்புக்குக் கூட இந்தக் கிராமத்து மக்கள்தான் பணம் கொடுத்து உதவியுள்ளனராம்.

காரணம், வன்சாரா மட்டுமே அக்கிராமத்தில் படிப்பில் அதிக ஆர்வம் காட்டியவர். நமது கிராமத்தைச் சேர்ந்த ஒரு படிப்பார்வம் மிக்க சிறுவன் நன்கு படிக்கட்டும் என்ற ஆர்வத்தில் ஊரே சேர்ந்து வன்சாரவைப் படிக்க வைத்துள்ளது. முஸ்லீம்கள் அனைவரும் வன்சாராவை தங்களது வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்துள்ளனர்.

அதேபோல சிவில் சர்வீஸ் தேர்வுக்கு வன்சாரா தயாரானபோதும் கூட இக்கிராமத்து முஸ்லீம்கள்தான் பல வகையிலும் உதவியாக இருந்துள்ளனர். எந்த வன்சாராவை தங்களது பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்தார்களோ, எந்த வன்சாரா ஐபிஎஸ் அதிகாரியாக ஆனபோது பெருமைப்பட்டார்களோ அதே வன்சாராவால் இப்போது இலால் கிராமத்து முஸ்லீம்கள் பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

வன்சாராவின் தந்தை கோபார்ஜி வன்சாரா, கழுதை மேய்ப்பவராக இருந்துள்ளார். இலால் சஹாகரி மண்டலி உயர் நிலைப்பள்ளியில்தான் வன்சாரா படித்து வந்தார். அப்போது வகுப்பிலேயே முதல் மாணவராக விளங்கினார்.

11ம் வகுப்பு வரை அங்குதான் வன்சாரா படித்தார். வன்சாரா என்பது ஜாதிப் பெயராகும். வன்சாரா சார்ந்த ஜாதியினர் மொத்தமே 25 குடும்பங்கள்தான் இலால் கிராமத்தில் வசித்து வருகின்றனர். தற்போது போலி என்கவுண்டர் விவகாரத்தில் வன்சாரா சிக்கியுள்ளதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும் உள்ளனர். வன்சாரா குடும்பத்தை இவர்கள் புறக்கணித்து, ஒதுக்கி வைத்துள்ளனர்.

வன்சாராவின் பள்ளித் தோழரும், வழக்கறிஞருமான நாதுபாய் படேல் கூறுகையில், வன்சாராவின் செயலால் நாங்கள் பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்துள்ளோம். எங்களை வன்சாரா அவமானப்படுத்தி விட்டார்.

இளம் வயதில் மிகவும் வறுமையில் வாடிய குடும்பம் வன்சாராவின் குடும்பம். இக்கிராமத்து முஸ்லீம்கள் கொடுத்த பணத்தில்தான் வன்சாராவும், அவரது அண்ணனும் படித்தார்கள். ஆனால் இன்று அதே முஸ்லீம் சமுதாயத்தை வேட்டையாடி எங்களை கேவலப்படுத்தி விட்டார் வன்சாரா என்றார் ஆத்திரமாக.

வன்சாராவின் ஆசிரியரான ஹசன்பாய் கரீம்பாய் ஹோல்டா கூறுகையில், சிறு வயதில் வன்சாரா நன்கு படிக்கும் மாணவராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் அவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனது வீட்டிற்கு வந்து டியூஷன் படித்துச் செல்வார்.

11ம் வகுப்பை இங்கு முடித்து விட்டு வடோடராவில் மேல் படிப்பு படிக்கப் போனார். ஐபிஎஸ் முடித்து பணியில் சேர்ந்த பின்னர் அவர் கிராமத்தை மறந்து விட்டார்.

அவர் இன்று உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ளதற்கு இந்தக் கிராமமும், இங்குள்ள அப்பாவி ஜனங்கள் செய்த தியாகமும், செய்த பண உதவிகளும்தான் காரணம். ஆனால் இவர்கள் குறித்து வன்சாரா கவலைப்படவே இல்லை, ஒதுக்கி வைத்து விட்டார். இன்றோ, இக்கிராமத்துக்கு பெரும் கெட்ட பெயரை ஈட்டித் தந்து விட்டார் என்றார் வேதனையுடன்.

இலால் கிராமம், எந்த வன்சாராவுக்காக பெருமைப்பட்டதோ, அதே வன்சாராவால் இன்று தலைகுனிந்து வேதனையில் மூழ்கிக் கிடக்கிறது. இதற்கிடையே சொரப்தீனின் மனைவி கெளசர் பீபியை இந்த போலி எண்கவுண்டர் கும்பல் ஒரு பண்ணை வீட்டில் வைத்து கொலை செய்து எரித்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

நன்றிங்க

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அப்பாவிகளை கொன்று குவித்த - ஜாதி வெறிபிடித்த இந்த அதிகாரி காவல்துறைக்கே ஒரு இழுக்கு.

உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்த நன்றி கெட்ட துரோகி.

2 comments:

புதுச்சுவடி said...

குஜராத்தில் நரேந்திர மோடி பதவியேற்றபின் , அவனைக் கொல்ல முன்றதாக நாற்பதுக்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் குஜராத் காவல் துறையால் கொல்லப் பட்டதாக முன்னாள் காவல்துறை உயர் அதிகாரியும் பாரதீய ஜனதா அமைச்சருமான ஜஸ்பால்ஸிங் கூறியுள்ளது கவனிக்கத் தக்கது.

முஸ்லிம் said...

புதுச்சுவடி உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜனநாயக நாட்டில் ஒரு காவல்துறை அதிகாரி எவ்வளவு துணிச்சலாக அயோக்கிய மோடித்தனம் செய்திருக்கிறான் பாருங்களேன்.