Sunday, April 08, 2007

கேடிகளின் சிடி

தேர்தல் பிரச்சார ஒலிவட்டு: பாஜக தடைசெய்யப்படுமா?

ஞாயிறு, 08 ஏப்ரல் 2007

சர்ச்சைக்குரிய தேர்தல் பிரசார ஒலிவட்டு (CD) தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்து உள்ளது. மேலும் கட்சியை ஏன் தடை செய்யக்கூடாது என்று கேட்டு அது விளக்கம் கோரி இருக்கிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சி, தேர்தல் பிரசாரத்தின் போது ஒலிவட்டு ஒன்றை வெளியிட்டது. இதை மூத்த தலைவர் லால்ஜி தாண்டன் வெளியிட்டார்.

அந்த ஒலிவட்டில் கோத்ரா ரெயில் எரிப்பு, பாபர் மசூதி இடிப்பு போன்ற காட்சிகளும், முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளும், இந்துத்துவா கருத்துகளும் இடம் பெற்று இருந்தன. இது பற்றி காங்கிரஸ் கட்சி, தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவித்தது. தேர்தல் பிரசாரத்தின் போது, மதவாதத்தை தூண்டுவதாக, பாரதீய ஜனதா மீது, காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

ஜன்மோர்ச்சா கட்சித்தலைவர் வி.பி. சிங்கும், தலைமை தேர்தல் கமிஷனர் கோபால் சாமியை சந்தித்து புகார் கொடுத்தார். அதில், பாரதீய ஜனதா கட்சியை தடை செய்யவேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த புகார் மனுக்களை தேர்தல் ஆணையம் பரிசீலித்தது. இதுபற்றி தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாரதீய ஜனதா கட்சியின் தலைமைக்கு, முறைப்படி நோட்டீசு அனுப்பி வைக்கப்படும். இதற்கு காரணமானவர்கள் மீது தேர்தல் ஆணையம் போலீசில் புகார் கொடுக்கும்'' என்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, நிருபர்களிடம் கூறியதாவது:

உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜனதா கட்சி வெளியிட்ட சி.டி. ஆட்சேபகரமானது. அதில் உள்ள காட்சிகள், பேச்சுக்கள், மதவாதத்தை தூண்டுவதாக அமைந்து இருக்கிறது. பாரதீய ஜனதாவின் உண்மையான முகம் அதில் வெளியாகி இருக்கிறது.

பாரதீய ஜனதாகட்சியின் அங்கீகாரத்தை, தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, பா.ஜனதா கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் கொடுக்க கூடாது. உத்தரபிரதேச தேர்தலில், அந்த கட்சி போட்டியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு சிங்வி கூறினார்.

இது குறித்து பா.ஜனதா விளக்கம் அளித்து இருக்கிறது. இதுபற்றி, உத்தர பிரதேச பா.ஜனதா தலைவர் கேசரி நாத் திரிபாதி கூறியதாவது:-

பிரச்சினைக்குரிய இந்த சி.டி. தலைவர்களின் கவனத்துக்கு வராமலேயே வெளியாகி இருக்கிறது. இது தலைவர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும், அந்த சி.டி. வாபஸ் பெறப்பட்டு விட்டது. இந்த சி.டி.யை வெளியிட்ட மனோஜ் மிஸ்ரா மீது, கட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இனி அந்த சி.டி. காட்சிகளை, தேர்தல் பிரசாரத்தின் போது பயன் படுத்த மாட்டோம்.

சி.டி. பிரச்சினை குறித்து தேர்தல் கமிஷனிடம் இருந்து எந்த வித நோட்டீசும் இதுவரை வரவில்லை. வந்தால், அதற்கு தகுந்த பதில் கொடுப்போம்.

இவ்வாறு திரிபாதி கூறினார்.

இதற்கிடையே சர்ச்சைக்குரிய சி.டி. தொடர்பாக பாரதீய ஜனதா கட்சிக்கு தலைமை தேர்தல் ஆணையம் நேற்று மதியம் நோட்டீசு அனுப்பியது. அதில் கூறி இருப்பதாவது:-

உத்தரபிரதேச மாநில பா.ஜனதா கட்சி தலைவர் லால்ஜி தாண்டனால் வெளியிடப்பட்ட சி.டி.யில் இடம்பெற்றுள்ள கருத்துக்களும், காட்சிகளும் மாறுபட்ட சமுதாயங்கள் இடையே விரோதத்தையும், வெறுப்பையும் தூண்டும் வகையில் உள்ளது. இதன்மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளது. இதற்காக உங்கள் கட்சியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?.

இதுபற்றி நாளை (இன்று) மதியம் 3 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பதில் வராத பட்சத்தில், தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் சர்ச்சைக்குரிய சி.டி. தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் மீது போலீசில் புகார் செய்யும்படி உ.பி. மாநில தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் நாராயணனுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்பேரில் ஹஸ்ரத்கஞ்ச் போலீசில் அவர் உடனடியாக புகார் செய்தார். அதில் மத கலவரத்தை தூண்ட முயன்றதாக பா.ஜனதா அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச மாநில தலைவர் லால்ஜி தாண்டன், சி.டி.யில் நடித்தவர், வசனம் எழுதியவர் மற்றும் வெளியீட்டில் தொடர்புடையவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 125-வது பிரிவின் கீழ் போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர். இச்சட்டப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு உரிய காலத்துக்குள் பதில் அளிக்கப்படும் என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்து உள்ளது.

நன்றிங்க

ஆமா... FIR ன்னா என்னங்க?

4 comments:

அட்றா சக்கை said...

BJP-க்கு வால்பிடிக்கும் அரைடவுசர் கூட்டம் இதற்கும் ஏதாவது ஜல்லி வைட்திருக்கும். இந்தக் கட்சி ஏதோ புனிதக்கட்சி போல வர்ணிக்கும் புனிதபிம்பங்கள் இப்போது காக்கும் மவுனம், அவர்களின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகிறது.

செய்தியை வெளிக்கொண்டு வந்ததர்கு நன்றி சகோதரர் முஸ்லிம்!!

Unknown said...

கேட்பவன் கேனயன் என்றால் சொல்தவன் வாயில் வந்தது எதனாலும் சொல்லலாம் என்பது மாதிரி தான் இவர்கள் நடவடிக்கை இருக்கிறது. பாவம் உத்தரபிரதேச மக்கள். தகவல்துறை முன்னேறிய காலத்தில் இவ்வளவு தைரியமாக அபாண்டமாக, கேவலமாக சி.டி. வெளியிடுகிறார்கள் என்றால் இவர்கள் பதவிக்காக இந்த நாட்டை என்னனாலும் செய்வார்கள்.

தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று பார்க்கலாம் !

முஸ்லிம் said...

அட்ற சக்கை உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

அவங்க உள்ள கிடக்கை என்னான்னா?

ராமராஜ்யந்தான்!

முஸ்லிம் said...

வாங்க தமிழ் அண்ணாச்சி

எல்லாம் வெறி அண்ணாச்சி. பாரத நாட்டில் பாரதீய ஜனதா கட்சியை தூக்கி எரப்பிலே சொருவிட்டாங்க. அதனாலே உ.பி ல எதுனாச்சும் செஞ்சாகணுங்கறதுக்காக இந்த காவிக் கும்பல் என்னவேணாலும் செய்ய துணிஞ்சிட்டாங்க.

நீங்க சொன்ன மாதிரி தேர்தல் ஆணையம் என்ன செய்ய போவுதுன்னு பொறுத்துதான் பாக்கணும்.

உங்க வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.