Sunday, April 22, 2007

ஆள் கடத்தல் குற்றவாளிகளின் சங்கிலித்தொடர்.

ஆள் கடத்தல்: மேலும் 3 எம்.பிக்களுக்குத் தொடர்பு கைதான கத்தாராவின் பி.ஏ பரபரப்பு தகவல்

ஏப்ரல் 22, 2007 

டெல்லி: வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்துவதில் மேலும் 3 எம்.பிக்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும், இந்த வேலை கடந்த 1993ம் ஆண்டிலிருந்தே நடந்து வருவதாகவும் டெல்லியில் கைதான பாஜக எம்.பி பாபுபாய் கத்தாராவின் உதவியாளர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மனைவி மற்றும் மகன் ஆகியோரின் பாஸ்போர்ட்டில் வேறு பெண்ணையும் ஒரு பையனையும் கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற குஜராத் மாநில பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் பிடிபட்டார். 3 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாபுபாயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதை சில வருடங்களாகவே அவர் செய்து வருவதாகவும், ஆள் கடத்தல் ஏஜென்டுகளுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

இந்த நிலையில் பாபுபாயின் உதவியாளர் ராஜேந்திர சிங் நேற்று கைது செய்யப்பட்டார். இவர்தான் பாபுபாயின் ஆள் கடத்தல் மோசடி வேலைகளுக்கு வலது கரம் போல செயல்பட்டவர்.

டிராவல் ஏஜென்டுளுக்கும், பாபுபாய்க்கும் இடையே பாலம் போல செயல்பட்டு வந்துள்ளார் சிங். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பலரை இதுபோல பாபுபாய் கடத்திச் செல்ல உதவியாக இருந்துள்ளார்.

இதேபோல ராஜேந்திர சிங்கின் தங்கை கிரண், டெல்லியில் பான் பீடா கடை நடத்தி வரும் சுரேந்தர் லால் யாதவ் ஆகியோரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இவர்களில் கிரணுக்கு முக்கிய வேலை தரப்பட்டுள்ளது. அதாவது பாபுபாயுடன் மனைவி வேடத்தில் செல்லும் பெண்களுக்கு பயிற்சி அளிப்பது இவரது வேலை. அதாவது குஜராத்திப் பெண்கள் போல எப்படி நடந்து கொள்வது, சேலை கட்டுவது, பேசுவது என்பது உள்ளிட்டவற்றை கிரண்தான் சொல்லிக் கொடுப்பாராம்.

சுரேந்தர் லால் யாதவும் இந்த ஆள் கடத்தல் வேலையில் முக்கியப் புள்ளி. இவர்தான் ராஜேந்தர் சிங்கிடம் ஆட்களைப் பிடித்துக் கொடுப்பவராம். ஏஜென்டுகள் பலருடனும் இந்த பீடாக் கடை யாதவுக்குத் தொடர்பு உள்ளதாம்.

யாதவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பி. ராம்சொரூப் கோலி, உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. முகம்மது தகீர் கான், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பியுமான சந்திரசேகர் ராவ் ஆகியோரின் பெயர்களை யாதவும், ராஜேந்தர் சிங்கும் தெரிவித்துள்ளனர்.

யாதவ் உள்ளிட்ட கைதான 3 பேரையும் டெல்லி நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அங்கு யாதவ் அளித்த வாக்குமூலத்தில், இந்த மூன்று எம்.பிக்கள் தவிர மறைந்த எம்.பி. ராவ் அவத் ஆகியோரிடம், டிராவல் ஏஜென்டுகள் மகேஷ்குப்தா, ரஷீத் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்தேன்.

எம்.பிக்களிடம் எங்களை அறிமுகம் செய்து வைக்குமாறு இரண்டு பேரும் கேட்டுக் கொண்டனர். இதற்காக ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை எனக்குக் கூலியாக கிடைத்தது. ஆனால் அவர்கள் டிராவல் ஏஜென்டுகள் என அப்போது எனக்கு தெரியாது.

முன்னாள் மத்திய அமைச்சரான சந்திரசேகர் ராவை, அவரது முன்னாள் செயலாளர் மந்திரமூர்த்தியின் மூலமாக ரஷீத்துக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

அதேபோல கட்டாராவிடம் ராஜேந்தர் சிங்கையும் நான்தான் அறிமுகப்படுத்தி வைத்தேன் என்றார்.

இதையடுத்து யாதவுக்கு 3 நாட்களும், ராஜேந்தர் சிங்குக்கு 5 நாட்களும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். கிரணுக்கு போலீஸ் காவல் மறுக்கப்பட்டு அவரை 10 நாள் சிறைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, தங்களது கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் மீதான புகாரை தெலுங்கான கட்சி மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில சந்திரசேகர் ராவுக்கு சற்றும் தொடர்பு இல்லை. அதேபோல மந்திரமூர்த்தி என்ற பெயரிலும் யாரும் ராவிடம் வேலை பார்க்கவில்லை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, எம்.பிக்கள் மீதான இந்த பரபரப்பு புகார்கள் குறித்து நாடாளுமன்ற லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் அவர் கூறுகையில், இந்தப் புகார்கள் மிகவும் கடுமையானவை. இவை குறித்து 25ம் தேதி நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார் சாட்டர்ஜி.

அமெரிக்காவுக்கு 25 - அரபு நாடுகளுக்கு 5

ஒவ்வொரு நாட்டுக்கும் ஆட்களை சட்டவிரோதமாக கொண்டு போய் விடுவதற்கு விதம் விதமாக ரேட் நிர்ணயித்து வைத்துள்ளது இந்த டிராவல் ஏஜென்டுகள் மற்றும் எம்.பிக்கள் குழு.

அதன்படி அமெரிக்காவுக்கு கொண்டு போய் விடுவதற்குத்தான் அதிகபட்ச ரேட்டாம். அமெரிக்காவில் உள்ள எந்த நகருக்கும் கொண்டு போய் விடுவதற்கு ஒரு ஆளுக்கு ரூ. 25 லட்சம் வரை வாங்குகிறார்களாம்.

கனடா என்றால் 20 லட்சம் ரூபாயும், ரஷ்யாவுக்கு 7 லட்சமும், ஐரோப்பிய நாடுகளைப் பொருத்தவரை இங்கிலாந்து என்றால் 15 லட்சம், மற்ற நாடுகள் என்றால் 10 லட்சம் ரூபாய் பணம் வசூலிக்கின்றனர். அரபு நாடுகளுக்கு போக வேண்டும் என்றால் 5 லட்சம் கொடுத்தால் போதுமாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 900 பேர் வரை இவ்வாறு சட்டவிரோதமாக போயிருப்பதாக கூறப்படுகிறது.

நன்றிங்க

பேரம் பேசி அயல் நாட்டுக்கு ஆட்களை கடத்தும் எம்.பிக்கள் டிராவல் ஏஜெண்டுகளென குற்றவாளிகளின் பட்டியல் விரிவடைந்து கொண்டிருக்கிறது.

காத்திருப்போம்!

7 comments:

Udhayakumar said...

இது எப்படி ஆள் கடத்தலாகும்? சட்ட விரோதம் என்பதே சரி... யாராவது 25 ல்ட்சம் குடுத்து அவர்களையே கடத்த சொல்லுவார்களா? பரபரப்பு ஏற்படுத்துவதற்க்காக என்ன வேண்டுமானாலும் எழுதி தமிழை கொல்கிறார்கள் அறிவிலிகள். இதை தட்ஸ்தமிழ்.காமில் பார்த்து நொந்து போய்விட்டேன்.

"சட்ட விரோத நடவடிக்கைகளில் பாஜக எம்பி" என்பதுதான் சரி

புதுச்சுவடி said...

//பரபரப்பு ஏற்படுத்துவதற்க்காக என்ன வேண்டுமானாலும் எழுதி தமிழை கொல்கிறார்கள் அறிவிலிகள்//


உதயகுமாரின் தமிழிலும் எழுத்துப் பிழைகளும் ஒற்றுப் பிழைகளும் உள்ளன.

மொழிப் பயன்பாடு இருக்கட்டும். அவர்கள் செய்த செயல் சரியா? அல்லது தவறா?

தம்மைத் தேர்ந்தெடுத்து நாடாளும் மன்றத்துக்கு அனுப்பிய மக்களின் குறைகள் தீர ஏதாவது செய்வதை விடுத்துத் தம் பதவியைப் பயன் படுத்திச் சட்டத்திற்கும் நாட்டு மதிப்பிற்கும் முரணாகச் செயல்பட்டுத் தம்மை வளப்படுத்திக் கொள்வதில் இவர்கள் இவர்கள் சாதி/ மதம் /கட்சி வேறுபாடு பாராமல் ஒருமைப் பாட்டைக் காப்பதில் முன்னணியில் உள்ளனர்.

வாழ்க பாரதம்!

வாழ்க பாரதீயர்!

முஸ்லிம் said...

உதயகுமார் உங்கள் வருகைக்கு நன்றி.

கடத்தப்படுபவரும் கடத்துபவரும் பேரம் பேசி சம்மதித்து கடத்தப்படுவது ''ஆள் கடத்தல்'' தமிழுக்கு எதிரானதல்ல.

தன்னை சர்வதேச விமான நிலைய குடியுரிமை - இம்மிகிரேஷன் பகுதியிலிருந்து கடத்தி விடுவதற்காக 25 லட்சம் கொடுக்கிறார்.

உன்னை சர்வதேச விமான நிலைய குடியுரிமை பகுதியிலிருந்து கடத்தி அயல் நாட்டில் சேர்த்து விடுகிறேன் என்று கடத்துபவர் 25 லட்சம் வாங்குகிறார்.

''என்னை கடத்தி அக்கரையில் சேர்த்து விடுங்கள்''

''நான் ஆபத்தை கடந்து விட்டேன்''

கடக்க வேண்டியவர் இப்படி சொன்னால் தமிழ் குற்றமில்லை.

''சட்ட விரோத நடவடிக்கை''

இது இன்னொரு பொருத்தமான தலைப்பு.

Udhayakumar said...

முஸ்லீம் மற்றும் புதுச்சுவடி, அள் கடத்தல் என்பதும் சரியே...

http://en.wikipedia.org/wiki/People_smuggling

I was confused with illegal immigration and smuggling.

நண்பன் said...

ஆக, ஆள் கடத்தலில், சமத்துவத்தை நிறுவி இருக்கின்றனர்.

ஆமாம், குடியுரிமை தரும் நாட்டிற்குள் நுழைய இத்தகைய தில்லுமுல்லுகளில் ஈடுபடுவது சரி, குடியுரிமையை எந்த ஒரு நிலைமையிலும் அனுமதிக்காத அரபு நாடுகளுக்கு, எதற்காக ஆட்களைக் கடத்திச் செல்கிறார்கள்?

என்றாலும் இந்த கடத்தல் ஆசாமிகள் தான் நமக்கான சட்டங்களை இயற்றித் தரப் போகிறார்கள் என்பது என்ன ஒரு வெட்கக் கேடு?

முஸ்லிம் said...

புதுச்சுவடி உங்கள் வரவக்கும் கருத்துக்கும் நன்றி.

முஸ்லிம் said...

நண்பன் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

இத்தனை லட்சங்கள் கொடுத்து குறுக்கு வழியில் அயல் நாட்டுக்கு போக வேண்டிய அவசியமென்ன வந்தது? இன்று எந்த நாட்டுக்கு போவதென்றாலும் சுற்றலா விஷாவில் போக முடியுமே. பின் எதற்காக இந்த சட்ட விரோத செயல்?

தாராளமாக ஒரு லட்சம் செலவழித்தால் போதும் நேர்மையாக அரபு நாட்டில் போய் இறங்கலாம்.

ஐந்து லட்சங்கள் கொடுத்து சட்டத்தை ஏமாற்றும் வேலை எதற்கு?

ஒன்று மட்டும் புரிகிறது!

கனடாவுக்கு கள்ளத்தனமாக கடத்தப்படுபவர்கள் கொள் முதலில் லாபமில்லாமலா முப்பது லட்சங்களை முதலீடு செய்வார்கள்?