மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க திட்டம்
திங்கள்கிழமை, ஜனவரி 14, 2008
மதுரை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மொத்தமாக பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தை மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் விரைவில் செயல்படுத்த உள்ளது.
ஏராளமான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி, பல ஆண்டு கோரிக்கைக்குப் பிறகு 2007 டிசம்பர் 17ம் தேதி மதுரையில் பாஸ்போர்ட் அலுவலகம் துவக்கப்பட்டது.
மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த அலுவலகம் துவங்கிய நாளில் இருந்து கூட்டம் அலைமோதுகிறது.
திருச்சி அலுவலகத்தைப் பிரித்தால் போதிய மக்கள் ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்ததால் தான் மதுரையில் புதிய அலுவலகத்தை துவக்குவதற்கு ஆரம்பம் முதல் மத்திய அரசு தயக்கம் காட்டி வந்தது. அந்த தயக்கம் தேவையற்றது என்று தற்போது வரும் கூட்டம் நிரூபித்து வருகிறது.
திருச்சி அலுவலகத்தை விட மதுரை அலுவலகத்தில் தினந்தோறும் கூட்டம் அதிகமாக வருகிறது. இதற்கு முக்கிய காரணம், தென் மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு செல்வது தான் எனத் தெரிய வந்துள்ளது.
துவக்கப்பட்ட நாள் முதல் 15 வேலை நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல், இமிக்ரேசன் சான்றிதழ் பெறுதல் போன்ற வேலைகளுக்காக 7,000 பேர் மதுரை அலுவலகம் மூலம் பயன் பெற்றுள்ளனர்.
திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மொத்தமாக பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால் மதுரை அலுவலகத்தில் இந்த திட்டம் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை. இதற்கு காரணம் மதுரை அலுவலகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது தான்.
தற்போது மதுரை அலுவலகத்தில் 22 பேர் பணியாற்றுகின்றனர். இப்போது வரும் கூட்டத்தையே இவர்களால் சமாளிக்க முடியவில்லை. இந்த அலுவலகம் முழுமை பெற வேண்டுமானால் மேலும் 35 ஊழியர்கள் தேவையாம். இது பற்றி மத்திய அரசுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் மத்திய அரசு இதுகுறித்து நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
இருப்பினும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மொத்தமாக பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தை மதுரை அலுவலகம் விரைவில் செயல்படுத்த உள்ளது. அதற்குள் போதிய ஊழியர்களை நியமிக்க மத்திய வெளியுறவு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள்.
நன்றிங்க
பொதுவானவை.
No comments:
Post a Comment