Friday, January 04, 2008

இதான் புது வருஷமா?

மும்பை : பெண்களை மானப்பங்கப்படுத்திய கும்பலில் 7 பேர் கைது







மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 3 ஜனவரி 2008 ( 18:30 IST )

ஒட்டு மொத்த மும்பையையும் உறைய வைக்கும்விதமாக நடந்தேறிய புத்தாண்டு தின இரவு கொடூரச் சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை ஜூஹூ கடற்கரையையொட்டி அமைந்திருக்கும் ஓட்டல் ஒன்றில் புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 2 பெண்கள், நள்ளிரவு 1.40 மணிக்கு பிறகு கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அவர்களில் ஒரு பெண்ணின் கணவரும், மற்றொரு பெண்ணின் ஆண் உறவினரும் உடன் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சுமார் 70 முதல் 80 பேர்கொண்ட கும்பல் அந்த பெண்களை சூழ்ந்துகொண்டு அவர்களது ஆடைகளை கிழித்தும், கைவைத்தும் மானப்பங்கப்படுத்தியது.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் புகைப்படக்காரர்கள் இச்சம்பவத்தை புகைப்படமாக எடுத்ததோடு, போலீசாருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்தனர்.

இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த பெண்களை அந்தக் கும்பலிடமிருந்து மீட்டனர்.இது தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளியாகி, மும்பை வாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இச்சம்பவம் தொடர்பாக புகார் கொடுக்க அந்த (கலிஃபோர்னியாவில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்திய ) பெண்கள் விரும்பவில்லை என்ற போதிலும், போலீசார் இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை ஏதும் கொடுக்காமல் தட்டிக் கழித்தனர்.

மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மும்பை போலீஸ் கமிஷனர் ஜாதவ், சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம்தான் என்றும், நீங்கள்தான் உங்கள் மனைவிமார்களை இதுபோன்று வெளியில் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் அலட்சியமாக கூறியிருந்தார்.

அவரது இந்த பேட்டி மும்பைவாசிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடந்த சம்பவம் தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த புகைப்படக்காரர்கள் இருவரும் புகார் கொடுக்க சென்ற போதும் அதனை பதிவு செய்யாமல், சம்பவம் நடந்தது எங்கள் ஏரியாவில் இல்லை எனக் கூறி அவர்களை பல மணி நேரம் போலீசார் அலைக்கழித்தனர்.

பின்னர் உயரதிகாரிகள் தலையிட்டதைத் தொடர்ந்தே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து புகைப்படங்களில் காணப்பட்ட அடையாளத்தின் அடிப்படையில், முதல்கட்டமாக குற்றவாளிகளில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதர குற்றவாளிகளைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என மும்பை காவல் துறை அறிவித்துள்ளது.

இதனிடையே நடந்த அந்த பயங்கரமான சம்பவத்தை தாம் மறக்க விரும்புவதாகவும், அதே சமயம் தாம் கற்பழிக்கப்படவில்லை என்றும், ஆடைகள் ஏதும் கிழிக்கப்படவில்லை என்றும், ஊடகங்கள்தான் இச்சம்பவத்தை பெரிதுபடுத்திவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கூறியுள்ளார்.

அதே சமயம் சம்பவம் நடந்தபோது தம்மை காப்பாற்ற வராத மும்பைவாசிகள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அந்த பெண், இனிமேல் தாம் ஒருபோதும் தன் வாழ்க்கையில் இந்தியாவில் பார்ட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)

நன்றிங்க

இதுதான் புத்தாண்டு கொண்டாட்டமா?

சுதந்திரம் வேண்டுமென நள்ளிரவில் நடமாடும் பெண்கள் இச்சம்பவத்தை சிந்திக்க வேண்டும்.
எழுபது பேர்களின் கழுகுப் பார்வைக்கு இரையாகிய இரு அப்பாவிப் பெண்களின் உள்ளம் எப்படி துடித்திருக்கும்.

நல்ல புத்தாண்டு தொடக்கம் அந்தப் பெண்களுக்கு (!?)

No comments: