Monday, March 17, 2008

விவாகரத்தில் சம உரிமை!

ஆண்களுக்கு இருப்பது போல்
முஸ்லிம் பெண்களுக்கும் கணவரை பிரியும் உரிமை உண்டு
அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அறிவிப்பு


லக்னோ, மார்ச்.17-

"ஆண்களைப்போல், முஸ்லிம் பெண்களுக்கும் கணவரை பிரியும் உரிமை'' உண்டு என்று, அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி நபர் சட்ட வாரியம் அறிவித்து உள்ளது.

முஸ்லிம் சமூகத்தில், மூன்று முறை

`தலாக்' என்ற வார்த்தையை சொல்லி மனைவியை பிரியும் பாரம்பரிய உரிமை இதுவரை ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

பெண்களுக்கும் அங்கீகாரம்

இப்போது முதன் முறையாக, முஸ்லிம் பெண்களுக்கும் கணவரை பிரியும் உரிமை உண்டு என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஷரியத் சட்டப்படி
`திருமண விதிமுறைகளை' அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி நபர் சட்ட வாரிய தலைவர் ஷெய்ஸ்டா அம்பர் நேற்று வெளியிட்டார்.

"ஷரியத் சட்ட விதிமுறைகளின்படி, பெண்களுக்கு தங்கள் கணவரை பிரிவதற்கு (குலா) முழு அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. ஷரியத் சட்டத்தில் ஏற்கனவே இந்த விதிமுறை இடம் பெற்று இருந்தாலும், ஆணாதிக்க சமுதாயத்தில் இதுவரை இந்த விதிமுறை அறிமுகப் படுத்தப்படவில்லை'' என்று அப்போது அவர் கூறினார்.
கணவர் முன்வராவிட்டாலும்
4 ஆண்டுகளாக கணவர் காணாமல் போய்விட்டாலோ, வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்திருந்தாலோ, திருமணத்துக்கு முன்போ அல்லது பின்போ எய்ட்ஸ் போன்ற நோய் இருந்து அதை மறைத்து இருந்தாலோ, அல்லது உணவு, உடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட அந்த பெண், கணவரை பிரிவதற்கு இந்த விதிமுறை அனுமதி அளிக்கிறது.

அதே நேரத்தில் மனைவியை பிரிவதற்கு சம்பந்தப்பட்ட கணவர் முன்வர வில்லை என்றால், திருமணத்தின்போது கணவர் கொடுத்த `மெகர்' பணத்தை திருப்பிக்கொடுத்து விட்டு கணவரை பிரிவதற்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தலாக் முறையில் பிரிவதற்கு முன்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கணவன்-மனைவி இருவரும் 3 மாதங்கள் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

3 படிவங்கள்

முதன் முறையாக திருமணத்தின்போது 3 படிவங்களை நிரப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி, திருமணத்தை நடத்தும் அமைப்பு (பீரோ), மணமகன்-மணமகள், மற்றும் திருமணத்தை நடத்தும் காஜி ஆகியோருக்கு இந்த படிவங்கள் வழங்கப்படவேண்டும். இதன்மூலம் திருமணம் தொடர்பாக எந்த சர்ச்சைக்கும் இடமளிக்காமல் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் சட்டபூர்வமான ஆவணங்கள் (படிவங்கள்) இருக்கும்.

திருமணத்தை அலுவலகத்தில் பதிவு செய்வது, திருமண ஒப்பந்தத்தில் மணமகன்-மணமகள் இருவருடைய போட்டோக்களையும் ஒட்டுவதன்மூலம் ஆண், பெண் இருவருக்கும் புதிய விதிமுறைகளின்படி சம உரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது.

சம உரிமை

முஸ்லிம் திருமணம் தொடர்பாக புதிய விதிமுறைகளை வெளியிட்டபின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரிய தலைவர் ஷெய்ஸ்டா அம்பர், "முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்தின திருமண விதிமுறைகளுக்கும் புதிய விதிமுறைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக'' தெரிவித்தார்.

முந்தைய சட்டத்தில் குரானில் குறிப்பிட்டுள்ளதைப்போல் பெண் உரிமைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் புதிய விதிமுறைகளில் இரு தரப்பினருக்கும் சம உரிமை வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

நன்றிங்க

விவாக ஒப்பந்தத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இஸ்லாம் சம உரிமை வழங்கியிருக்கிறது. விவாகத்தில் இருவரும் சம்மதம் தெரிவித்து வாழ்க்கையில் இணையும் ஆண். பெண் இருவரும் பின்னர் பிரியும் நிலை ஏற்பட்டால் விவாகரத்துக்கோருவதிலும் இருவருக்கும் சம உரிமை இஸ்லாம் வழங்கியுள்ளது. இந்த உரிமைகள் இன்று, நேற்று வழங்கியதல்ல 1400 ஆண்டுகளுக்கு முன்பே சட்டபூர்வமாக எழுத்து வடிவத்தில் இவ்வுரிமைகளை இஸ்லாம் வடித்துள்ளது.

எனினும், அறியாமையின் காரணமாக பெண்களுக்கான உரிமை மறைக்கப்பட்டு, இன்று சீர் திருத்தம் செய்வது வரவேற்கத்தக்கது.

2 comments:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நானும் புதிதாக இணையத்தில் பதிவு இட துவங்கியுள்ளேன். ஆங்கிலத்தில் கிடைக்கும் நல்ல கட்டுரைகளையும், பதிவுகளையும் தமிழ் பேசும் உம்மத்தினருக்கு கிடைத்திட செய்ய வேண்டும் என்பதே அவா. iniyaislam.wordpress.com என்பது என் தள முகவரி. ஏதேனும் தவறிருந்தால் சுட்டிக் காட்டவும்.

இந்த தளத்தினை சத்தியமார்க்கம் மூலம் கண்டறிந்தேன். இந்தப் பதிவைப் பற்றிக் கூற எதுவுமில்லை. சிறிது காலத்திற்கு முன்னரே வந்திருக்க வேண்டிய மாற்றம் என்றே படுகின்றது. எனினும், இதை குர்'ஆன் மற்றும் சுன்னத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த இன்னும் காலதாமதம் ஏற்படலாம். இந்திய முஸ்லிம்களிடத்தில் இன்னும் கலாச்சார தாக்கம் அதிகம் உள்ளது, அதைத் தாண்டி, உண்மையான இஸ்லாத்தை பின்பற்ற அல்லாஹ்வே அருள் புரிய வேண்டும்...ஆமீன்.

wassalaam,
sister in islam

முஸ்லிம் said...

Amaan உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

இனிய இஸ்லாம் என்ற உங்கள் தளத்ததைப் பார்த்துப் பின்னர் கருத்து எழுதுகிறேன்.