Saturday, February 25, 2006

அவலம்.

சுய மரியாதை முன்னேற்றத்தில் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு மனித பண்பாடுகள் உயர்ந்திருக்கிறது. அதனால் என்ன? சமூகத்தில் பழைய பண்பாட்டு மரபு - கலாச்சாரத்தை!? கட்டிக் காப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள் எனும்போது பெருமையாக!? இருக்கிறது. 20ம் நூற்றாண்டில் - 1996ல் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட சமூக அவலம் செய்தியாக கீழே. அவலம் நிறைவேற தீர்ப்பு வழங்கிய புண்ணியவான்களில் பள்ளி ஆசிரியரும் ஒருவர், அடடா... வாழ்க (கட்டாய) காலில் விழ வைக்கும் கலாச்சாரம்.

செய்தி

விஜயகுமாரி(32) என்ற நர்ஸ் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதர நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கும் தீரன் சின்னமலைப் போக்குவரத்துப் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றிய திருமலைச்சாமி என்பவருக்கும் சென்ற ஆண்டில் திருமணம் நடந்தது.

விஜயகுமாரி கொண்டு வந்த வரதட்சணையில் திருமலைச்சாமி திருப்தி அடையவில்லை. ''இன்னும் 25 ஆயிரம் ரூபாய் கொண்டு வா'' என்று கொடுமைப்படுத்தினார். அந்த அளவு பணம் கொண்டு வர இயலாததால், அந்தப் பெண்ணை எரித்து விடவும் முயற்சி செய்தனர். 16.01.96ல் இந்த சம்பவம் நடந்தது. அதிலிருந்து தப்பி தனது பிறந்த வீடு சென்று வாழ்ந்து வந்தார் விஜயகுமாரி.

இதைத் தொடர்ந்து உச்சக்கட்டக் கொடுமை அரங்கேறியது.

அந்தக் கணவன் சார்பாக பச்சப் பெருமாள் கிராமத்தில் பஞ்சாயத்து கூடியது. அங்கு அப்பாவிப் பெண் விஜயகுமாரி வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டாள்.

விஜயகுமாரிதான் குற்றவாளி என்று ஒரு சார்பாக பஞ்சாயத்து முடிவு செய்து ''கணவனுடன் நீ சேர்ந்து வாழ வேண்டும், இல்லையென்றால் நீ ரூபாய் 45ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும்'' என்று 'தீர்ப்பு' கூறப்பட்டது. ''என்னால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது. அபராதப் பணம் கட்டுவதற்கும் எனக்கு வசதியில்லை'' என்று கூறி அழுதிருக்கிறார் அந்தப்பெண்.

''நீ அபராதம் கட்ட வேண்டும், இல்லையென்றால் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து வணங்க வேண்டும். நீ ஒவ்வொரு முறை விழும் போதும் அபராதத்தில் ரூபாய் 5 குறைப்போம்'' என்று இரக்கமில்லாமல் கூறினார்கள் பஞ்சாயத்து 'நீதிபதிகள்'

அந்தப் பெண் தொடர்ந்து 4 மணி நேரம் காலில் விழுந்து எழுந்தார். அப்படியும் 4800 தடவை காலில் விழுந்து 24 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையைத்தான் அவரால் கழிக்க முடிந்தது. ரூபாய் 21ஆயிரம் பாக்கி இருந்ததாம். அந்தத் தொகையைக் கட்டாயப்படுத்திப் பிடுங்கிக் னொண்டார்களாம்!

போலீசுக்குப் போனால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதால் பிப்ரவரியில் நடந்த இந்த சம்பவத்தைப் பற்றி விஜயகுமாரி போலீசிலும் புகார் செய்யவில்லை. அதையும் மீறி உப்பிலியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தாராம். அவர்கள் வழக்குப் பதிவு செய்யாமல், பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி பஞ்சாயத்தாரிடம் கூறியிருக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்யாமல் நாட்களைக் கடத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

இனி பொறுக்க முடியாது என்ற நிலையில் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் அனார்கலி பேகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். விஜயகுமாரியின் கணவன், நாத்தனார்கள், பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவரான பள்ளி ஆசிரியர் ரங்கராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் 8 பேர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

2 comments:

முஸ்லிம் said...

ஒவ்வொரு தடவையும் காலில் விழும்போது மெனக்கெட்டு எண்ணிக்கையை, (பால் கணக்கு மாதிரி) கணக்கிட்டிருக்கிறார்களே அதுதான் பெரிய கொடுமையப்பூ

இளந்திரையன் said...

படித்த உங்களைப் போன்ற சமூக அக்கறையுள்ளவர்கள் இவ்வாறு பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி செய்வதில் பின்னிற்பது தான் இத்தகைய கொடுமைகள் நாளும் பொழுதும் நடப்பதற்கு அதுவும் தமிழ்நாட்டில் நடப்பதற்கு காரணம் என்பதை எப்போது தான் உணர்ந்து கொள்ளப்போகிறீர்களோ?

உணர்ந்து கொண்டால் தானே உதவி செய்வது பற்றி யோசிக்கலாம்.

-அன்புடன் இளந்திரையன்