Thursday, February 09, 2006

முனைவர் மங்கள முருகேசன் பேட்டி!

(மக்கள் உரிமை வாரப் பத்திரிகையிலிருந்து)

'உண்மையைச் சொல்லியே தீர வேண்டும்'
முனைவர் மங்கள முருகேசன் பேட்டி


தமிழக அரசு 12ம் வகுப்பு வரலாற்றுப் பாடநூலில் 19வது பாடமான 'விடுதலைக்குப் பின் இந்தியா' என்ற பாடத்தில் சில முக்கியமான வரலாற்றுக் குறிப்புகளை திடீரென்று நீக்கியது. ''மகாத்மா காந்தி, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே என்ற இந்து வெறியனால் கொலை செய்யப் பட்டார்'' என்பதே தமிழக பாடநூலிலிருந்து நீக்கிய முக்கியமானப் பகுதியாகும். இதைக் கடந்த வாரம் எழுதியிருந்தோம்.

பன்னிரெண்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடநூல் 7 வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டு, நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்ட பிறகே வெளியிடப்பட்டது. அப்போதெல்லாம் கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்புலம் குறித்து ஏதும் சொல்லாமல், பாஜகவும் - சங்பரிவார இயக்கங்களும் மிரட்டல் விடுத்த பிறகு, கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணி பற்றியக் குறிப்புகளை அரசு நீக்கியது சரியல்ல. கல்வியில் காவியைப் புகுத்துவது ஆபத்தானது என்றும் எச்சரித்திருந்தார், இந்தப் பாடநூல் ஆசிரியர் குழுவின் தலைவர் டாக்டர் மங்கள முருகேசன்.

இவர் 100க்கும் மேற்பட்ட வரலாற்று நூல்களை எழுதியவர். இரண்டு பிஎச்.டி பட்டங்களைப் பெற்றவர். (காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றிருப்பது ஒரு சுவையானத் தகவல்.)

இவருக்கு சங்பரிவார சக்திகள் மிரட்டல் விடுத்துள்ளன. அவற்றையெல்லாம் துச்சமாய் மதிக்கும் இவர் கடவுள் மறுப்பாளர் அல்ல, பக்திமிக்க இந்துதான்.

கொல்கத்தாவில் சென்ற வாரம் நடைபெற்ற இந்திய வரலாற்றுக் குழுவின் (Indian History Congress) சிறப்புக் கூட்டத்தில் தமிழகக் கல்வித்துறை, கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்ன ணியை நீக்கியிருப்பதை எடுத்துரைத்து தமிழக அரசின் வரலாற்றுத் திரிபுக்கு எதிராகத் தீர்மானமும் நிறைவேற்றச் செய்துள்ளார்.

IHCன் சிறப்புக் கூட்டத்தை முடித்து சென்னை திரும்பியவுடன் முதலில் நம்மிடம் மனம் திறந்தார் டாக்டர் மங்கள முருகேசன். அவரோடு உரையாடியதிலிருந்து...

மக்கள் உரிமை: காந்தியடிகளைக் கொன்ற கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்புலம் குறித்து நீங்கள் வரலாற்றுப் பாடநூலில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

மங்கள முருகேசன்: இந்தியா விடுதலை அடைந்த பிறகு நடைபெற்ற மிகமுக்கியமான வரலாற்றுச் சம்பவம் காந்தியடிகளின் படுகொலை. இதைப் பற்றிய உண்மைகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் 35 ஆண்டு காலம் கல்லூரியில் பேராசிரியராக மாணவர்களுக்குப் பயிற்றுவித்தவன். காந்தியடிகள் படுகொலைப் பற்றிய பாடத்தை நடத்தும் போது மாணவர்களுக்கு இயல்பாக ஏற்படும் சந்தேகம், காந்தியடிகள் கடவுள் பக்திமிகுந்த ஓர் ஆச்சாரமான இந்து. அவரைப் பிற மதத்தை சேர்ந்த யாராவது கொன்றிருந்தால் கூட அதை மதக் காழ்ப்புணர்ச்சி என்று கூறலாம்.

உலகத் தலைவர்களால் போற்றிப் புகழப்பட்ட, இந்து சமயத்திற்குப் பெருமையை சேர்த்த ஆச்சாரமான இந்துவான காந்தியடிகளை, ஏன் ஒரு இந்துவே படுகொலை செய்தார் என்பதுதான் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகம்.

மதவெறி முற்றினால் சொந்த மதத்துக்காரரையே படுகொலை செய்யுமளவுக்கு மூர்க்கத்தனம் பெருகும். மதவாதம் மிக ஆபத்தானது என்பதுதான் கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணியை வெளிப்படுத்துவதன் மூலம் நாங்கள் கூறவரும் கருத்து.

மக்கள் உரிமை: கோட்சே ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகிய பிறகே காந்தியடிகளைக் கொன்றார். காந்தியடிகளைக் கொன்றபோது கோட்சே ஆர்எஸ்எஸ்காரர் அல்ல என்று அத்வானி போன்றவர்களும், பாஜக பரிவாரங்களும் இப்போது சாதிக்கிறார்களே?

மங்கள முருகேசன்: நாதுராம் கோட்சே ஆர்எஸ்எஸ்காரர் இல்லை என்று சொல்பவர்கள் (அத்வானி) கோழைகள் என்று கோட்சேவின் உடன்பிறந்த சகோதரரான கோபால் கோட்சே பதிலடி கொடுத்துள்ளார்.

''நானும், எனது சகோதரர் நாதுராம் கோட்சேவும் எங்கள் வீட்டில் வளர்ந்ததை விட, ஆர்எஸ்எஸ்ஸில் வளர்ந்ததே அதிகம். ஆர்எஸ்எஸ் தான் எங்களுடைய குடும்பம்'' என்று கூறியுள்ளார்.

காந்தியடிகள் கொலை வழக்கில் கோபால் கோட்சேவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நாதுராம் கோட்சே தூக்கில் தொங்குவதற்கு முன்பு, ஆர்எஸ்எஸ்ஸின் தேசியப் பாடலை பாடிவிட்டுத்தான் தூக்கில் தொங்கினான். கோட்சேவின் சாம்பலை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அகண்ட பாரதம் அமைந்த பிறகுதான் கரைக்கப் போவதாக எடுத்து வைத்துள்ளார்கள்.

இந்தியா டுடே, ஃபிரண்ட் லைன் போன்ற ஏடுகள் காந்தியடிகளைப் படுகொலை செய்த கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணி குறித்து பலமுறை எழுதியுள்ளன.

நீங்கள் மிகமுக்கியமான ஒரு செய்தியை கவனிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினர் முறை என்பதே கிடையாது. உறுப்பினர் கட்டணம், உறுப்பினர் அட்டை, சந்தா எதுவுமே ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு கிடையாது. இந்தியாவில் சட்டப்பூர்வமான எந்த இயக்கமும் இப்படி இயங்குவதில்லை.

ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் எத்தனைப் பேர் என்று அதன் தலைவரால் கூட சொல்ல முடியாது. இன்றுவரை உறுப்பினர் அட்டையே இல்லாமல் இயங்கிவரும் ஒரு கூட்டத்தில் ஒருவரை உறுப்பினர் என்றோ, உறுப்பினர் இல்லை என்றோ எப்படிக் கூறமுடியும்?

கோட்சே ஆர்எஸ்எஸ் இல்லை என்கிறது பாஜக. இறுதிவரை அவர் ஆர்எஸ்எஸ்தான் என்று ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறார் அவரது உடன்பிறந்த சகோதரர் கோபால் கோட்சே.

தெருவில் போகிறவர்கள் கூறுவதை விட உடன்பிறந்தவர் கூறும் செய்தியே உண்மையென்று ஏற்க முடியும்.

மக்கள் உரிமை: காந்தியடிகளைக் கொன்ற கோட்சே ஆர்எஸ்எஸ்காரர் இல்லை என்று பாஜகவும், சங்பரிவாரங்களும் மறுப்பதற்குக் காரணம் என்ன?

மங்கள முருகேசன்: அன்றைய ஆர்எஸ்எஸ்காரர்கள் வெளிப்படையானவர்கள். வெறிமிகுந்தவர்கள். உறுப்பினர்களும் குறைவு. ஆகவே, காந்தியடிகளைக் கொன்ற பழியை அவர்கள் பெருமையாகவே கருதினர்.

இன்றைய ஆர்எஸ்எஸ்காரர்கள் பசுத்தோல் போர்த்திய நரிகள். தங்களை சமூக சேவகர்களாக அடையாளப் படுத்துகின்றனர். அதன் அரசியல் கரமான பாஜக பல மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சிக்கு வந்துள்ளது. தேசத்தந்தையைப் படுகொலை செய்த இவர்களின் உண்மை முகம் வெகுமக்களுக்குத் தெரியவந்தால், இவர்களால் மக்கள் ஆதரவைப் பெற முடியாது. ஆகவே, காந்தியடிகளைப் படுகொலை செய்ததை இப்போது மூடிமறைக்க முயலுகிறார்கள்.

மக்கள் உரிமை: இந்தியா டுடே, ஃபிரண்ட்லைன் உள்ளிட்ட பத்திரிகைகள் கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணி குறித்து எழுதியபோது மவுனமாக இருந்த பாஜகவும், சங்பரிவாரமும் மாணவர்கள் மட்டுமே படிக்கின்ற பாடநூல்களில் இடம்பெற்ற கருத்துகளுக்காக ஏன் கொந்தளிக் கிறார்கள்?

மங்கள முருகேசன்: ஒரு நாட்டில் புரட்சி ஏற்பட வேண்டுமானால் புரட்சியை உருவாக்கும் கருத்துக்கள் இரு குறிப்பிட்ட வர்க்கங்களைச் சென்று சேர்ந்தால் போதுமானது. ஒன்று தொழிலாளர் வர்க்கம், மற்றொன்று மாணவர் வர்க்கம்.

மாணவர் வர்க்கத்தின் மனதில் பதியும் கருத்துக்கள் மாபெரும் மாற்றங்களுக்கு வழிகோலும். செய்தி ஏடுகளில் இடம் பெறும் கருத்துகளை விட பாடநூல்களில் இடம்பெறும் கருத்துகளுக்கு கனம் அதிகம். இரண்டாம் வகுப்பில் நாம் படித்த மனப்பாடச் செய்யுளும், அதன் கருத்தும் இப்போதும் நினைவிருக்கும்.

அத்தகைய மாணவ உள்ளங்களில், மதவாதம் கொடியது, அந்த மதவாதம் தான் நமது தேசத்தந்தையின் உயிரைப் பறித்தது என்ற கருத்து அழுத்தமாகப் பதியுமானால் அது மதவாத அரசியல் செய்பவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். அதனால்தான் கொதிக்கிறார்கள், துடிக்கிறார்கள்.

மக்கள் உரிமை: மதவாதம் கொடியது என்பதை தேசத்தந்தை காந்தியைப் படுகொலை செய்த கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கூறித்தான் நிறுவ வேண்டுமா?

மங்கள முருகேசன்: வரலாற்று உண்மைகளைக் கூடுதல் குறை வில்லாமல் உள்ளது உள்ளபடி பதிவு செய்ய வேண்டியது ஒரு கல்வியாளரின் கடமை. மேலும், பாஜக தலைமையிலான முந்தைய மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்த NCERT (NATIONAL COUNCIL FOR EDUCATIONAL RESEARCH AND TRAINING) வெளியிட்ட பாடநூல்களில், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவமே மறைக்கப்பட்டு, 'காந்தியடிகள் இறந்து போனார்' என்று இயற்கை மரணம் போல எழுதினார்கள்.

NCERT வெளியிட்ட வரலாற்றுப் பாடநூல்களில் இடம்பெற்ற ஏராளமான பிழைகளைக் கண்டுபிடித்து ஒரு தனி புத்தகம் எழுதியபோது 130 பக்கங்களுக்கும் மேலாக அது அமைந்தது. 51 ரூபாய் அதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு புத்தகத்தின் பிழைகளே இன்னொரு புத்தகமாக உருவாகுமென்றால், அந்தப் பிழைகள் எல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டவைதானே...

ஆகவே, வருங்காலத் தலைமுறைக்கு வரலாற்று உண்மைகளைச் சொல்லியே தீர வேண்டும் என்பதற்காகவே, கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணியை பாடநூல்களில் இடம்பெறச் செய்தோம்.

8 comments:

அபூ ஸாலிஹா said...

இந்துத்துவாதிகளின் பிரதான ஆயுதமே வரலாறுதானே அபுமுஹை!

"நமக்கான வரலாற்றை நாமே எழுதிக்கொள்ள வேண்டும்" என்று 1939லேயே தெள்ளத்தெளிவாகவே சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் RSS-உடைய குருஜி கோல்வால்கர்.

வருணாசிரமத்தை ஏற்றுக்கொண்ட காந்தியடிகள் இந்து ராஷ்டிரத்தை ஏற்கவில்லை.

எவர் இந்திய மண்ணையே பித்ரு பூமியாகவும் புண்ணியபூமியாகவும் கருதவில்லையோ, அவர் இந்திய கலாச்சாரத்திற்குரியவர் அல்லர் என்ற கலாச்சாரத்திணிப்பிற்குள் வராத முஸ்லிம்களை விலக்கி வைக்கும் இந்துத்துவவாதிகளின் (Cultural Nationalism) கலாச்சார தேசியத்தை எதிர்த்தவர் என்ற அடிப்படையில் காந்தியடிகளாரும் எதிரியாகத்தானிருந்தார்.

மக்கள் மனதிலிருந்து மகாத்மாவை "அகற்ற" முயற்சி நடக்கும் அதேவேளையில், காந்தியைக் கொன்றது RSS இல்லை என்ற வரலாற்று திரிபை நிறுவுவதுதான் எதிர்கால அரசியலுக்கு இன்று செய்யப்படும் முதலீடாக இருக்கும் என்ற உண்மையை இந்தியமக்கள் என்றைக்கோ உணர்ந்து கொண்டார்கள்.

முஸ்லிம் said...

//மக்கள் மனதிலிருந்து மகாத்மாவை "அகற்ற" முயற்சி நடக்கும் அதேவேளையில், காந்தியைக் கொன்றது RSS இல்லை என்ற வரலாற்று திரிபை நிறுவுவதுதான் எதிர்கால அரசியலுக்கு இன்று செய்யப்படும் முதலீடாக இருக்கும் என்ற உண்மையை இந்தியமக்கள் என்றைக்கோ உணர்ந்து கொண்டார்கள்.//

அபூ ஸாலிஹ்!
சரியாத்தான் சொல்லியிருக்கீங்க! பெயரைத்தான் குழப்பிட்டீங்க!!

வருகைக்கு நன்றி!

சிவனடியார் said...

//இந்தியா விடுதலை அடைந்த பிறகு நடைபெற்ற மிகமுக்கியமான வரலாற்றுச் சம்பவம் காந்தியடிகளின் படுகொலை//
ஐயா எதற்க்கு நடந்தது இந்த படுகொலை?
தயவுசெய்து யராவது சொல்லுங்க...

Thangamani said...

பதிவுக்கு நன்றி. வரலாற்றையும், செய்திகளையும் திரித்தல், கேலிசெய்து மலினப்படுத்துதல், உதாசீனம் செய்வதன் மூலம் மக்களிடமிருந்து மறைத்தல் இவைகள் அவர்கள் காலங்காலமாக பயன்படுத்தும் உத்திகளில் அடங்குவதுதான்.

அழகு said...

பெரியாரையும் அம்பேத்கரையும் ஏகாதிபத்திய தாசர்கள் என்று ஏசும் நபர்கள் பின் வரும் கோல்வல்கரின் கருத்தை மனதில் கொண்டால் யார் ஏகாதிபத்தியத்து ஏவல் அடிமைகளாய் இருந்தார்கள் என்பது விளங்கும்.

"பிரிட்டிஷ் எதிர்ப்பு என்பதே தேசபக்தியாகவும், தேசீயமாகவும் சொல்லப்பட்டது. இந்தப் பிற்போக்குத் தனமான பார்வை பல்வேறு அழிவை நோக்கிய விளைவுகளுக்கு வித்திட்டது". (கோல்வல்கர் சிந்தனைக் கொத்து - பக்கம் 143)


இதே கோல்வல்கர் குழுவினர்தான் 1942 ஆகஸ்ட் புரட்சியைக் காட்டிக் கொடுத்து கீழறுப்பு வேலை செய்தனர்.

மேலும் பம்பாய், கராச்சி துறைமுகங்களில் தல்வார் போர்ப்படைக் கப்பலில் பற்றிய ராணுவப் புரட்சியையும் அங்கீகரிக்க மறுத்தனர். (அதில் காங்கிரசும் குற்றவாளியே).


இவரை காந்தி கொலை வழக்கில் குற்றவாளி எனத்தீர்மானிக்க ஆதாரம் இல்லை என நீதி மன்றம் சொன்னது. (தொழில் நுட்பரீதியில் குறைபாடுடைய சாட்சியங்களின் அடிப்படையில்). ஆனால் மரண தண்டனை பெற்ற கோட்சே இந்த நபரின் காலைத்தொட்டு ஆசி பெற்றான் நீதி மன்றத்திலேயே. கோட்சேயின் கடைசி விருப்பமே கோல்வல்கரை சந்திக்க வேண்டும் என்பதாய் இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அவர் மறுத்து விட்டார். (ஏனென்றால் காந்தியின் கொலையைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட ஆர் எஸ் எஸ் க்கு தடை நீக்கம் செய்ய அப்போது மைய அரசுடன் திரை மறைவு பேரம் பட்டேல் உதவியுடன் நடந்து கொண்டிருந்தது)


மேலும் அறிய : http://www.thinnai.com/pl0210068.html

அழகு said...

ஐயா சிவனடியார்,

காலங் காலமாக ஒரு செய்தி திரும்பப் திரும்பச் சொல்லப் பட்டு வருகிறது. 'ஆர்.எஸ்.எஸ். ஊழியர் கோட்ஸே என்பவரால் காந்தி சுட்டுக் கொல்லப் பட்டார்' என்ற செய்திதான் அது.
உண்மையில் இச்செய்தி மீளாய்வுக்குரியதாகும்.

அது படுகொலையெல்லாம் இல்லை; அது ஒரு தற்கொலை என்று நம்புவதற்கே அதிக இடமிருக்கிறது.

காந்தி இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்திருக்கிறார். 'நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் உன்னைக் கொன்று விடுவோம்' என்று அவரை முஸ்லிம் தீவிரவாதிகள் மிரட்டியிருக்கின்றனர். எத்தனைக் காலம்தான் இவர்களின் மிரட்டலுக்கு அஞ்சி, செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருப்பது என்ற மனவேதனையில், அன்றைய தினம் தானாகவே சுட்டுக் கொண்டு உயிரை விட்டார் காந்திஜி. அந்தக் காலத்தில் அதெல்லாம் சகஜமாக நடப்பதுதான்.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், பஜனை கேட்பதற்காக அங்குச் சென்றிருந்த நாதுராம்ஜி என்ற அப்பாவியின் மீது அன்று விழுந்த பழி, இன்றுவரை துடைக்கப் படாமலேயே தொடர்கிறது.

எதுவெதையோ நம்பியாச்சு; இதையும் நம்பித் தொலைங்க!

Anonymous said...

//எதுவெதையோ நம்பியாச்சு; இதையும் நம்பித் தொலைங்க!//

சங்க் பரிவாரத்தின் வரலாற்றுத் திரிபு முயற்சிகளையும், மக்கள் விரோத காட்டுமிராண்டி செயல்பாடுகளையும், நாட்டை சுடுகாடாக்க முயற்சிக்கும் பயங்கரவாத, தீவிரவாத முயற்சிகளையும் கண்டு மனம் நொந்த ஓர் குடிமகனின் உள்ளக் குமுறலை ஒரு வரியில் அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள் அழகு அவர்களே!

உங்கள் பதில் மனம் வெறுத்து போய் வெளிப்பட்டதாயினும் நாளைய இளம் தலை முறை இதுவே உண்மை என்று நம்பாததற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அன்புடன்
இறைநேசன்

முஸ்லிம் said...

அன்புள்ள,

சிவனடியார்
தங்கமணி
அழகு
இறைநேசன்

உங்கள் வரவுக்கும், கருத்திற்கும் நன்றிகள்.

- முஸ்லிம்