Monday, February 20, 2006

கார்ட்டூன் விவகாரம்.

முகம்மது நபிகள் கார்ட்டூன் விவகாரம்: மன்னிப்பு கோரியது டென்மார்க் நாளிதழ்


துபை, பிப். 20: முகம்மது நபிகளின் கார்ட்டூனை வெளியிட்டதற்காக டென்மார்க்கைச் சேர்ந்த பத்திரிகையான 'ஜைலாண்ட்ஸ் - போஸ்டன்' ஞாயிற்றுக்கிழமை மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக, கொட்டை எழுத்துகளில் ஒருபக்க அளவில் மன்னிப்பு கோரும் விளம்பரத்தை அரபு நாடுகளில் வெளியாகும், 'அஷர்க் அல்-அவாசத்' என்னும் நாளிதழில் டென்மார்க் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

"அந்தப் படங்கள், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனத்தைப் புண்படுத்திவிட்டது. நடந்துவிட்ட சம்பவங்களுக்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவ்வாறு நடக்க வேண்டும் என்பது எங்களது எண்ணமில்லை்"

"எந்த மதத்தையும் அவமானப்படுத்த வேண்டும் என்பதோ, அவமதிக்க வேண்டும் என்பதோ எங்களது நோக்கமல்ல. நாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டோம். அதற்காக மன்னிப்பு கோருகிறோம். யாரையும் குறிவைத்து அந்தப் படங்களை வெளியிடவில்லை என்பதை வலியுறுத்தித் தெரிவித்துக்கொள்கிறோம். கருத்து வேறுபாட்டை அகற்றுவதற்கு இது உதவும் என நம்புகிறோம்; கடவுள் ஆசீர்வதிக்கட்டும்'' என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் இறுதியில், ஜைலாண்ட்ஸ் - போஸ்டன் நாளிதழின் தலைமை ஆசிரியர் கார்ஸ்ட்டன் ஜஸ்ட் கையொப்பம் இட்டுள்ளார்.

ஜைலாண்ட்ஸ்-போஸ்டன்' இதழின் இணையப் பக்கத்திலும் அதே மன்னிப்புக் கடிதம் அரபி மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் அந்த கார்ட்டூன்கள் முதன்முதலாக டென்மார்க் நாட்டு நாளிதழான 'ஜைலாண்ட்ஸ்-போஸ்டனி'ல் பிரசுரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியாகும் பல்வேறு இதழ்களும் அதை மறுபிரசுரம் செய்தன. அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அதற்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர். லிபியா, நைஜீரியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் நடந்த போராட்டங்களில் இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர். இந் நிலையில், அந்த கார்ட்டூன்களை வெளியிட்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளது, டென்மார்க் நாளிதழ்.

செய்தி - தினமணி

3 comments:

முஸ்லிம் said...

முஸ்லிம்களின் வன்முறைப் போரட்டத்தினாலேயே 'ஜைலாண்ட்ஸ் - போஸ்டன்' மன்னிப்பு கோரியது என்று எழுதத் துவங்குபவர்கள் தயராகிக் கொள்ளலாம்.

நல்லடியார் said...

முஸ்லிம்களிடம் இழந்து விட்ட வர்த்தக,பொருளாதார வாய்ப்புகளுக்காக, சமரசத்திற்கு அப்பாற்ப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை கைவிட்டு மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் இவர்களின் இரட்டை வேடமும் சந்தர்ப்பவாதமும் அம்பலமாகியுள்ளது.

பிரிந்து கிடந்த முஸ்லிம்களை ஓரணியில் இணைந்த புண்ணியம் அப்பத்திரிக்கையின் கார்ட்டூனிஸ்டுகளுக்கு கிட்டட்டும்.

முஸ்லிம் said...

நல்லடியார், உங்கள் மறுமொழிக்கு நன்றி!

-முஸ்லிம்