Wednesday, February 08, 2006

அம்மாடி இதுதான் அரசியலா?

(மக்கள் உரிமை பிப்ரவரி, 03-09,2006 வாரயிதழில் வெளிவந்த செய்தி!)

காந்தியடிகளைக் கொன்ற கோட்சே, ஆர்எஸ்எஸ் இல்லையாம்...!

தமிழக அரசு முடிவு! கல்வியாளர்கள் அதிர்ச்சி!!

தேசத் தந்தை காந்தி படுகொலை தொடர்பான பாடத்தில் தமிழகக் காவல்துறை செய்த திடீர் திருத்தம் வரலாற்றாய்வாளர்களையும், கல்வியாளர்களையும் பொங்கியெழ வைத்துள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளுக்காக தமிழக பள்ளிக் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தில் காந்தியடிகள் படுகொலை பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. அதில், மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் வினாயக் கோட்சே, ''ஒரு இந்து வெறியன், ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர்'' என்ற தகவலும் இடம்பெற்றிருந்தன.

அக்.3, 2005 தேதியிட்டு, பள்ளிக் கல்வி இயக்கம் அனுப்பிய சுற்றறிக்கையில், காந்தியாரைக் கொன்ற கோட்சேயின் ஆர்.எஸ்.எஸ் பின்னணியை பாடத்திட்டத்தில் இருந்து நீக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆர்எஸ்எஸ் கும்பலின் நெருக்கடிக்கு தமிழக கல்வித்துறை பலியாகி விட்டதோ என்ற சந்தேகத்தை இந்நடவடிக்கை கிளப்பியுள்ளது. பாடப்புத்தகங்களில் வரலாற்றுத் திரிபுகளுக்கெதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவின் உயர்நிலை நிர்வாகிகள், முன்னாள் துணைவேந்தர்கள் சே.சாதிக், பி.ஜெகதீசன், வே.வசந்திதேவி ஆகியோர் இதற்கெதிராக நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர். இதன் உறுப்பினரான ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியரும், அண்ணா ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநருமான எம்.எப்.கான், ஆர்.எஸ்.எஸ் நெருக்கடிக்கு அரசு பலியாகி இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.

பாடப்புத்தகங்களில் கோட்சே ஓர் ஆர்.எஸ்.எஸ் வெறியர் என்று எழுதப்பட்டதற்கு பாஜக முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. பாஜக எம்.எல்.ஏ எச்.ராஜா இதுகுறித்து பாடநூல் குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். பாடநூல் குழுவினர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோரினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர் எஸ் எஸ்ஸும் இதற்காக ஒரு வழக்கு போட்டுள்ளது. ஆனால் பாடநூல் குழுவினர் இதற்கெல்லாம் அசரவில்லை. பாடநூலாசிரியர் குழுவின் தலைவரான திரு. என்.கே. மங்கள முருகேசன், ''ஆர் எஸ் எஸ் பற்றியும், கோட்சே பற்றியும் பாடநூல்களில் நாங்கள் எழுதியுள்ள தகவல் அசைக்க முடியாத உண்மை. அதற்கு வலுவான ஆதாரங்களும் உண்டு. அவற்றை நீக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆர்.எஸ்.எஸ் விடுக்கும் மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை என்று கூறினார்.

வரலாற்றாசிரியர் தங்கள் கூற்றில் மிக உறுதியாக நிற்கும்போது பள்ளிக்கல்வி இயக்குனரகம், பாடப்புத்தகத்தில் திருத்தம் செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பியது கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாடநூலாசிரியர் உறுப்பினர் பேராசிரியர் எல்.ராமமூர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குனர், தான் அனுப்பிய சுற்றறிக்கை குறித்து விளக்கம் தரவேண்டும் என்று கோரியுள்ளார். காந்தியைப் படுகொலை செய்த கோட்சேவின் ஆர்.எஸ்.எஸ் பின்னணி குறித்த வலுவான ஆதாரங்களை பாடநூலாசிரியர் குழுத் தலைவர் மங்கள முருகேசன் சமர்ப்பித்துள்ளார்.

கோட்சே பற்றிய எனது கருத்துக்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை, மன்னிப்பு கேட்கவும் போவதில்லை. வலுவான ஆதாரங்களோடு நான் குறிப்பிட்ட கருத்தை தமிழக அரசு பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கியிருப்பது எனக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது என்கிறார் பாடநூல் ஆசிரியர் மங்கள முருகேசன்.

தேசத்தந்தை காந்தியார் படுகொலை பற்றிய உண்மைகளை ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற இந்துத்துவ சக்திகள் மூடிமறைக்க முயலுகின்றன. இந்த வன்முறைக் கும்பலைப் பற்றி வருங்காலத் தலைமுறை அறிந்து கொள்ளக் கூடாது என்பதே அவர்களின் எண்ணம்.

மதவெறிக் கும்பலின் மிரட்டலுக்கு தமிழக அரசு பணிந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கல்வியாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

இந்திய வரலாற்றுப் பேராயம் (ஒய்க்ண்ஹய் ஐண்ள்ற்ர்ழ்ஹ் ஈர்ய்ஞ்ழ்ங்ள்ள் ஒஐஈ) தலைவருக்கு இதுகுறித்து மங்கள முருகேசன் விரிவான கடிதமும் எழுதியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள சாந்தி நிகேதனில் ஜனவரி,28-30, 2005ல் கூடிய இந்திய வரலாற்றுப் பேராயத்தின் கூட்டத்தில், பாஜக - சங்பரிவார் கும்பலின் வரலாற்றுத் திரிபுகளுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வித் திட்டத்தில் காவித் தலையீடுகளைக் கடுகளவும் அனுமதிக்கக் கூடாது, கல்வியாளர்களுக்கு முழுமையான கருத்துச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒளரங்கசீப் போன்ற முஸ்லிம் மன்னர்களைக் கொடுமையாளர்களாகவும், அக்பர் போன்ற ஒழுக்கம் கெட்டவர்களை மகா புருஷர்களாகவும் சித்தரிக்கின்ற சங்பரிவார கும்பல், காந்தியடிகளைக் கொன்ற தனது கயமைத்தனத்தை மூடிமறைக்க முழுமூச்சாய் களமிறங்கியுள்ளது.

வரலாற்றுத் திரிபுகள் மூலம் வருங்காலத் தலைமுறையை வஞ்சிக்க முயலும் கொடியவர்களுக்கு மதச்சார்பின்மையைக் காப்பதாகப் பதவிப் பிரமாணம் எடுத்தள்ள அரசு பணிவது அவலகரமானது.

காந்தியைக் கொன்ற கோட்சேவை ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து நீக்குவது தமிழக அரசின் வேலையல்ல. உண்மைகளை மறைப்பதும், அவற்றைத் திரிப்பதும், பொய்களை உண்மைகளாய்ச் சொல்வதும் வரலாற்றுத் திரிப்பின் வகைகள். இவற்றை பாஜக ஆளும் மாநிலங்கள் முழுவீச்சில் நடைமுறைப்படுத்துகின்றன.

சமூக நீதி பூமியான தமிழகத்திலும் சங்பரிவாரின் சதிகள் அரங்கேறுவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு உடனடியாக வரலாற்றுத் திரிபை சரிசெய்ய ஆவணச் செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

சங்பரிவாருக்கு ஆதரவாக தமிழக அரசு எடுத்த இந்த நடவடிக்கையை தெஹல்கா ஆங்கில வார இதழில் அதன் சென்னை செய்தியாளர் வினோஜ்குமார் அம்பலப்படுத்தியுள்ளார். மற்ற தமிழ் இதழ்கள் இந்தச் செய்தியை கண்டு கொள்ளவேயில்லை.

2 comments:

╬அதி. அழகு╬ said...

போகிற போக்கப் பார்த்தால் இன்னும் கொஞ்சம் காலம் கழித்து, 'காந்திஜி தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனார்' என்று வரலாறு மாறிப் போனாலும் போகும்.

முஸ்லிம் said...

வாங்க அழகு சார்!

உங்கள் கருத்தை நோக்கி செல்லும் பரிணாம வளர்ச்சி தான் இந்த வரலாற்றுப் புரட்டல்கள். கையோடு இதையும் -NCERT வெளியிட்ட பாடநூல்களில், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவமே மறைக்கப்பட்டு, 'காந்தியடிகள் இறந்து போனார்' என்று இயற்கை மரணம் போல எழுதினார்கள்.- படியுங்கள்.

நான் படித்ததையும் கீழே தருகிறேன்.

நாடு, இந்தியா - பாகிஸ்தான் என இரண்டாக பிளவுபட்ட பிரிவினைக் காலகட்டத்தில் சிறுபான்மை சமூகத்தார்களான முஸ்லிம்களின் மீது வன்தாக்குதல்தல்களை நடத்தி அவர்களின் உயிர் உடமைகளை வேட்டையாடி நாடெங்கிலும் பதட்டத்தையும் பீதியையும் உருவாக்கி அதன் மூலம் வளர்ச்சியை பெற்று வந்த RSS ற்கு ஒரு தற்காலிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட சம்பவமாகும் காந்திஜி படுகொலையை ஒட்டி அரசு அதன் மீது விதித்த தடை உத்தரவு.

அகிம்சை, அரிஜன முன்னேற்றம், தீண்டாமை ஒழிப்பு, இந்து - முஸ்லிம் ஐக்கியம் போன்ற காந்திஜியின் கொள்கைகளின் மீதும் அவர் கடைபிடித்து வந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு கொள்கையின் மீதும் RSSற்கு இருந்த கருத்து வேறுபாடு படிப்படியாக வளர்ந்து அது இறுதியாக காந்திஜியின் படுகொலையில் வந்து முடிந்தது.

1948ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் பிர்லா மாளிகையில் நடைபெற்ற ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் வைத்து RSSன் புனேபகுதி தலைவரான 'நாதுராம் வினாயக் கோட்சே' தனது சகாக்களின் உதவியோடு காந்திஜி அவர்களை சுட்டுக்கொன்றான். இச்செய்தியறிந்து இந்தியாவும் - உலக நாடுகளும் அதிர்ச்சியுற்றன.

ஆனால் காந்திஜியின் அகாலமறைவை உற்சவப் பெருக்கோடு கொண்டாடிய RSS காரர்கள் குவாலியரிலும், ஜெய்பூரிலும், புனாவிலும், நாட்டின் இதர நகரங்களிலும் இனிப்பு வழங்கி ஆனந்தக் கூத்தாடி தங்களது திட்டம் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு விட்டதாக பிகிரங்கமாக பறைசாட்டினர்.

காந்திஜியின் படுகொலையைப் பற்றி அன்றைய பம்பாய் பிரதமராக இருந்த மெராஜி தேசாய் தனது சுய சரிதையில் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்.

''ஜனவரி 30ம் நாள் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்த போது பாபுஜி சுடப்பட்டார். ஒரு கை துப்பாக்கியிலிருந்து வெளியேறிய மூன்று தோட்டாக்களை தன் மார்பில் தாங்கிய ஆவர் நிலத்தில் சாய்ந்தார். ஒரு சில நிமிடங்களுக்குள் அவர் உயிர் பிரிந்து விட்டது. நாதுராம் கோட்சே என்கிறவன் தான் கொலையாளி. இவன் புனேயைச் சேர்ந்த ஓர் RSS ஊழியனும், ஒரு பத்திரிகையின் ஆசிரியனும் ஆவான்'' (Story of my Life By Morarji Desai Pag: 248)