Monday, January 22, 2007

நீதிமன்றத்தின் தலாக் தீர்ப்பு

முஸ்லிம்கள் விவாகரத்து செய்துகொள்ள தலாக் என்று கூறுவது மட்டும் போதாது: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை, ஜன. 22: முஸ்லிம் ஒருவர், தனது மனைவியை விவாகரத்து செய்வதற்காக தலாக் என்று மூன்று முறை கூறுவது மட்டும் போதாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தலாக் கூறுவதற்கு முன்னதாக, விவாகரத்து செய்வதற்கான காரணத்தை நடுவர் முன்னிலையில் கூற வேண்டும். பின்னர், நடுவர் மூலமாக தம்பதிகளை சமாதானப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் தில்ஷாத் பேகம். இவரது கணவர் அகமத்கான் பதான்.

கடந்த 1989-ம் ஆண்டில் அகமத்கான், மனைவி தில்ஷாத் பேகத்தை தனியே விட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். இதையடுத்து, தனக்கு பராமரிப்புக்காக மாதந்தோறும் பணம் அளிக்குமாறு அகமத்கானுக்கு உத்தரவிடக் கோரி மேற்கு மகாராஷ்டிராவிலுள்ள பாரமதி நீதித்துறை நடுவர் முன் மனு தாக்கல் செய்தார் தில்ஷாத் பேகம்.

இம்மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர், "தில்ஷாத்துக்கு பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.400-யை அகமத்கான் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடந்த 1994, மே மாதம் உள்ளூர் மசூதியில் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் தலாக் என்று கூறி தில்ஷாத்தை விவாகரத்து செய்தார் அகமத்கான். பின்னர், தில்ஷாத்துக்கு விவாகரத்து செய்துவிட்டதாக நோட்டீஸ் அனுப்பினார்.

முஸ்லிம் சட்டப்படி விவாகரத்து செய்தபின்னர் பராமரிப்புக்காக பணம் அளிக்க வேண்டியதில்லை என்று நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் அகமத்கான். இதைவிசாரித்த நீதிபதி, பராமரிப்புக்காக மாதந்தோறும் பணம் அளிக்குமாறு விடுத்த உத்தரவை ரத்து செய்தார்.

இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார் தில்ஷாத். இதைவிசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி மார்பல்லே, முஸ்லிம் சட்டப்படி தலாக் என்று கூறுவது ஏற்கக்கூடியதா என்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் தனது உத்தரவில் கூறியது:

முஸ்லிம் ஒருவர் விவாகரத்து செய்வதற்கான காரணத்தை கூறுவதற்காக, நடுவர் ஒருவரை நியமித்து அவர் முன்னிலையில் தம்பதிகளுக்கிடையே சமரசத்தை ஏற்படுத்த முயல வேண்டும். இது முடியாத பட்சத்தில், தலாக் கூறி விவாகரத்து செய்துகொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

நன்றிங்க

தலாக் சொல்ல காரணங்கள் தேவை இல்லை. இதை நீக்கி விட்டால்... உயர் நீதிமன்றம் வழங்கியது நல்ல தீர்ப்பு!

(கணவன், மனைவி ஆகிய) அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவனுடைய குடும்பத்ததாரில் ஒரு நடுவரையும் அவளுடைய குடும்பத்தாரில் ஒரு நடுவரையும் அனுப்பி வையுங்கள். அவ்விருவரும் நல்லிணக்கத்தை நாடினால் அல்லாஹ்வும் அவ்விருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் மிகவும் அறிந்தவனாகவும் நன்குணர்ந்தவனாகவும் இருக்கிறான். [அல்குர்ஆன் 4:35]

No comments: