Tuesday, January 02, 2007

ஜனநாயகம் புறக்கணித்த குடிமக்கள்.

முஸ்லிம்கள் ஜனநாயகம் புறக்கணித்த குடிமக்கள்

மீனா மயில்

உலகின் எந்த மூலையில் தீவிரவாத வன்முறைத் தாக்குதல்கள் நடந்தாலும், முஸ்லிம் அமைப்புகளை நோக்கியே கைகாட்ட நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். இடிக்கப்பட்டது பாபர் மசூதிதான் என்றாலும், இடித்தது இந்து வெறியர்களே எனினும், அவப்பெயர் என்னவோ முஸ்லிம்களுக்குதான்! இந்து - முஸ்லிம் மதக்கலவரத்தில் இந்துக்களால் சூறையாடப்படுவது முஸ்லிம்களின் வாழ்வியல் ஆதாரங்கள், பறிக்கப்படுவது முஸ்லிம் உயிர்கள், பலாத்காரம் செய்யப்படுவது முஸ்லிம் பெண்கள், கருவோடு சிதைக்கப்படுவது முஸ்லிம் சிசுக்கள், உருக்குலைக்கப்படுவது இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள்தான்... எனினும், இந்தியாவில் முஸ்லிம்களே பயங்கரவாதிகள்!

பட்டாசு வெடிக்கிற சத்தம் கேட்டாலும் குண்டு வைத்துவிட்டார்களோ எனத்தெருவில் கூடியிருக்கும் முஸ்லிம் குடும்பத்தை சந்தேகப்பட வேண்டுமென்ற இந்துத்துவவாதிகளின் மூளைச்சலவையில் நாம் தேர்ந்திருக்கிறோம். இந்து சிறுவனுக்கும் முஸ்லிம் சிறுவனுக்கும் சண்டை வந்தால்கூட, நமது நியாயம் இந்து சிறுவனுக்கே பரிந்து பேச வைக்கிறது. குல்லாவும் தாடியும் நீள அங்கியும் முஸ்லிம்களின் அடையாளம் என்பதை மீறி, அவை தீவிரவாதத்தின் சின்னங்களாக்கப்பட்டிருக்கின்றன. துக்கத்திலும் துக்கம்! அவமானத்திலும் அவமானம்! இப்படியாகத்தான் இந்தியாவின் ஜனநாயகம், முஸ்லிம்களுக்கெதிரான சர்வாதிகாரமாகத் தழைத்தோங்கியிருக்கிறது. விளைவு, இன்று தலித் மக்களைப் போலவே பின்தங்கிய வாழ்நிலையில் முஸ்லிம்கள் உழல்கின்றனர்.

எந்நேரமும் வேவு பார்க்கும், எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும், அடித்து உதைக்கும், சிறைப்படுத்தும் கணவனுடன் மனைவியே வாழ முடியாது என்ற சூழலில் - முஸ்லிம்கள் என்ற சமூகத்தை, இந்நாட்டின் பூர்வீகக் குடிமக்களை, அவர்கள் சார்ந்த ஒரு மதத்திற்காகவே இந்த நாடு தீவிரவாத முத்திரை குத்தி வதைக்குமெனில், எப்படி அச்சமுதாயம் வளர்ச்சியடையும்? மக்கள் தொகையில் 13.4 சதவிகிதம் இருக்கும் முஸ்லிம் குடிமக்களுக்கு, நமது ஜனநாயகம் என்ன செய்திருக்கிறது என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் முக்கியக் கேள்வி. சமூக, பொருளாதார, கல்வித் தகுதியிலும் வேலைவாய்ப்புகளிலும் அவர்களின் நிலை குறித்துப் பேச, நாடு விடுதலையடைந்து இந்த அறுபதாண்டுகளில் இப்போதுதான் நமக்கோர் வாய்ப்பேற்பட்டிருக்கிறது, சச்சார் குழு வாயிலாக.

இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் ஏழு பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு 9.3.2005 அன்று நியமித்தது. ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்பட்ட தீவிர ஆய்வுக்குப் பிறகு அண்மையில் தனது அறிக்கையை அக்குழு பிரதமரிடம் ஒப்படைத்தது. இவ்வறிக்கை 30.11.2006 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதில் பொதிந்திருக்கும் கசப்பான உண்மைகள் ஜனநாயகக் கட்டமைப்பில், சமத்துவத்தில், மனித உரிமையில் நம்பிக்கையுள்ளவர்களை உறைய வைப்பதாக இருக்கிறது. இந்துக்களாக்கப்பட்ட தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர்தான் இந்த நாட்டின் அடிமைக் கட்டமைப்பை உடைக்க முடியாமல் பின்தங்கியுள்ளனர் என்றால், சமூகப் புறக்கணிப்பின் நீட்சியாக முஸ்லிம்களும் வதைபடுகின்றனர் என்ற உண்மையை சச்சார் குழுவின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

மனித சமூகத்தை நாகரிகப்படுத்துவதும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதுமான கல்வித் தகுதியில், முஸ்லிம்கள் மிக மிகப் பின் தங்கியுள்ளனர். 1965 இல் 72 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற முஸ்லிம் மாணவர் சேர்க்கை 2001 இல் 80 சதவிகிதமாகியிருக்கிறது. ஆனால், நகர்ப்புற தலித் மாணவர்களின் எண்ணிக்கையோ 90 சதமாக உயர்ந்திருக்கிறது. 36 ஆண்டுகளில், கிராமப்புற, நகர்ப்புற, ஆண்-பெண் என எந்தப் பிரிவை எடுத்துப் பார்த்தாலும் முஸ்லிம்களிடையே கல்விப் புரட்சி என எதுவும் ஏற்படவில்லை. கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகம், மற்ற துறைகளில் எப்படி வளர்ச்சி அடையும்? பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களுக்கெதிரான பாரபட்சங்கள் ஒருபுறமும், வறுமையில் உழலும் குடும்பச் சூழல் மறுபுறமும் சேர்ந்து பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க முடியாத அவல நிலைக்கு முஸ்லிம்களைத் தள்ளிவிட்டது.

தேர்தல் அறிக்கைகளைப் பார்த்தால் அசந்து போவோம். சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் பற்றி வாய் கிழியப் பேசும் அரசியல்வாதிகள், தேர்தல் முடிவுகளோடு வாக்குறுதிகளுக்கும் முடிவு கட்டிவிடுகின்றனர். எந்த மாநிலமும் இடதுசாரிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட, எங்கும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கேற்ப அவர்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்கிறது சச்சார் அறிக்கை. எடுத்துக்காட்டாக, மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால், அதன் மொத்த மக்கள் தொகையில் 25.2 சதவிகிதம் முஸ்லிம்களே! முப்பது ஆண்டுகளாக இடதுசாரிகள் அங்கே கோட்டை கட்டி கொடியை நாட்டி ஆட்சி புரிகிறார்கள். எனினும், மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைந்த சதவிகிதமே அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அதாவது, வெறும் 4.2 சதவிகிதம்தான். பீகாரிலும் உத்திரப்பிரதேசத்திலும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப மூன்றில் ஒரு பங்குகூட, அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. கர்நாடகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 12.2 சதவிகிதமாக இருப்பினும், அரசு வேலைகளில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் 8.5 சதவிகிதம்தான் உள்ளது. குஜராத்தில் 9.1 சதவிகிதம் மக்கள் தொகைக்கு அளிக்கப்பட்டுள்ள பங்கு 5.4 சதவிகிதம் மட்டுமே. சிறுபான்மையினச் சகோதரர்கள் என வாயாற அழைத்தே ஆட்சியை மாறி மாறிப் பிடிக்கும் தமிழகத்திலோ 5.6 சதவிகிதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால் வெறும் 3.2 சதவிகிதம் பிரதிநிதித்துவமே உள்ளது. எல்லா மாநிலங்களிலும் நிலைமை இதேதான்.

முஸ்லிம்களுக்கு உடல் ரீதியான பாதுகாப்பு உத்திரவாதத்தை அளித்திருக்கும் மேற்கு வங்கத்திலாகட்டும், அரசியல் ரீதியான அங்கீகாரத்தை வழங்கியிருக்கும் பீகார் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகட்டும், வேலைவாய்ப்பிலும் பொருளாதார ரீதியிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை விளக்குகிறது. பொதுப் பணித்துறையும் இந்தப் பாகுபாட்டிற்கு விதிவிலக்கல்ல. அதிகபட்சமாக கேரளாவில் 9.5 சதவிகித முஸ்லிம்கள் உயர் பதவிகளில் உள்ளனர். மேற்கு வங்கத்தில் பூஜ்யம். மற்ற மாநிலங்களில் பாதிக்குப் பாதி என்ற அடிப்படையில்கூட முஸ்லிம்களின் பங்களிப்பில்லை.

கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உள்துறை என மாநில அரசுகளின் எல்லா துறைகளிலும் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதுதான் சச்சார் குழுவின் முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்று. நீதித்துறையும் முஸ்லிம்களுக்கு அநீதியே இழைத்துள்ளது. சச்சார் குழு தனது ஆய்வை மேற்கொள்வதற்காக கீழ் நீதிமன்றங்களில் அடிமட்ட ஊழியர்கள் தொடங்கி நீதிபதிகள் வரை கணக்கெடுப்பு நடத்தியதில், முஸ்லிம்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகவே காண முடிந்தது. முஸ்லிம்கள் அதிகமுள்ள 12 மாநிலங்களில் நீதித்துறையில் வெறும் 7.8 சதவிகிதம்தான் உள்ளனர். மக்கள் தொகையில் 66.97 சதவிகித முஸ்லிம்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில்கூட, 48.3 சதவிகித பிரதிநிதித்துவமே நீதித்துறையில் அளிக்கப்பட்டிருக்கிறது. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆந்திராவில் மட்டுமே மக்கள் தொகைக்கு அதிகமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் நீதித் துறையில் உள்ளனர்.

ஒரு முஸ்லிம் நீதிபதியையோ, வழக்கறிஞரையோ அவர்களின் பதவியைக் கொண்டு பார்க்காமல் முஸ்லிமாகப் பார்க்கவே இச்சமூகம் தலைபடுகிறது. மதக்கலவரங்களை விசாரிக்க இதுவரை ஒரு முஸ்லிம் நீதிபதிகூட நியமிக்கப்பட்டதில்லை. காரணம், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைத்தான் ஆதரிப்பார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை. இதுதான் பாரபட்சத்தின் ஆணிவேர். இந்துக்கள் எல்லோரும் நீதிமான்கள் என்பது போலவும், முஸ்லிம்கள் மட்டும் மதவெறியர்கள் என்பது போலவும் ஒரு மோசமான கருத்து இங்கு விதைத்து வளர்க்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அதிகளவில் முஸ்லிம்கள் 'குற்றவாளி'களாகவும், இந்துக்கள் 'நீதிமான்'களாகவும் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஜெயலலிதா ஆட்சியின்போது நடந்த அநீதி ஒன்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இந்துத்துவவாதிகளும் அரசியல்வாதிகளுமே முஸ்லிம்கள் மீதான தவறான பார்வையை மக்கள் மத்தியில் உருவாக்கினர் என்பதற்கு, ஒரு சோற்றுப் பதமே அய்.ஏ.எஸ். அதிகாரி முனீர் ஹோடா மீது ஏவப்பட்ட மதவெறி ஆயுதம். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் நாசர் மதானிக்கு செயற்கைக் கால் பொருத்துவதற்காக அனுமதி கேட்டு அனுப்பப்பட்ட மனுவை பரிசீலித்து ஒப்புதல் அளித்தார் அப்போதைய உள்துறை செயலாளர் முனீர் ஹோடா. முஸ்லிம் என்பதாலேயே ஒரு தீவிரவாதிக்கு ஹோடா உதவ முன்வந்ததாக குற்றம் சாட்டப்பட்டதோடு, தீவிரவாதத்திற்கு அவர் துணை புரிவதாகவும் பழிசுமத்தி, பதவியில் இருந்து தூக்கியெறிந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முனீர் ஹோடாவுக்கு சிறப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இப்போதும் ஜெயலலிதா, 'தீவிரவாதி தப்பித்துப் போக உதவிய ஹோடாவுக்கு உயர் பதவி வழங்கியிருப்பதாக'க் குற்றம் சாட்டுகிறார். ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரியை முன்னாள் முதல்வரே வீண் பழியால் மதவெறித் தாக்குதல் நடத்தும் சமூகத்தில், முஸ்லிம்கள் எப்படி முன்னேற முடியும்?

முஸ்லிம்கள் அவர்கள் மக்கள் தொகையைவிட அதிகம் பங்கு அளிக்கப்பட்டுள்ள ஒரே இடம் சிறைச்சாலை மட்டுமே. சச்சார் குழு தனது ஆய்வுக்காக மொத்தம் 1,02,652 கைதிகளை கணக்கில் எடுத்தது. அதில் பெரும்பாலானவர்கள் இழைத்த குற்றம் தீவிரவாதம் அல்ல. முஸ்லிம்கள் அதிகம் உள்ள 12 மாநிலங்களின் சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம்கள் பற்றின தகவல்களைத் திரட்டித் தருமாறு ஆய்வுக் குழு கேட்டுக் கொண்டது. மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம், பீகார், ஆந்திரப்பிரதேசம் ஆகியவை தகவல்களைத் தராததால் - மீதமுள்ள எட்டு மாநிலங்கள் கொடுத்த தகவல்களைக் கொண்டு குழு அறிக்கையை தயார் செய்தது. 10.6 சதவிகித முஸ்லிம்களைக் கொண்ட மகாராட்டிர சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையோ 32.4 சதவிகிதம். குஜராத்தில் பத்து சதவிகிதத்திற்கும் குறைவாகவே முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால், சிறைக் கைதிகளின் தொகையோ 25 சதவிகிதத்திற்கும் அதிகம். காஷ்மீருக்கு அடுத்ததாக முஸ்லிம் மக்கள் தொகையை அதிகம் கொண்ட அஸ்ஸாமிலும் இதே நிலைதான்.

முஸ்லிம்களுக்கு முறையாகச் சேர வேண்டிய உரிமைகளும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டதால், முஸ்லிம்கள் அதிகளவில் வறுமையில் வாடுகின்றனர். வறுமையில் உழலும் நகர்ப்புற முஸ்லிம்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த தேசிய அளவைவிட ஒரு மடங்கு அதிகம். குற்றங்களுக்கு மிக அருகில் வசிப்பவர்கள் ஏழைகளே. குற்றமிழைக்கவில்லை என்றாலும் அருகில் வசிப்பதாலேயே அவர்கள் குற்றவாளிகளாக்கப்படுவது, அதிகாரவர்க்க நீதியின் நடைமுறை.

அடுத்து, காவல் துறையின் மதப்பாகுபாடு. முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதில் பெரும் பங்காற்றுகிறவர்கள் காவல் துறையினரே! ஒரு தலித்தை திருட்டு வழக்கிலும் கொலை வழக்கிலும் சிக்க வைப்பது, காவல் துறைக்கு எவ்வளவு எளிதான ஒரு செயலோ அதே போலத்தான் ஒரு முஸ்லிமை பயங்கரவாத, தீவிரவாதச் செயல்களுக்காக கைது செய்வதும். கலவரத்தைத் தூண்டினார், சமூக அமைதிக்குப் பங்கம் விளைவித்தார் என எந்த வழக்கிலாவது அவர்களை இணைத்து, விசாரணைக் கைதியாகவே நாட்களை நகர்த்த நேர்வது, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பாரபட்சமின்றி வாடிக்கையாகிப் போயிருக்கிறது.

''முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவதாலேயே குற்றங்களில் அவர்கள் எளிதாகச் சிக்குகின்றனர். குறைவான வாய்ப்புகள் வழங்கப்படும் இடத்தில் குற்றமே தொழிலாகிறது. முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற மனப்போக்கு காவல்துறையிடம் வேரூன்றியுள்ளது. ஏதாவது பிரச்சனையில் ஒரு முஸ்லிம் ஈடுபட்டால், காவல்துறை பத்து முஸ்லிம்களை கைது செய்கிறது. தேவையில்லாமல் பலரை கைது செய்துவிட்டு, பிறகு குற்றத்தை நிரூபிக்க முடியாமல் வழக்குகளைக் கிடப்பில் போடுகின்றனர்'' என்கிறார் முன்னாள் அமைச்சர் சையது ஷகாபுதீன்.

அரசுப் பணிகளிலேயே புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு புலனாய்வுத் துறை, உளவுத் துறை, ராணுவம் போன்றவை வெறும் கனவுதான். உளவுத் துறையை (RAW) பொறுத்தவரை, 1969 தொடங்கி இன்று வரை அதன் பணியாளர்களின் எண்ணிக்கை பத்தாயிரம். உளவுப் பணியில் முஸ்லிம்களை சேர்க்கக் கூடாதென்பது, இந்த மதச்சார்பற்ற தேசத்தின் எழுதப்படாத சட்டம். தகுதி, திறமை, தேச பக்தியுள்ள ஒருவர் அவர் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ஒரே காரணத்துக்காக தகுதியற்றவராகிறார். முஸ்லிம்களை உளவுத் துறையில் இணைத்துக் கொள்ள வேண்டுமென பல அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தபோதும், எழுதப்படாத அந்தச் சட்டத்தை மீற இதுவரை யாரும் துணியவில்லை.

ராணுவமோ, 'எங்களின் ரகசியங்களை யாருக்கும் வெளியிட இயலாது' என அரசால் நியமிக்கப்பட்ட சச்சார் குழுவுக்கே 'தண்ணி' காட்டிவிட்டது! புள்ளிவிவரங்களைத் தர மறுத்துவிட்டதால், ராணுவத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைக் கண்டறிய முடியவில்லை. மத்திய அரசுக்கும் கட்டுப்படாமல் ராணுவம் சர்வாதிகாரப் போக்கில் ஒரு தனி ராஜாங்கம் நடத்தி வருகிறது. ''புள்ளி விவரங்களைக் கொடுத்தால் அது பாதுகாப்புப் படையினருக்கு தவறான எண்ணத்தைத் தூண்டும். இதுவரை கட்டிக்காத்த ஒற்றுமையையும் உற்சாகத்தையும் சமத்துவ நீதியையும் அது குலைக்கும். ராணுவத்தைப் பொறுத்தவரை, இடஒதுக்கீட்டுக்கான தேசிய கொள்கை பொருந்தாது'' என ராணுவம் வாதிட்டதால், சச்சார் குழுவுக்கு, உண்மை நிலவரம் மறுக்கப்பட்டது. ராணுவ உயர் பதவிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அறிந்து கொள்ளாமல், அரசால் அவர்களுக்கான நலத்திட்டத்தை வகுக்க இயலாது. இடஒதுக்கீடு ராணுவத்திற்குப் பொருந்தாது என்பதால்தான் அங்கு உயர் பதவிகள் அனைத்திலும் சாதி இந்துக்கள் நிறைந்திருக்கிறார்கள். இந்நிலையில், உண்மைத் தகவல்களைத் தர முடியாது என ராணுவம் மறுத்திருப்பது, இந்நாட்டின் சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிரான செயல். ரகசியத்தைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அங்கு நடக்கிற எந்த அநீதிகளையும் மக்களின் பார்வைக்கு வரவிடாமல் தடுத்து விடுகின்றனர். காஷ்மீரும், வடகிழக்கு மாநிலங்களும் இதற்கு நேரடி எடுத்துக்காட்டு.

முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார, சமூக நிலையைக் கண்டறிந்து மேம்படுத்தவே சச்சார் குழு நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ''மத்திய மாநில அரசுப் பணிகளிலும் பொதுப்பணித் துறையிலும், சிறுபான்மையினருக்குரிய பங்கு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்'' என பிரதமர் மன்மோகன்சிங் அண்மையில் தெரிவித்திருப்பது நல்ல அறிகுறி. முஸ்லிம்கள் மேம்பாட்டுக்காக வகுக்கப்பட்ட பதினைந்து அம்சத் திட்டம், சனவரி 2007 இல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதுமான முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி சூழல் பற்றிய முழு முதல் ஆய்வு, சச்சார் குழுவினுடையதுதான் என்றாலும், ஏற்கனவே இந்திரா காந்தி ஆட்சியின்போது கோபால் சிங் என்பவர் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழு முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார, அரசு வேலைவாய்ப்பு குறித்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. அப்போதிருந்த அய்நூறு மாவட்டங்களில் 80 மாவட்டங்களில்தான் அக்குழு ஆய்வு செய்தது எனினும், அந்த ஆய்வறிக்கையின் முடிவும் முஸ்லிம்கள் சமூக வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியிருப்பதாகவும், ராணுவத்திலும் நீதித்துறையிலும் சிறுபான்மையினருக்கான பங்கு போதிய அளவுக்கு வழங்கப்படவில்லை எனவும் எச்சரித்திருந்தது. அப்போதிருந்தே முஸ்லிம் களுக்கான இடஒதுக்கீட்டையும், நலத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியிருந்தால், இன்றைக்கு அவர்களின் நிலை இந்தளவுக்கு கீழிறங்கி இருக்காது.

இச்சூழலில், சச்சார் குழுவின் முக்கிய கண்டுபிடிப்புகளும் பரிந்துரைகளும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என இந்துத்துவவாதிகளும், சில ஊடகங்களும் தங்களது பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன. 'இடஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில் வழங்கப்படுவது. மத அடிப்படையில் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. வேண்டுமானால் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களையும் இணைத்துக் கொள்ளலாம்' என பா.ஜ.க. முதலான இந்துத்துவ அமைப்புகள் தங்கள் வயிற்றெரிச்சலை காட்டத் தொடங்கிவிட்டன. ஆந்திர மாநில அரசு முஸ்லிம்களுக்கு வழங்கிய 5 சதவிகித இடஒதுக்கீட்டை மத அடிப்படையிலானது என்று சொல்லி நீதிமன்றம் தற்போது நிறுத்தி வைத்திருக்கிறது.

முஸ்லிம்களுக்கெதிரான பாரபட்சம் என்பது, மத அடிப்படையிலானதாக இருக்கும்போது அவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடும், நலத்திட்டங்களும் மத அடிப்படையில் வழங்கப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்? சச்சார் குழு தனது பரிந்துரையில், தனி இடஒதுக்கீடு தேவையில்லை எனவும், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களை இணைக்கவும் கூறுகிறது. மேலும், கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பு நலத் திட்டங்களை வகுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

ஊடகத் துறையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அறிக்கையில் எந்தக் குறிப்பும் இல்லை. எனினும், நாம் ஏற்கனவே அறிந்தபடி ஊடகத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் வெறும் 3 சதவிகிதம் முஸ்லிம்களே உள்ளனர். ஆனால், மக்கள் தொகையில் 3 சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்களோ இத்துறையில் 49 சதவிகிதம் இருக்கின்றனர். இந்து ஆதிக்கவாதிகள் நிரம்பி வழியும் ஊடகங்கள் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை ஒரு பிரச்சாரமாகவே மேற்கொண்டு வருகின்றன. 'முஸ்லிம்கள் அழித்தொழிக்கப்பட வேண்டிய தீவிரவாதிகள்' என்ற மதவெறிக் கருத்தை இவை வெளிப்படையாக மக்களிடையே பரப்புகின்றன.

பள்ளியில் எழுபது சதவிகிதம் மாணவர் சேர்க்கையில், 11.6 சதவிகிதம் பேர் பாதியிலேயே படிப்பைக் கைவிடுகின்றனர். 3.6 சதவிகித பட்டதாரிகளையும், 1.2 சதவிகிதம் மட்டுமே பட்ட மேற்படிப்பை முடித்தவர்களையும் கொண்டிருக்கிறது, இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மைச் சமூகம். அடிப்படைக் கல்வியில் இத்தகைய சரிவு ஏற்படுவதாலேயே அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் உள்ள அய்ம்பது சதவிகிதம் இடஒதுக்கீட்டைக் கூட அவர்களால் நிரப்ப முடியவில்லை. 94.9 சதவிகித முஸ்லிம்கள் அன்றாடம் உணவுக்கே அல்லல்படுகின்றனர். படிப்புதான் இல்லை, சுயதொழில் செய்யலாம் என வங்கிகளில் கடன் கேட்டால், முஸ்லிம்களுக்கு கடன் கொடுக்க அவை முன் வருவதில்லை. இதுவரை வெறும் 3.2 சதவிகிதம் பேருக்குதான் வங்கிக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் 60.2 சதவிகிதம் பேருக்கு நிலங்கள் இல்லை. நிலமற்றவர்கள் கூலிகளாக இருப்பதும், கூலிகள் வறுமையில் உழல்வதும், வறுமை கல்வியைத் தடுப்பதும், கல்வித் தடை மற்ற எல்லா வளர்ச்சிகளையும் முடக்கிப் போடுவதும்தானே இயற்கை! முஸ்லிம்களுக்கும் அதுவே நேர்ந்திருக்கிறது.

தலித் மக்களை தீண்டத்தகாதவர்களாக்கி ஒதுக்கி வைத்துள்ள இந்த சாதியச் சமூகம், முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக்கி ஒதுக்கி வைத்துள்ளது. இந்தியாவின் முதன்மை சிறுபான்மை மதமாக இருக்கும் இஸ்லாத்தை வளரவிடாமல் செய்வதற்கு இந்துத்துவவாதிகள் அரங்கேற்றிய சதியே, இந்தியாவில் இஸ்லாம் தீவிரவாத மதமாக்கப்பட்டதற்கான காரணம். இந்து மதத்தின் சாதிப் பிடியிலிருந்து வெளியேறி இஸ்லாமிய மார்க்கத்தைப் பெருமளவில் தலித் மக்கள் தழுவுவதைக் காணச் சகிக்காத இந்து வெறியர்கள் நடத்திய வெறியாட்டங்களே, முஸ்லிம்களுக்கெதிரான கருத்தை மக்களிடம் திணித்தன. மதமாற்றத்தைத் தடுக்க இந்துத்துவவாதிகள் கையாண்ட உத்தி அது. தான் தீண்டத்தகாதவனாகப் பார்க்கப்படுவோமா என்ற தயக்கம் எப்படி தலித் மக்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறதோ, அதே போலத்தான் முஸ்லிம்களுக்கு தான் தீவிரவாதி ஆக்கப்படுவோமோ என்ற அச்சமும். இங்கு மதமாற்றம் தடைபட்டு நிற்பதற்கான காரணமும் அதுவே.

இந்த அச்சத்தைக் களைய வேண்டியது அரசின் கடமை. எல்லாத் துறைகளிலும் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை முறையே வழங்குவதுதான் நேர்மை. வறுமையிலிருந்து மீட்டு, கல்வி அளித்து, சுகாதார உத்திரவாதம் வழங்கி, எல்லாத் துறைகளிலும் அவர்கள் மக்கள் தொகைக்கேற்ப வாய்ப்புகளை வழங்கும் திட்டங்களை வகுத்து, இவ்வளவு காலம் முஸ்லிம்கள் அனுபவிக்காத உரிமைகளை மீட்டுக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. முஸ்லிம்களை அதிகம் கொண்ட உத்திரப்பிரதேசத்தின் தேர்தலை மனதில் கொண்டே இந்த அரசியல் நாடகம் நடத்தப்படுகிறது என்பது ஒரு சாராரின் குற்றச்சாட்டு. அப்படியே இருந்தாலும்கூட, அரசை நிர்பந்திக்க வேண்டியதும் போராடிப் பெற வேண்டியதும் சமத்துவத்தில் நம்பிக்கையுள்ள அனைவரின் பொறுப்பு. சச்சார் குழுவின் அறிக்கை என்பது, முஸ்லிம்கள் தன்னைப் பார்த்துக் கொள்ளக் கிடைத்த கண்ணாடி. இந்த நாடு தங்களை எந்தளவுக்குப் புறக்கணித்திருக்கிறது என்ற தன்னிலை உணர்தலுக்கான வாய்ப்பு இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆட்சியைப் பிடிப்பதற்கான அரசியல் ஊறுகாய் அல்ல முஸ்லிம்கள் என ஜனநாயகவாதிகள் விழித்துக் கொண்டு போராட வேண்டிய தருணமிது.

தனி இடஒதுக்கீடோ, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடோ எதுவாக இருந்தாலும், தங்கள் சமூகத்தின் கடைசி மனிதனின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அதை முடிவு செய்ய வேண்டியது முஸ்லிம்களே! இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. ஆனால், இதுவரை தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மொத்தமாகப் பெறுவதாகவும் இனிமேல் தங்கள் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிப்பதாகவும் உள்ளதெனில் மட்டுமே அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்துத்துவவாதிகள் ஆழமாக விதைத்து விட்டிருக்கும் கருத்தாக்கங்களைக் களைந்து, அவர்களை இந்நாட்டின் குடிமக்களாக உணரச் செய்தலே அரசின் முதல் பணி. அதற்கான அடித்தளம் என்பது, பாரபட்சமற்ற பிரதிநிதித்துவத்தை முஸ்லிம்களுக்கு வழங்குவதில்தான் தொடங்கும். இல்லையெனில், இந்த இந்து வெறிச் சமூகம், இன்னும் முழு வீச்சோடு ஒவ்வொரு முஸ்லிம் மீதும் தீவிரவாத முத்திரை குத்தி அவர்கள் கையில் ஆயுதத்தைத் திணிக்கும். இது, ஜனநாயகத்திற்கு விடப்பட்டிருக்கும் கடுமையான எச்சரிக்கை!

''தனி இடஒதுக்கீடு வேண்டும்''

விடுதலை அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும், முஸ்லிம்களுக்கு விடிவு ஏற்படவில்லை என்ற உண்மையை, சச்சார் குழு அறிக்கை உணர்த்துகிறது. இந்து ஜாதி கட்டமைப்பில் முஸ்லிம்கள் படும் இன்னல்கள் ஏராளம். இப்படி எல்லா துறையிலும் நசுக்கப்பட்டால், நாங்கள் இந்த நாட்டில் சுதந்திர குடிமக்களாக எப்படி வலம் வர முடியும்? எங்களுக்கென்று கண்டிப்பாக தனி ஒதுக்கீடு தர வேண்டும். இந்தியாவில் ஆயிரக்கணக்கான சாதிகள் உள்ளன. அவற்றோடு சேர்ந்து ஒதுக்கீடு கொடுத்தால், எங்களுடைய பங்கு நிச்சயமாக கிடைக்காது. அரசு இவ்வளவு காலமும் எங்களின் நலனையும் வளர்ச்சியையும் கண்டுகொள்ளவில்லை. சச்சார் குழுவின் தகவல்களைக் கொண்டு, உடனடியாக எங்களுக்கானப் பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

- கொடிக்கால் ஷேக் அப்துல்லா''

''சமவாய்ப்பு ஆணையத்தை வரவேற்கிறோம்''

முஸ்லிம்களுக்கு அரசு நிறைய சலுகைகள் வழங்குவதாக சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து சொல்லி வந்தன. அவை தவறான பிரச்சாரம் என்பதைத்தான் சச்சார் குழு அறிக்கை தெளிவுபடுத்துகிறது. இந்தக் குழு, இடஒதுக்கீட்டை பரிந்துரை செய்வதற்காக நியமிக்கப்பட்டதல்ல. மாறாக, சமூக, பொருளாதார, கல்வியில் முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டதே. இங்கிலாந்தில் உள்ளது போல சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கான சம வாய்ப்பு ஆணையத்தை உருவாக்க, இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது வரவேற்கத்தக்கது. அதே போல் மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியில் 15 சதவிகிதம் முஸ்லிம்களுக்காக ஒதுக்கவும் வலியுறுத்தி உள்ளது. மேலும், மத்திய அரசு மற்றும் அதன் சார்பு நிறுவனங்களில் வேலைக்கான நேர்காணல் நடக்கும்போது, அதிகாரிகள் குழுவில் முஸ்லிம்கள் கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.

இவை அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டால் முஸ்லிம்களின் நிலை கண்டிப்பாக முன்னேறும். நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்றால், முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை அரசு வழங்க வேண்டும். சிறைச்சாலைகளில் அதிகம் முஸ்லிம்கள் இருப்பதற்குக் காரணம் காவல் துறையினரே. கலவரங்களை நடத்துகிறவர்கள் யார், மிகவும் பாதிக்கப்படுகிறவர்கள் யார் என்று நன்றாகத் தெரிந்திருந்தும் புலனாய்வு செய்யாமல், வழக்கை எளிதாக முடிப்பதற்காக வரைமுறையின்றி முஸ்லிம்களை கைது செய்கின்றனர். அண்மையில்கூட பஜ்ரங்தள் தொண்டர்களிடமிருந்து வெடிகுண்டுகளும், ஒட்டுத் தாடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரை விழுவதற்காகத் திட்டமிட்டு வன்முறைகளை தூண்டுபவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

- பேரா. ஜவாகிருல்லா, தலைவர், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

நன்றிங்க

சொல்லாமல் விட்டது:
'முஸ்லிம்கள் இந்திய தேசத்துக்கு விசுவாசியாக இருக்க விரும்பாமல் பாகிஸ்தான் பங்களாதேஷ் என அந்நிய தேசத்துக்கே நன்றியுடன் இருக்க விரும்புகிறார்கள்'

தொடர்ந்து இப்படியும் முஸ்லிம்கள் மீது அவதூறு சங்கூதுகிறார்கள் சில இந்துத்வ ஆண்டிகள்.

3 comments:

வாசகன் said...

கருத்துச்செறிவான கட்டுரை. கட்டுரையாளருக்கும், உங்களுக்கும் நன்றி.

முஸ்லிம்களுக்கெதிராக வலுவான ஒரு அதிகாரவர்க்க லாபி நம்நாட்டில் செயற்பட்டு வருவது அரசியல் நோக்கர்கள் அறிந்ததே!

ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கல்ல, வழங்கவேண்டும் என்று சொன்னாலே, பாய்ந்துபிராண்ட எப்போதும் தயார்நிலையில் இருக்கிறது இந்த ஆதிக்க வர்க்கம்.

காத்திருப்போம். காலம் மாறும்.

வாசகன் said...

//ஊடகத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் வெறும் 3 சதவிகிதம் முஸ்லிம்களே உள்ளனர். ஆனால், மக்கள் தொகையில் 3 சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்களோ இத்துறையில் 49 சதவிகிதம் இருக்கின்றனர்.//

மிக கவனமாக வாசித்தால், சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் பின்னடைவுக்கும், உயர்குடியாகச் சொல்லிக்கொள்பவர்களின் உயர்வுக்கும் இதில் காரணங்கள் உள்ளன.

Lobby உருவாக்குவதில் மீடியாக்களுக்கு முக்கிய பங்குண்டு. முஸ்லிம்கள் உணர வேண்டும்.

முஸ்லிம் said...

வாசகன் உங்கள் வரவுக்கு நன்றி.

//காத்திருப்போம். காலம் மாறும்.//

பெரும்பான்மையினரின் விருப்பப்படி தான் சிறுபான்மையினர் அடங்கிப் போக வேண்டும் என்ற அடக்குமுறையும் அக்கிரமும் மாறும். காத்திருப்போம்.