Saturday, May 24, 2008

காத்திருப்போம்.

அறுபது ஆண்டுகால நோன்புக்கு இஃப்தார் எப்போது?

வெள்ளி, 23 மே 2008

கோடை விடுமுறை முடிந்து அடுத்த கல்வி ஆண்டு துவங்க விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்களே மீதம் உள்ளன. புதிதாகத் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பர்வர்களும் அடுத்த வகுப்புக்குத் தேர்வாகியவர்களும் பள்ளிப்படிப்பு முடிந்து வசதி வாய்ப்பு உள்ளவர்கள் கல்லூரிகளை நோக்கிப் பயணப்படுபவர்களுமாக மக்கள் கோடை வெப்பத்தோடு கல்வி வெப்பத்திலும் சிக்கிச் சுற்றி வரும் காலகட்டம் இது.

முஸ்லிம் சமுதாயம் அத்தகையக் கல்வி வெப்பத்திற்கு அதிகமாகத் தங்களை உட்படுத்திக் கொள்ளாமல் எப்பொழுதும் போல் இந்த ஆண்டும் மற்ற காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. சமுதாய முன்னேற்றத்திற்காகவும் வாழ்வுரிமைக்காகவும் குரல் கொடுத்து வீறுடன் போராடும் இயக்க/அமைப்புகளும் இடஒதுக்கீடுக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் வீறுடன் போராடிப் போராடி இன்னும் போராட்ட வெப்பத்திலேயே சமுதாயத்தை வைத்துக் கொள்வதில் மும்முரம் காட்டி வருகின்றன.

"சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் நலனுக்காகவும் மட்டுமே நாங்கள் இயக்கம்/அமைப்பு நடத்துகின்றோம்" என உரிமை கொண்டாடும் தலைவர்கள், அந்தச் சமுதாய முன்னேற்றத்திற்குத் தேவையான அடிப்படை விஷயமான கல்வியில் சமுதாயத்தைத் தன்னிறைவு அடைய வைப்பதற்கான தீர்வு என்ன என்பதனைக் குறித்தும் அதனை அடைய வைப்பதற்கான வழிவகைகளைக் குறித்து ஆய்ந்து மக்களிடம் சேர்த்து வைப்பதனைக் குறித்தும் சரியான வழியில் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரமிது..

ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அடிப்படையான கல்வியைப் பெறுவதில் முதல் தேவையானது அக்கல்வியின் முக்கியத்துவதையும் பயனையும் அறிதலும் கல்வியின்மையால் விளையும் தீமைகளையும் நஷ்டங்களையும் புரிந்து கொள்வதற்கான விழிப்புணர்ச்சியுமாகும்.

அத்தகைய சமுதாய விழிப்புணர்வில், சமுதாயம் 90களிலோ 2000களிலோ இருந்த நிலையில் தற்பொழுது இல்லை. இந்தியாவில் தங்களின் வாழ்வுரிமையைத் தக்க வைப்பதற்குக் கல்வியறிவு கட்டாயம் என்பதைத் தற்பொழுது சமுதாயம் 100 சதவீதம் இல்லையெனினும் நன்றாகவே உணர்ந்துள்ளது எனலாம். இப்பொழுது சமுதாயத்திற்குத் தேவை, அந்தக் கல்வியைப் பெறுவதற்கான வழிவகைகளும் அதற்கு வழிகாட்டும் உதவிகளும் மட்டுமே ஆகும்.

சமுதாய முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக விளங்குவதில் பொருளாதாரம் மிக முக்கியப் பங்காற்றுகின்றது. இப்பொருளாதார வசதியின்மை காரணத்தால் சமுதாயத்தில் 90 விழுக்காட்டிற்கு அதிகமான மக்கள் பள்ளிக்குச் செல்லாமலோ பள்ளிப்பபடிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டோ பொருளாதாரத் தேவைக்காகச் சொந்த நாட்டில் வாழவழியின்றி கடல்கடந்து பாலை வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கின்றனர்.

கல்வியைத் தொடர இயலாமல் வெளிநாடுகளுக்கு வண்டி ஏறியவர்கள் கல்வியின்மையினால் அங்கும் அடிமாட்டுக் கூலிக்குத் தங்கள் வாழ்வையும் தங்களின் அடுத்தடுத்தத் தலைமுறையினரின் வாழ்வையும் பலிகொடுத்துக் கொண்டு அந்த அடித்தட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

எனவே, இந்த அவல நிலை மாறுவதற்கு அடிப்படையான கல்வியைப் பெறுவதற்குப் பொருளாதார உதவி என்பது மிக முக்கியத் தேவை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். கல்வி கற்க வேண்டிய விழிப்புணர்வைப் பெற்றுக் கொண்டு அதனைத் துவங்கவோ தொடரவோ இயலாமல் நடுவழியில் நிற்கும் சமுதாயத்திற்குப் பொருளாதார உதவி செய்வது யார்?

சமுதாயத்தில் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் உள்ள செல்வந்தர்கள் செய்வார்களா? அல்லது அவர்கள் செய்ய முன் வந்தாலும் கல்விக்குத் தேவையான பொருளாதார உதவிகளை முழுச் சமுதாயத்து அடித்தட்டு மக்களுக்கும் அவர்களால் மட்டும் நிறைவேற்றி விட முடியுமா? நிச்சயம் முடியாது!

சரி, சமுதாய முன்னேற்றத்திற்காக மட்டுமே(!) இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் அதனைச் செய்யுமா? அவர்களே தங்களின் இருப்பிற்கான பொருளாதார தேவைகளுக்கு அவர்களது பத்திரிகைகளிலும் கிடைக்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் துண்டை விரித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

சமுதாயத்திற்குத் தேவையான கல்வி தன்னிறைவு பெறுவதற்கு அவசியமான பொருளாதார தேவையைப் பூர்த்தி செய்வது யார்? இதற்கான வழிகளை ஆய்வதும் அதனைச் சமுதாயத்தின் முன்னிலையில் கொண்டு சேர்ப்பதுமே இத் தலயங்கத்தின் நோக்கமாகும்.

ஒரு நாடு தன் நாட்டில் வாழும் குடிமக்களை எல்லாவிதத்திலும் முன்னேற்றுவதற்கான உதவிகளைச் செய்வதற்குக் கடமைப் பட்டதாகும். அதுவும் கல்வியறிவில் தனது நாட்டு மக்களைத் தன்னிறைவு அடைய வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அந்நாட்டின் தலையாயக் கடமையாகும்.

அதற்காக அந்நாடு பல்வேறு திட்டங்களை அறிவிக்கும். அதில் பொருளாதார உதவி மிக முக்கியமானதாகும். அத்திட்டங்களைக் கூர்ந்து கவனித்து அதனைப் பெற்று முன்னேற முயல வேண்டியது அந்நாட்டுக் குடிமக்களின் கடமையுமாகும்.

இவ்வகையில், தங்கள் நாட்டுக் குடிமக்களின் கல்வியறிவை முன்னேற்றுவதற்காக உதவி செய்யும் நாடுகளில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பது இந்தியாதான் என்று கூறினால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா?. ஆம். அது தான் உண்மை.

ஓரளவு வசதி உள்ள நடுத்தர மக்களின் உயர்கல்விக்காகக் கல்விக் கடன், எதற்குமே வழியில்லாத மக்களுக்கு உதவித்தொகை, மக்களுக்கு இலவசமாக உதவி வகுப்புகள் எடுக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான சம்பள உதவித்தொகை எனப் பல வழிகளில் இந்திய அரசு தனது குடிமக்களின் கல்வி மேம்பாட்டிற்காகப் பல கோடிகளை ஒவ்வோர் ஆண்டும் அறிவிக்கின்றது/செலவழிக்கின்றது.

"கடந்த நிதியாண்டில் மட்டும் இந்திய தேசிய வங்கிகள் முலமாக நாடுமுழுவதும் 12,51,692 மாணவர்களுக்கு ரூ.19,771 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது" எனச் சில நாட்களுக்கு முன்னர் நமது மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.

அதுமட்டுமின்றி நன்றாகப் படிக்கக்கூடிய ஏழை மாணாக்கர் வசதியின்றி தங்களின் படிப்பைப் பாதியில் நிறுத்தினால் அவர்களின் படிப்பைத் தொடர்வதற்கு வசதியாக ஆண்டு தோறும் ரூ. 6,000 உதவித் தொகையாக வழங்குகிறது. மேலும் கீழ்த்தட்டு வேலைகளில் பணியாற்றுபவர்களின் வாரிசுகளுக்கு ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்வியைத் தொடர வகை செய்யும் கல்வி உதவித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வுதவிகள் மக்களைச் சென்று சேர வசதியாக இணையம் மூலம் கல்வி உதவித் தொகை பெறும் வசதியும் இக்கல்வியாண்டு முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இவை அனைத்தும் இவ்வாண்டில் ஆரம்பிக்கப்பட்டப் புதிய திட்டங்கள் அல்ல. இந்தியா விடுதலை அடைந்த காலம் தொட்டு கல்வி வளர்ச்சிக்காக மத்திய அரசும் மாநில அரசுகளும் இதுபோன்றப் பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டு வருகின்றன. ஏனெனில், நம் நாடு ஆங்கில ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தபோது வகுக்கப் பட்ட அரசியல் நிர்ணயச் சட்டத்தில் 'வழிகாட்டு நெறிமுறை'யாக, "குடிமக்கள் அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட வேண்டியது கட்டாயம்" என்பது இணைக்கப் பட்டது.

எனினும் இந்தியாவில் முஸ்லிம் சமுதாயம் மட்டும் கல்வியில் மிக மிகப் பின் தங்கியிருப்பதற்கு, அரசின் இத்தகையத் திட்டங்களைக் குறித்த அறிவோ, பிரக்ஞையோ அற்று இருப்பதும் ஒரு காரணம் ஆகும். பிரதிநிதித்துவம் இல்லை என அதனை மட்டுமே சமுதாய முன்னேற்றமின்மைக்குக் காரணமாக இன்னும் நாம் கூறிக் கொண்டு நடுரோட்டில் கொடி பிடிப்பதிலும் கோஷங்கள் எழுப்புவதிலும் காலம் கடத்திக் கொண்டிருப்பது சமுதாய முன்னேற்றத்திற்கு உகந்ததன்று.

இந்திய நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் இந்திய அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு முஸ்லிம் சமுதாயத்திற்கு எல்லா வகையான உரிமையும் உள்ளது. இவ்வுணர்வைச் சமுதாயத்திற்கு ஊட்டி, அரசின் நலத்திட்டங்களும் உதவியும் சமுதாய அடித்தட்டு மக்களைச் சென்று சேருவதற்கான முன்முயற்சிகளைப் போர்க்கால அவசரத்தில் எடுக்க வேண்டியது சமுதாய ஆர்வலர்களின் முக்கியக் கடமையாகும்.

சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக உழைப்பது மட்டுமே தங்களின் நோக்கம் என மார்தட்டும் அமைப்புகளும் இயக்கங்களும் அரசின் நலத்திட்டங்கள், உதவிகள் தொடர்பான உதவி வகுப்புகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மஹல்லா தோறும் நடத்துவது மிகப்பலன் தரும். இதனை ஏற்கெனவே உண்மையாகச் சமுதாய முன்னேற்றத்தில் ஆர்வமுள்ள பல்வேறு சமுதாய நலன்விரும்பிகள் அவரவர்களின் ஊர்களில் நடத்திக் கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முயற்சியை ஒவ்வொரு மஹல்லாவிலும் நடத்துவதற்கான ஒரு திட்டத்தை உடனடியாகப் போர்க்கால அவசரத்தில் அமைப்புகளும் கட்சிகளும் இயக்கங்களும் நடத்த முன்வர வேண்டும். ஒரு கல்வியாண்டு செல்வது ஒரு தலைமுறையின் எதிர்காலம் பின்செல்கிறது என்பதையும் மற்றொரு தலைமுறையின் எதிர்காலம் துவங்குகிறது என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. அதை நாம் உணந்து செயல்பட வேண்டியது காலத்தில் கட்டாயமாகும்.

அதேவேளை இந்திய அரசு அறிவிக்கும் வங்கிகள் மூலமான கல்விக் 'கடன்கள்' இஸ்லாத்தில் விலக்கப்பட்ட வட்டியின் அடிப்படையிலானது என்ற காரணத்தால் முஸ்லிம் சமூகம் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இயலாமல் கடந்த 60 ஆண்டு காலமாகத் தவித்துக் கொண்டிருக்கிறது. தட்டில் உணவிருந்தும் உண்ண முடியாத - தடுக்கப் பட்ட நோன்புநிலை. இதைச் சுட்டிக்காட்டி, கல்விக் கடனை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வட்டியில்லாக் கடனாக வழங்குமாறு அரசுக்குக் கோரிக்கை வைக்க முன்வரவேண்டும்.

60 ஆண்டுகாலமாக அரசுக் கடன் வகையில் நோன்பிருக்கும் சமுதாயத்துக்கு, சமுதாயத்தின் பெயராலே பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கும் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் ஆகியவற்றுள் முதலாவதாகக் குரல் கொடுத்து நம் எதிர்காலச் சந்ததியினருக்காவது இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்யப் போவது யார்? என்று வேறென்ன செய்ய ...?

காத்திருப்போம்.

நன்றிங்க

Friday, May 23, 2008

பயங்கரவாதத்துக்கு எதிராக...

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு!

வெள்ளி, 23 மே 2008

2002ஆம் ஆண்டு குஜராத் சபர்மதி எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் இராம பக்தர்களாக வந்த சங் பரிவார் தொண்டர்களையும் அப்பாவி இந்து மக்களையும் தீவைத்துக் கொளுத்திவிட்டு நிமிட நேரத்தில் அதனை 'முஸ்லிம் தீவிரவாத'மாகத் திசை திருப்பி, 3000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் காவுகொண்ட மோடியும் அவனது கொலைவெறிக் கூட்டமும் இன்றுவரை வெகு சுதந்திரமாக பவனி வரும் நாடு, நம் நாடு.

கடந்த 2006ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நான்டட் நகரத்தில் சங்பரிவார் அமைப்பு உறுப்பினர் ஒருவரது வீட்டில் குண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது சக்தி வாய்ந்த குண்டு வெடித்த நிகழ்வின்போது அங்கு முஸ்லிம்கள் அணியும் தொப்பிகளும் ஒட்டுத் தாடிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. இது போன்ற நிகழ்வுகளால் பலமுறை ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார குழுக்களின் பயங்கரவாத முகம் அம்பலப்பட்டாலும் பயங்கரவாதத்தை முஸ்லிம்கள் மட்டும் ஒட்டு மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டு செயல்படுவதாகக் காட்டுக் கூச்சல் போடும் பேச்சுரிமைச் சுதந்திரம் மிளிரும் நாடு, நம் நாடு.

கடந்த 2007 ஜனவரி மாதம் 24ஆம் நாளிரவில் தென்காசி RSS அலுவலகத்திலும் பேருந்து நிலையத்திலும் நிறுத்தப் பட்டிருந்த ஆட்டோ ரிக்ஷாக்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பேருந்து நிலையக் குண்டு வெடிப்பில் ஒரு வெற்றிலை வியாபாரி உள்பட இருவர் காயமடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிக்காத குண்டு, டெட்டனேட்டர்கள் உள்ளிட்டப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. என்றாலும், செய்வதையும் செய்துவிட்டு, "இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லிம் பயங்கரவாதிகளே காரணம்; அவர்களைக் கைது செய்ய வெண்டும்" என்று அறிக்கைகளை அள்ளி விடுவதற்கும் அவற்றைப் படித்துப் பார்க்காமலே பதிப்பதற்கும் பரபரப்புப் பத்திரிகைகள் நிறைந்த கருத்துச் சுதந்திரம் கொடி கட்டிப் பறக்கும் நாடு, நம் நாடு.

கேரளத்திலிருந்து வெளியாகும் "தேஜஸ்" என்ற தினசரியில், "நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்களை மோசமானவர்களாகவும் தேச விரோதிகளாகவும் சித்தரிக்க ஹிந்துத்துவ இயக்கங்கள் நடத்தும் சதிகளே" என்று பிரபல தலித் சிந்தனைவாதியும் "தலித் வாய்ஸ்" பத்திரிக்கையின் ஆசிரியருமான V.T இராஜசேகர் உரக்க உண்மையைப் போட்டுடைத்த போதிலும் பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற இன்னபிற புண்ணாக்கு வாதங்களெல்லாம் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களின் கடமைகளாக நிறைவேற்றப் படுவதுபோல் உலகமுழுதும் உருவாக்கப்பட்டு வரும் மாயையை ஒழித்துக் கட்டுவதற்காகப் பல்வேறு முயற்சிகளை முஸ்லிம்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதிலொன்றாக, இந்திய முஸ்லிம் அறிஞர்களும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டக் குழுவினரும் இணைந்து 'பயங்கரவாதத்துக்கு எதிரான இயக்கம்' Movement Against Terrorism (MAT) என்ற இயக்கத்தைத் தோற்றுவித்திருக்கின்றனர்.

"முஸ்லிம்களுக்குக் கல்வியூட்டும் கடமையோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை என்பதை ஊடகங்களுக்கும் பிறமதச் சகோதரர்களுக்கும் உரியவகையில் புரிய வைப்பதைக் கடமையாகக் கையிலெடுத்துள்ளோம்" என்று கூறுகிறார் ப.எ.இ.யின் ஒருங்கிணைப்பாளரும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டக் குழுவின் செயற்குழு உறுப்பினருமான காலித் ரஷீத் ஃப்ராங்கி மஹல்லீ.

"அண்மையில் நடைபெற்ற ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக இந்திய முஜாஹிதீன் என்ற பெயரில் மின்னஞ்சல் அனுப்பியவரையும் அதைப்போன்ற பெயர் தாங்கிகளையும் எதிர்த்துப் போராடி முறியடிப்போம்" என்றும் அவர் சூளுரைத்தார்.

மேலும், கடந்த ஃபிப்ரவரி 2ஆம் நாள் லக்நவ்வில் இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் குழுமிய மாநாட்டில் இந்தத் தீர்மானம் எடுக்கப் பட்டு, இப்போது செயலுக்கு வருவதாகவும் IANS க்கு அளித்த தொலைபேசிப் பேட்டியின்போது ஆயிஷ்பக் ஈத்காவின் துணை இமாமான மஹல்லீ கூறினார்.

"நாட்டில் நிகழ்த்தப் படும் பயங்கரவாதச் செயல்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் தலையில் சுமத்தி வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியதாகும்" என்று கூறிய மஹல்லீ, நாங்கள் தொடங்கியிருக்கும் இந்த 'பயங்கரவாதத்துக்கு எதிரான இயக்கம்' பற்றி, ஒவ்வொரு பள்ளியின் வெள்ளிமேடைகளிலும் அறிமுகப் படுத்தி, எங்கள் சமுதாயத்தவரைத் தவறான வழிகாட்டுதலின் பக்கம் செல்ல விடாது தடுத்து, வெற்றியின் இலக்கை நிச்சயம் அடைவோம்" என்று உறுதியோடு கூறும் மஹல்லீயின் அவாவும் இலட்சியமும்தான் கோடானு கோடி இந்திய முஸ்லிம்களின் அவாவும் இலட்சியமுமாகும்.

நாட்டின் அமைதியே நமது அவா!

நன்றிங்க

தொப்பியும், தாடியையும் காட்டி ஏமாற்றுபவர்களுக்கு பயங்கரவாதத்துக்கு எதிரான அமைப்பையும் பயங்கரவாத அமைப்பு என சாயம் பூசுவது மிக எளிது.

எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்.