Showing posts with label அணு. Show all posts
Showing posts with label அணு. Show all posts

Thursday, February 21, 2008

அணு சக்தி ஒப்பந்தம்

அணு சக்தி ஒப்பந்தம் - யு.எஸ். எம்பிக்கள் திடீர் கெடு

வியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2008

டெல்லி: மே மாதத்திற்குள் அணு சக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் ஜூலைக்குள் அதை அமல்படுத்த முடியும். இல்லாவிட்டால் அடுத்து வரும் புதிய அரசு, ஒப்பந்தத்தை முழுமையாக மறு பரிசீலனை செய்யும். அது இந்தியாவுக்கு சாதகமாக இருக்காது என்று அமெரிக்க எம்.பிக்கள் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

அமெரிக்க எம்.பிக்களான ஜனநாயகக் கட்சியின் ஜான் கெர்ரி, ஜோசப் பிடேன், குடியரசுக் கட்சியின் சச் ஹேகல் ஆகியோர் டெல்லி வந்துள்ளனர்.

டெல்லியில், செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், மே மாதத்திற்குள் ஒப்பந்தத்தை இந்திய அரசு அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் அதை ஜூலை மாதத்திற்குள், புதிய அரசு அமைவதற்குள் ஒப்புதல் பெறப்படும். அதைத் தாண்டி விட்டால், புதிய அரசு வந்து விடும். புதிய அரசு இதே நிலையில் ஒப்பந்தத்தை ஏற்கும் எனக் கூற முடியாது.

ஒப்பந்தம் முழுமையாக மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். பல புதிய கெடுபிடிகளும், கட்டுப்பாடுகளும் வருவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், புதிய நிபந்தனைகளும் விதிக்கப்படலாம்.

மேலும், அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் உள்ளிட்ட பிற விவகாரங்களையும் புதிய அரசு கிளப்பக் கூடும்.

நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த அரசு முடிவதற்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது இந்தியாவுக்கு நல்லது. இல்லாவிட்டால் இந்தியாவுக்கு சிக்கலாகி விடும்.

இந்தியா ஜனநாயக நாடு. இங்குள்ள சில கட்டாயங்கள், நிர்பந்தங்கள் அமெரிக்காவுக்குப புரிகிறது. ஆனால் ஒப்பந்தம் நிறைவேறியாக வேண்டும் என்பதில் அமெரிக்கா தீவிரமாக இருக்கிறது. இது தோல்வி அடைந்தால், அமெரிக்கா மீது இந்தியாவில் தவறான எண்ணங்கள் பரவி விடும் என்றார் அவர்.

பாகிஸ்தான் தேர்தலில் பார்வையாளர்களாக செயல்பட்ட ஜான் கெர்ரி உள்ளிட்ட 3 எம்.பிக்களும் நேற்று பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பல்வேறு எம்.பிக்கள் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினர்.

இடதுசாரிகள் கண்டனம்:

அமெரிக்க எம்.பிக்கள் விதித்துள்ள மே மாத கெடுவுக்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை.

இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் பலன்கள் கிடைக்கும் என்பதாலேயே இதை அமல்படுத்த அமெரிக்கா நெருக்குதல் கொடுக்கிறது. ஆனால் அதற்கு இந்தியா அடி பணியாது என்று கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா கூறுகையில், உலக அளவில் சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது. எனவே அதைத் தடுக்கத்தான் இவ்வாறு நெருக்கடி கொடுக்கிறது அமெரிக்கா என்று கூறியுள்ளார்.

நன்றிங்க

தூண்டில் காரன் மிதப்பு மேலேதான் கண்ணாயிருப்பான்!

Thursday, August 16, 2007

அணு குண்டு சோதனை நடத்தினால்...

அணு குண்டு சோதனை நடத்தினால்
ஒப்பந்தம் ரத்து: அமெரிக்கா


ஆகஸ்ட் 16, 2007

வாஷிங்டன்: இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால் அடுத்த நிமிடமே இந்தியாவுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள சிவில் அணு சக்தி ஒப்பந்தம் ரத்தாகி விடும் என அமெரிக்கா மிரட்டியுள்ளது.

அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டுள்ள அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆனால் இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் காங்கிரஸ் கூட்டணி அரசு உறுதியாக உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு பாதகமான பல அம்சங்கள் இருப்பதாக பரவலாக கருத்து உள்ள நிலையில், இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால் உடனடியாக ஒப்பந்தம் முறிந்து விடும் என அமெரிக்கா திடீரென மிரட்டியுள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கார்மக் கூறுகையில், இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால் உடனடியாக ஒப்பந்தம் முறிவடைந்து விடும் என ஒப்பந்தத்தில் ஒரு அம்சம் உள்ளது.

அதேபோல அணு சோதனை நடத்தினால் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கிய அனைத்துப் பொருட்களும் திரும்பப் பெறப்படும் எனவும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது என்றார் மெக்கார்மக்.

அமெரிக்காவுடனான 123 அணு சக்தி ஒப்பந்தத்தில், இந்தியாவின் அணு குண்டுச் ேசாதனைக்கு எந்தவிதத் தடையும் இல்லை. அது நமது உரிமை. அதை நாம் அமெரிக்காவிடம் விட்டுக் கொடுக்கவில்லை என்று சமீபத்தில்தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.

ஆனால் பிரதமரின் பேச்சில் சம்மட்டியால் அடிப்பது போல, அணு குண்டு சோதனை செய்தால், ஒப்பந்தம் ரத்து என பட்டவர்த்தனமாக அமெரிக்கா தெளிவாகத் தெரிவித்து விட்டது.

நன்றிங்க

அணு ஒப்பந்தத்தில் அமெரிக்கா போட்ட குண்டு சூப்பர்!

Monday, August 13, 2007

தேர்தலுக்கு ரெடியா...?

ஆட்சியில் தொடர்வதா, இல்லையா?-காங். முடிவு
செய்யட்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ


ஆகஸ்ட் 13, 2007

திருவனந்தபுரம்: அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆட்சியில் தொடர வேண்டுமா வேண்டாமா என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக எங்கள் கட்சியின் நிலையை ஏற்கனவே தெரிவித்து விட்டோம். இந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஆனால் மத்திய அரசு அதையும் மீறி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்கும்.

மத்திய அரசுக்கு ஆதரவு தரவேண்டும் என்பது எங்கள் கடமை கிடையாது. மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ், மைனாரிட்டி அரசு என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

இந்த அரசு தொடர வேண்டுமா வேண்டாமா என்பதை காங்கிரஸ் தான் தீர்மானிக்க வேண்டும்.

அணு ஒப்பந்தம் குறித்து இன்னும் இரண்டு நாட்களில் மார்க்சிஸ்ட் கட்சி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கும் என்றார் காரத்.

நன்றிங்க

தேர்தலுக்கு நீங்கள் ரெடியா...?

Wednesday, August 08, 2007

நாம் என்ன அமெரிக்காவின் அடிமைகளா?

நாம் என்ன அமெரிக்காவின் அடிமைகளா?- ஜெ. கேள்வி

ஆகஸ்ட் 07, 2007

சென்னை: அணு சக்தி ஒப்பந்தம் மூலம் அமரிக்காவுக்கு, மத்திய அரசு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.

இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைக் கண்டித்து இன்று ஒரு அறிக்கை விட்டுள்ளார் ஜெயலலிதா. அதில் கூறியிருப்பதாவது:

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையிலான சம அந்தஸ்து கொண்ட ஒப்பந்தம் போலவே இல்லை. மாறாக, எஜமானர், அடிமை சாசனம் போலவே இருக்கிறது. நமது நாட்டை அமெரிக்காவிடம் அடகு வைத்து விட்டது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.

இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஆராய எம்.பிக்கள், விஞ்ஞானிகள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. 22 கட்சிகளைக் கொண்ட கூட்டணியான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசு, வெளிநாட்டு எஜமானர்களிடம் நமது நாட்டை அடகு வைத்து விட்டது. அவர்கள் கூறியபடிதான் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து எம்.பிக்கள், விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவின் ஆய்வுக்கு விட வேண்டும். அவர்கள் ஒப்புதல் கொடுத்த பின்னர்தான் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும்.

அணு சக்தித் துறையில் இந்தியா முன்னேற்றப் பாதையில் நடை போட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய விஞ்ஞானிகளின் அணு ஆய்வுத் திறமை பாதிக்கப்படும், தடைபட்டுப் போகும். அவர்களின் ஆய்வு மனநிலை பின்னடைவை சந்திக்கும்.

நமது நாட்டு அணு சக்தி நிலையங்களை அமெரிக்கா ஏன் பார்வையிட வேண்டும்?. அவர்கள் நாட்டில் உள்ள அணு சக்தி நிலையங்களைப் பார்வையிட நம்மை அமெரிக்கா அனுமதிக்குமா?

இனிமேல், பிற நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும்போது நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலை அரசு பெற வேண்டும். அதற்கேற்ப நமது அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

மக்கள் மனதைப் புரிந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டு, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே முடியாது என்று கூறுகிறது மத்திய அரசு.

ஈராக் அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ளதாக கூறி அந்த நாட்டை சிதறடித்து விட்டது அமெரிக்கா. வட கொரியாவையும் குறி வைத்து தற்போது காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஈரான் மீதும் படையெடுக்க காத்துக் கொண்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்தியா ஏன் அமெரிக்காவுடன் இப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும். நாமாக வலியச் சென்று ஏன் அவர்களின் வலையில் விழ வேண்டும் என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா.

நன்றிங்க

ஒஹோ...இந்தியா, அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டேன்னு முந்தைய ஜனாதிபதி மறுத்து விட்டதால், அணு ஒப்பந்தத்தில் கண்ணை மூடிக்கிட்டு கையெழுத்திட புதிய ஜனாதிபதியை காங்கிரஸ் தலைவி தேர்ந்தெடுத்தாரோ...?