Thursday, July 19, 2007

அரை குறையாக விளங்கிய விமர்சனம்.

நான் எழுதிய ''வாழ்க பாரதம்'' என்ற பதிவைப் படித்துவிட்டு, இஸ்லாத்தையும் அரைகுறையாக விளங்கி, சற்று உணர்ச்சி வயப்பட்டு இஸ்லாத்தை விமர்சித்திருக்கிறார் மாற்றுமத அன்பர். அவர் புரிந்து கொள்ளவும் - அவரிடம் விளக்கம் கேட்டும்,

அன்பர் செந்தில் அழகு பெருமாள்,

அரசாங்கத்தில் சம்பளம் பெற்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு பணியாற்றும் காவல் துறையைத்தான் நான் விமர்சித்திருந்தேன். சாலை விபத்துக்கள் அதிகமாக நிகழ்கிறது என்றால் அதைக் குறைப்பதற்கான வழிகளை ஆலோசனை செய்து மேற்கொள்ள வேண்டும். அதற்காகவே காவல் துறையிலேயே போக்குவரத்துத் துறை என்ற பிரிவு இயக்கப்படுகிறது.

(சாலை விபத்துக்கள் அதிகமாக நிகழ்வதைத் தவிர்க்க என்னிடம் கேட்டாலும் அதற்கான சிறந்த ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருக்கிறேன்)

அதை விட்டு கிடாய் வெட்டி ரத்தத்தைத் தெளித்தால் விபத்துக்கள் இல்லாமல் போய்விடும் என்று அரசாங்க காவல்துறை ஊழியர்கள் எண்ணி செயல்படுவது பொறுப்பற்றத்தனம். இந்த செயல்களுக்கு காவல் துறை தேவையில்லை கிடாய் வெட்டினாலே போதும் என்று சொல்லியிருந்தேன்.

கொலைகள் குறைய வேண்டுமானால் உண்மையான குற்றவாளிகளைப் பிடித்துத் தண்டிக்க வேண்டும். அதை விடுத்து கிடாய் வெட்டி ரத்தத்தைத் தரையில் கொட்டி அதில் மண்ணைத் தூவினால் குற்றவாளிகள் தானாக வந்து சரணடைந்து விடுவார்கள் - குற்றங்கள் குறைந்துவிடும் என நம்புவதும் சோம்பேறித்தனம், மற்றும் காவல் துறையின் கையாலாகத்தனம்.

என்னுடைய விமர்சனத்தை அரைகுறையாக விளங்கிக்கொண்டு, நான் முஸ்லிம் என்பதால் இஸ்லாத்தைத் தாக்க துவங்கி விட்டீர்களே! உங்கள் கேள்விகளைப் பார்ப்போம்.

 //1, ஹஜ் யாத்திரை சென்றால் நாம் செய்த பாவங்கள் தீரும். சரி அப்படியென்றால் நாம் கொலை கற்பழிப்பு எல்லாம் செய்து விட்டு ஹஜ் யாத்திரை செல்வோம். நம் பாவம் தீர்ந்து விடும் தானே.//

4, உம்ரா செய்தால் புண்ணியம் கிட்டும். சரி கொலைகாரர்களை சிறையில் அடைப்பதற்கு பதில் உம்ரா செல்லச் சொல்வோம்.

யாரிடமிருந்தாவது ஒரு ரூபாய் கடன் பெற்றிருந்து அந்த ஒரு ரூபாய் கடனைத் திரும்ப செலுத்தாமல் கடன் பெற்றவர் மரணம் அடைந்து விட்டால் அதை இஸ்லாம் மன்னிப்பதில்லை. அவர் ஹஜ் செய்திருந்தாலும் அது மன்னிக்கப்படாது. அப்படி இருக்க கொலை, கற்பழிப்பு போன்ற பாவங்களை செய்து விட்டு ஹஜ், உம்ரா யாத்திரை சென்றால் அது மன்னிக்கப்படும் என்று இஸ்லாம் எங்கே குறிப்பிட்டுச் சொல்கிறது என்பதை தெரியப்படுத்துங்கள்!

2, கிடா வெட்டுவது உங்கள் மதத்திலும் தானே உள்ளது. ஹஜ் யாத்திரையின் போது நீங்களும் குர்பானி தருவீர்கள் தானே!!

கிடாய் வெட்டுவது இஸ்லாத்திலும் உண்டு. ஹஜ் கிரியைகளின் நினைவுகளாக இந்த குர்பானிகள் நிகழ்த்தப்படுகிறது. அப்படி கிடாய் வெட்டுவதால் மாங்காய் விழுந்து விடும் என்று எந்த முஸ்லிமும் நம்புவதில்லை. நம்புபவர் இஸ்லாத்தை அறியாதவராக இருப்பார்.

3, ஹஜ் யாத்திரையின் போது சாத்தான் வரும் அதை எதிர்க்க‌ கல் எறிவார்கள். சரி சாத்தான் வந்தால் அதைக் காட்டுங்கள். அதை ஏன் நீங்கள் எதிர்கிறீர்கள் அல்லாஹ் பார்த்துக் கொள்ளமாட்டாரா?

ஹஜ் யாத்திரையின் போது சாத்தான் வரும் என்று நீங்கள் புதிய இஸ்லாத்தை கற்பிக்கிறீர்கள். அப்படி எங்கும் இஸ்லாம் கூறவில்லை! இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் நினைவாக நிறைவேற்றப்படும் ஹஜ் செயல்பாடுகளில் அவர்கள் ஷைத்தானுக்குக் கல்லெறிந்த நிகழ்ச்சியின் நினைவாகவே அதே இடத்தில் ஹாஜிகள் கல்லெறிகிறார்கள்.

சத்தான் வரும் அதை எதிர்க்க கல் எறிவார்கள் என நீங்கள் சொல்வதை இஸ்லாத்தில் படித்திருந்தால் அதையும் எழுதுங்கள். சாத்தானை எதிர்க்க வேண்டும் என்றால் என்ன? என்பதை பிறகு எழுதுகிறேன். அல்லாஹ் எதிர்க்கமாட்டாரா? என்ற உங்கள் கேள்விக்கும் விளக்கம் எழுதுகிறேன்.

5, இந்தியாவில் உள்ள தர்கா சென்று வழிபடுவது. அந்த சமாதியில் இருப்பவன் எப்போதோ இறந்து விட்டான் அவன் எப்படி உங்களுக்கு அல்லாஹ்விடம் துவா கேட்பான்!!

தர்கா வழிபாடு இஸ்லாத்துக்கு எதிரானது. தர்காவுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதைக்கூட விளங்காமல் தர்காவை இஸ்லாத்தோடு சேர்த்து எழுதியிருக்கிறீர்களே!

சொல்லுங்கள் சமாதிஈ மண்ணறை வழிபாட்டை இஸ்லாம் எங்கு ஆதரிக்கிறது?

Wednesday, July 18, 2007

வாழ்க பாரதம்!



மதசார்பற்ற பாரதநாடு வாழ்க!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

06.சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் "கிடா' வெட்டி பூஜை: விபத்து, கொலையை தவிர்க்க "கிடா ரத்தம்' தெளிப்பு

சங்ககிரி: சங்ககிரி போலீஸ் எல்லைக்குள் அடிக்கடி நடக்கும் விபத்து, கொலை சம்பவங்களை தடுக்க எண்ணிய போலீசார், போலீஸ் ஸ்டேஷனில் கிடா வெட்டி, சிறப்பு பூஜை நடத்தினர்.

சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள், சமீப காலமாக கொலை, வாகன விபத்துகள் தொடர்ந்து நடக்கின்றன. 15க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். அதை தடுக்க எண்ணிய சங்ககிரி போலீசார், கிடா வெட்ட ஏற்பாடு செய்தனர். நேற்று முன்தினம் இரவில் போலீஸ் ஸ்டேஷன் முன் மஞ்சள், அருகம்புல், கற்பூரம், ஊதுபத்தி ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர். அங்கு கிடா வெட்டி, வாசலில் ரத்தத்தை விட்டு, அதன் மீது மண்ணை தூவி மறைத்தனர். கிடா ரத்தம் ஸ்டேஷனை சுற்றிலும் தெளிக்கப்பட்டது. போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் கிடாவை சமையல் செய்து, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் விருந்து பரிமாறினர். இன்ஸ்பெக்டர் அண்ணாமலை, எஸ்.ஐ., வெங்கடேசன், பன்னீர்செல்வம், ஏட்டுகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர், கிடா விருந்து உண்டனர். டி.எஸ்.பி., சிவக்குமார் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

------------------------------------------

மொத்த இந்தியாவிலும் காவல் துறையை சுத்தமாக தூக்கி, துடைத்தெறிந்து விட்டு, பேசாமல், ஆட்டு ரத்தத்தைத் தெளித்தே குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கலாமே என்ன நாஞ்சொல்றது?

சமூக அவலம்




ஈரோடு: வீட்டில் வைத்து பராமரிக்க முடியாமல் 75 வயது பாட்டியை சொந்த பேரன்களே குப்பை மேட்டில் வீசிச் சென்ற பரிதாப சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை சேர்ந்தவர் சின்னம்மாள்(75). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரு மகள்கள் லக்காபுரத்திலும், ஒரு மகள் திண்டலிலும் வசிக்கின்றனர். சின்னம்மாளின் கணவர் பழனியப்பன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். திண்டலில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்த சின்னம்மாள் நடமாட முடியாமல் படுத்த படுக்கையாகவே இருந்தார். பெற்ற தாயை கவனிக்காமல் தினம்தோறும் மகளே வசைபாடியபடி இருந்துள்ளார்.

அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், சகித்துக் கொள்ள முடியாத மகள் மற்றும் குடும்பத்தினர் பாட்டியை எங்காவது விட்டுவிட முடிவு செய்தனர். சின்னம்மாளின் பேரன்கள் இருவரும் சனிக்கிழமை இரவு அவரை துணியில் சுற்றி, ஒரு ஆட்டோவில் துõக்கி வந்தனர். திண்டல் அடுத்த மேட்டுக்கடை அருகே குப்பை மேட்டில் சின்னம்மாளை படுக்க வைத்து விட்டு சென்றனர். இரவு நேரம் என்பதால், பாட்டியும் தான் எங்கு இருக்கிறோம் என்பதை உணர முடியாமல் விடியும் வரை குப்பை மேட்டிலேயே முனங்கியபடி படுத்திருந்தார்.

அப்பகுதியில் வசித்து வரும் மோகனசுந்தரியும், அவரது கணவர் பெரியசாமியும் குப்பை மேட்டில் பாட்டியின் முனகல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். பேசுவதற்கு கூட திராணியின்றி படுத்திருந்த பாட்டிக்கு உணவு கொடுத்து விசாரித்தனர். "எனது மகளால் என்னை கவனிக்க முடியாததால், பேரன்கள் இருவரும் என்னை இங்கு வந்து அனாதையாக விட்டு சென்றனர்' என தழுதழுக்கும் குரலில் சின்னம்மாள் கூறியுள்ளார்.

மோகனசுந்தரி, "ஜெய்பாரத்' சமூகநல விழிப்புணர்வு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முருகேசன் மற்றும் அப்பகுதியினர் பாட்டிக்கு தேவையான உணவை கொடுத்து கவனித்து வந்தனர். குப்பையில் படுத்திருந்த பாட்டிக்கு, சேலை, படுக்க கட்டில் கொடுத்து எதிரே இருந்த மரத்தடியில் வைத்து பாதுகாத்து வந்தனர்.

மூன்று நாட்களாக பாட்டிக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வந்தவர்கள் நேற்று காலை சமூகநலத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சமூகநல அலுவலர்கள் விசாரித்து பாட்டியை துõக்கி சென்று கே.கே.நகரில் உள்ள கருணை இல்லத்தில் சேர்த்தனர்.

நன்றிங்க: தினமலர்

அட கல்நெஞ்சக்காரங்களா!