நான் எழுதிய ''வாழ்க பாரதம்'' என்ற பதிவைப் படித்துவிட்டு, இஸ்லாத்தையும் அரைகுறையாக விளங்கி, சற்று உணர்ச்சி வயப்பட்டு இஸ்லாத்தை விமர்சித்திருக்கிறார் மாற்றுமத அன்பர். அவர் புரிந்து கொள்ளவும் - அவரிடம் விளக்கம் கேட்டும்,
அன்பர் செந்தில் அழகு பெருமாள்,
அரசாங்கத்தில் சம்பளம் பெற்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு பணியாற்றும் காவல் துறையைத்தான் நான் விமர்சித்திருந்தேன். சாலை விபத்துக்கள் அதிகமாக நிகழ்கிறது என்றால் அதைக் குறைப்பதற்கான வழிகளை ஆலோசனை செய்து மேற்கொள்ள வேண்டும். அதற்காகவே காவல் துறையிலேயே போக்குவரத்துத் துறை என்ற பிரிவு இயக்கப்படுகிறது.
(சாலை விபத்துக்கள் அதிகமாக நிகழ்வதைத் தவிர்க்க என்னிடம் கேட்டாலும் அதற்கான சிறந்த ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருக்கிறேன்)
அதை விட்டு கிடாய் வெட்டி ரத்தத்தைத் தெளித்தால் விபத்துக்கள் இல்லாமல் போய்விடும் என்று அரசாங்க காவல்துறை ஊழியர்கள் எண்ணி செயல்படுவது பொறுப்பற்றத்தனம். இந்த செயல்களுக்கு காவல் துறை தேவையில்லை கிடாய் வெட்டினாலே போதும் என்று சொல்லியிருந்தேன்.
கொலைகள் குறைய வேண்டுமானால் உண்மையான குற்றவாளிகளைப் பிடித்துத் தண்டிக்க வேண்டும். அதை விடுத்து கிடாய் வெட்டி ரத்தத்தைத் தரையில் கொட்டி அதில் மண்ணைத் தூவினால் குற்றவாளிகள் தானாக வந்து சரணடைந்து விடுவார்கள் - குற்றங்கள் குறைந்துவிடும் என நம்புவதும் சோம்பேறித்தனம், மற்றும் காவல் துறையின் கையாலாகத்தனம்.
என்னுடைய விமர்சனத்தை அரைகுறையாக விளங்கிக்கொண்டு, நான் முஸ்லிம் என்பதால் இஸ்லாத்தைத் தாக்க துவங்கி விட்டீர்களே! உங்கள் கேள்விகளைப் பார்ப்போம்.
//1, ஹஜ் யாத்திரை சென்றால் நாம் செய்த பாவங்கள் தீரும். சரி அப்படியென்றால் நாம் கொலை கற்பழிப்பு எல்லாம் செய்து விட்டு ஹஜ் யாத்திரை செல்வோம். நம் பாவம் தீர்ந்து விடும் தானே.//
4, உம்ரா செய்தால் புண்ணியம் கிட்டும். சரி கொலைகாரர்களை சிறையில் அடைப்பதற்கு பதில் உம்ரா செல்லச் சொல்வோம்.
யாரிடமிருந்தாவது ஒரு ரூபாய் கடன் பெற்றிருந்து அந்த ஒரு ரூபாய் கடனைத் திரும்ப செலுத்தாமல் கடன் பெற்றவர் மரணம் அடைந்து விட்டால் அதை இஸ்லாம் மன்னிப்பதில்லை. அவர் ஹஜ் செய்திருந்தாலும் அது மன்னிக்கப்படாது. அப்படி இருக்க கொலை, கற்பழிப்பு போன்ற பாவங்களை செய்து விட்டு ஹஜ், உம்ரா யாத்திரை சென்றால் அது மன்னிக்கப்படும் என்று இஸ்லாம் எங்கே குறிப்பிட்டுச் சொல்கிறது என்பதை தெரியப்படுத்துங்கள்!
2, கிடா வெட்டுவது உங்கள் மதத்திலும் தானே உள்ளது. ஹஜ் யாத்திரையின் போது நீங்களும் குர்பானி தருவீர்கள் தானே!!
கிடாய் வெட்டுவது இஸ்லாத்திலும் உண்டு. ஹஜ் கிரியைகளின் நினைவுகளாக இந்த குர்பானிகள் நிகழ்த்தப்படுகிறது. அப்படி கிடாய் வெட்டுவதால் மாங்காய் விழுந்து விடும் என்று எந்த முஸ்லிமும் நம்புவதில்லை. நம்புபவர் இஸ்லாத்தை அறியாதவராக இருப்பார்.
3, ஹஜ் யாத்திரையின் போது சாத்தான் வரும் அதை எதிர்க்க கல் எறிவார்கள். சரி சாத்தான் வந்தால் அதைக் காட்டுங்கள். அதை ஏன் நீங்கள் எதிர்கிறீர்கள் அல்லாஹ் பார்த்துக் கொள்ளமாட்டாரா?
ஹஜ் யாத்திரையின் போது சாத்தான் வரும் என்று நீங்கள் புதிய இஸ்லாத்தை கற்பிக்கிறீர்கள். அப்படி எங்கும் இஸ்லாம் கூறவில்லை! இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் நினைவாக நிறைவேற்றப்படும் ஹஜ் செயல்பாடுகளில் அவர்கள் ஷைத்தானுக்குக் கல்லெறிந்த நிகழ்ச்சியின் நினைவாகவே அதே இடத்தில் ஹாஜிகள் கல்லெறிகிறார்கள்.
சத்தான் வரும் அதை எதிர்க்க கல் எறிவார்கள் என நீங்கள் சொல்வதை இஸ்லாத்தில் படித்திருந்தால் அதையும் எழுதுங்கள். சாத்தானை எதிர்க்க வேண்டும் என்றால் என்ன? என்பதை பிறகு எழுதுகிறேன். அல்லாஹ் எதிர்க்கமாட்டாரா? என்ற உங்கள் கேள்விக்கும் விளக்கம் எழுதுகிறேன்.
5, இந்தியாவில் உள்ள தர்கா சென்று வழிபடுவது. அந்த சமாதியில் இருப்பவன் எப்போதோ இறந்து விட்டான் அவன் எப்படி உங்களுக்கு அல்லாஹ்விடம் துவா கேட்பான்!!
தர்கா வழிபாடு இஸ்லாத்துக்கு எதிரானது. தர்காவுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதைக்கூட விளங்காமல் தர்காவை இஸ்லாத்தோடு சேர்த்து எழுதியிருக்கிறீர்களே!
சொல்லுங்கள் சமாதிஈ மண்ணறை வழிபாட்டை இஸ்லாம் எங்கு ஆதரிக்கிறது?