ராஜிவ் கொலை சதிகாரன் "கேபி' தாய்லாந்தில் கைது
புதுடில்லி: ராஜிவ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சி.பி.ஐ., அதிகாரிகளாலும், சர்வதேச போலீசாராலும் தேடப்பட்டு வந்த குமரன் பத்மநாதன் என்ற கே.பி., தாய்லாந்தில் கைது செய்யப் பட்டான். அவனை உடனடியாக ஒப்படைக்கும் படி தாய்லாந்து அரசிடம் சி.பி.ஐ., கேட்டுக் கொண்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு இரண்டு சர்வதேச பிரிவுகள், பல்வேறு நாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன. கே.பி., பிரிவு மற்றும் அய்யனா குழு என்று அவை அழைக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பெயர்களில் பல்வேறு நாடுகளில், விடுலைப் புலிகளுக்காக ஆயுதம் சேகரித்து கடத்துதல், நிதி திரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தான் கேபி. இவன் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு இருந்தான்.
தாய்லாந்தின் ரனாங் மாகாணத் தில், நேற்று முன்தினம் குமரன் பத்மநாதனும், விடுதலைப்புலி அமைப்பை சேர்ந்த மேலும் இருவரும், துப்பாக்கிகளும் 45 ஆயிரம் தோட்டாக்களும் வாங்க முயன்றபோது பிடிபட்டனர்.ராஜிவ் கொலையாளிகளுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி அளித்தவர் குமரன் பத்மநாதன். ராஜிவ் கொலை வழக்கில் பல ஆண்டுகளாக இவனை சி.பி.ஐ., தேடி வருகிறது. இது தொடர்பாக 23 நாடுகளிடம் தகவல் தெரிவித்து தேடுதல் வேட்டை நடத்தியது.
சுவீடனில் இவனைப் பிடிக்க சி.பி.ஐ., முயன்றபோது அவன் தப்பி விட்டான். இந்நிலையில், பாங்காக்கில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதனை உடனடியாக ஒப்படைக்கும் படி சி.பி.ஐ., அந்த அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. ராஜிவ் வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் தாய்லாந்து அரசிடம் சி.பி.ஐ., அளித்துள்ளது. இதனையடுத்து சி.பி.ஐ., அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தும் போது 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த பல்வேறு சதிப் பின்னணிகள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றிங்க, தினமலர் 12/09/2007
பலநாள் கள்ளன் ஒருநாள் அகப்படுவான்!