Monday, December 04, 2006

ஒரு படத்துக்கு எத்தனை கிளைமாக்ஸ்?

ஒரே படத்துக்கு எத்தனை முறை "கிளைமாக்ஸ்' காட்சிகள் வரும் என்று முதல்வர் கருணாநிதிக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான் கிளைமாக்ஸ். கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனும் இந்தப் படத்துக்கு இன்னொரு கிளைமாக்ஸ் எழுதியிருக்கிறார். ஆகவே ஒரே படத்துக்கு எத்தனை முறை கிளைமாக்ஸ் எழுத முடியும். ஒருவேளை கருணாநிதி சிறந்த திரைப்பட வசனகர்த்தா என்பதால் அவர், இதற்கு தனியாக ஒரு கிளைமாக்ஸ் வைத்திருக்கிறாரோ என்னவோ?

திரும்பத் திரும்ப ஆரம்பத்திலிருந்து படத்தைக் காட்டிக் கொண்டிருந்தால் எத்தனை பேர் பார்ப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசும், கேரள அரசும் விதம் விதமாக புதிய கதை ஆரம்பத்திலிருந்து எழுதிக் கொண்டேயிருக்கின்றன. தில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விவரத்தை இரு மாநில முதல்வர்களும் வேறு விதமாகக் கூறியிருப்பதே இதற்குச் சான்று.

தமிழக அரசு அதிநவீன மற்றொரு அணை கட்டிக்கொள்ளலாம், ஆனால் தண்ணீர் கிடைக்கும் அளவைப் பொருத்துத்தான் கேரளம் தமிழக்துக்குத் தண்ணீரைத் திறந்துவிடும் என்று கூறியதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியிருக்கிறார்.

தமிழக முதல்வரோ, அண்டை மாநிலங்களுடன் சுமுக உறவை விரும்புவதாகக் கூறுகிறார்.

கடந்த 29-ம் தேதி அறிவாலயத்தில் தில்லி பேச்சுவார்த்தை குறித்து பேட்டியளித்துவிட்டு, அதுகுறித்த விவரங்கள் 30-ம் தேதி பிற்பகலுக்குப் பிறகுதான் விளம்பரமாக வெளியிடப்பட்டன. ஆனால் இதன் விவரங்களை வெளியிட வேண்டும் என்று முன்பே நான் கேட்டேன். காக்கை உட்கார பனம்பழம் விழவில்லை. பனம்பழம் விழவேண்டும் என்று காக்கை உட்கார்ந்ததைப் போலாகிவிட்டது.

ஐடி அமைச்சரைக் கேட்டுப் பெறும்போது, நீர்வளத் துறை கேட்டுப் பெற முடியாதா?: சன் டி.வி., சூர்யா டி.வி., போன்ற டி.வி.க்களை நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பதவியைக் கேட்டுப்பெற முடிந்தது. ஆனால் நீர்வளத்துறை அமைச்சரைக் கேட்டுப் பெற முடியாதது ஏன்?. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஆந்திரத்தைச் சேர்ந்த ராவ் என்பவர் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது கர்நாடகம், ஆந்திரம் இடையே கிருஷ்ணா நதி நீர் பிரச்சினை இருந்தது. தற்போது கர்நாடகம், மகாராஷ்டிரம் இடையே பெல்காம் எல்லைப் பிரச்சினை உள்ள நிலையில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சிவராஜ் பாட்டீல் உள்துறை அமைச்சராக இல்லையா?

திருமண மண்டபம் இடிப்பு விவகாரம்: திருமண மண்டபத்தை எந்தப் பகுதியில் இடிக்கப் போகிறீர்கள் என்று வழக்கறிஞர் மூலமாக கேட்டாலும் அதற்கு இதுவரை உரிய பதில் இல்லை. முன்னுக்குப் பின் முரணாகவும், பொய் பேசும் மத்திய அமைச்சருக்கு பதில் கூற விரும்பவில்லை. மண்டபம் இடிப்பதைப் பற்றியும் கவலைப்படவில்லை.

மூன்றாவது அணியல்ல, முதல் அணி: மூன்றாவது அணி அமைப்பீர்களா என்கிறீர்கள்? என்னை மூன்றாவது அணியாக நினைக்கவில்லை. முதல் அணி என்றே கருதுகிறேன். மற்ற கட்சியிலிருந்து தேமுதிக-வில் பலர் சேர்கின்றனர். கடந்த காலத்தில் ஊழல் புகாரில் சிக்கியவர்கள் கட்சியில் சேர்ந்தது குறித்து கேட்கிறீர்கள், அவர்கள் திருந்த வாய்ப்பு உள்ளது. பல இடங்களிலிருந்து நீர் கடலில் கலந்தாலும், கடலின் தன்மை மாறாமலிருப்பதைப் போல் நான் மாறாமல் இருக்கிறேன்.

தற்போது விலைவாசியும், வறுமையும் பூதாகர பிரச்சினை. இதை மறைக்கவே முல்லைப் பெரியாறு விவகாரத்தைப் பெரிதாகப் பேசுகின்றனர். தொடர் மழை பெய்ததால், அணையில் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் 136 அடியைக் கடந்து தண்ணீர் நிரம்பியதாக சரித்திரம் இல்லை.

ஆட்சியைப் பிடிப்பதே லட்சியம்: மலையுடன் மோதுவதாகக் கூறுகிறார்கள். காங்கிரஸ் என்ற மலையுடன் மோதி திமுக ஆட்சிக்கு வந்தது. திமுக என்ற மாபெரும் மலையுடன் மோதி அதிமுக ஆட்சியைப் பிடித்தது. எம்ஜிஆர் பதவியில் இருந்தவரை திமுக ஆட்சியைப் பிடிக்கவேயில்லை. அந்தவகையில் மலையுடன் மோதி ஆட்சியைப் பிடிப்பதே லட்சியம் என்றார் விஜயகாந்த்.

நன்றிங்க

விஜயகாந்த் சார் ஒரு படத்துக்கு எத்தனை கிளைமாக்ஸ் இருந்தால் என்ன? அத்தனை கிளைமாக்ஸிலும் நீங்க நடிக்கலாமே. எம்ஜிஆர் பதவியில் இருந்தவரை திமுக ஆட்சியைப் பிடிக்கவேயில்லை வாஸ்தவந்தான் அதுமாறி கருணாநிதி பதவியிலிருக்கம்வரை தேமுதிக ஆட்சியை பிடிக்க முடியாதுன்னு சொல்ல வர்றீங்களா?

Friday, December 01, 2006

2.கொலை வழக்கு: சித்து குற்றவாளி

01 டிசம்பர் 2006

கொலை வழக்கு ஒன்றில் விடுதலை செய்யப்பட்டிருந்த பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து குற்றவாளி என்று பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கொலை வழக்கு ஒன்றில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 304 மற்றும் 34 வது பிரிவின் கீழ் குற்றம்சாட்டப்பட்டிருந்த சித்துவை பாட்டியாலா மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றம் 1999ம் ஆண்டு விடுதலை செய்திருந்தது.

குர்னாம்சிங் என்பவர் கடந்த 1988ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில் சித்து குற்றவாளி என்று கூறி வழக்கு தொடரப்பட்டது.

பாட்டியாலாவில் வங்கி ஒன்றின் முன்பு 1988ம் ஆண்டு, வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், குர்னாம் சிங்கை சித்துவும், அவருடன் இருந்தவர்களும் அடித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் விடுதலையான சித்துவின் வழக்கு மேல்முறையீட்டில் அவர் குற்றவாளி என்றும், அவருக்கான தண்டனை வரும் புதன் கிழமை அறிவிக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நன்றிங்க

நீதித்துறை கனவான்களே ஒரு வழக்கை ஒரு தடவைக்கு நாலு தடவை விசாரியுங்கள். ஏன் நாப்பது தடவையும் விசாரியுங்கள். ஒரு வருஷத்துக்கு பல வருஷம் விசாரணை செய்யுங்கள். ஆனா தீர்ப்பு மட்டும் ஒரு தீர்ப்பா இருக்கட்டும். (இத எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? எல்லாம் தமிழ் மக்களிடம் கேட்டதுங்க.)

Thursday, November 30, 2006

துரோகி எனும் சொல்.

முஸ்லிம்களில் சிலர் துரோகியென்ற சொல்லின் ஆழம் தெரியாமல் முஸ்லிம்களில் சிலரை 'இனத்துரோகிகள்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். இஸ்லாம் கண்டிக்கும் இந்த செயல் வெறுக்கதக்கது என்பதை இவர்கள் உணரவில்லை. அடுத்தவரை குறிவைத்து பேசப்படும் வார்த்தைகள் அந்தவார்த்தைக்கு அவர் தகுதியில்லாதவராயிருந்தால் குறிவைத்து பேசிய வார்த்தை மீண்டும் பேசியவரை நோக்கி திரும்பிவிடும் என்பதை இந்த இஸ்லாமியர்கள் அறிந்திருக்கிறார்களா?

அறிந்திருந்தால் இந்த அவதூறு சொல்லை சொல்லியிருக்கமாட்டார்கள். தனக்கு திட்டவட்டமான அறிவு இல்லாத ஒன்றை பற்றி எந்த முஸ்லிமும் பேசமாட்டான். அப்படி பேசியவன் வெறும் பெயர்தாங்கியாக இருப்பான். யார் நல்லறம் செய்கிறாரோ அது அவருக்குரியது. யார் தீமை செய்கிறாரோ அது அவருக்கே எதிரானது. 41:46 என்ற இறைவாக்கின்படி அடுத்தவருக்கு தீமை செய்பவர் தீமையை எண்ணுபவர் தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறார். தனக்கே தீமையை எண்ணுகிறார்.

அவதூறு பேச்சின் சுடு சொல் தாளாமல் கலங்கி நிற்பவர்களின் கலக்கத்துக்கும் மனஉளச்சலக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கும் புண்ணியவான்களே(!?) உங்கள் இறைவனிடம் இதற்கு என்ன சமாதானம் சொல்லப்போகிறீர்கள்? எவரும் செய்யாத ஒன்றை அவதூறாக சொல்லி அவரை நோவினைப்படுத்துபவர் வெளிப்படையான பாவத்தை சுமக்கிறார் 33:58 என்ற இறைவனின் எச்சரிக்கை உங்களுக்கு விளங்காமல் போய்விட்டதா?

யாரோ முகம் தெரியாதவர் கூறிய செய்தியை சிந்திக்காமல் தீர்க்க ஆராயமல் அதை அப்படியே மறு செய்தியாக அதனினும் (இனத்துரோகிகள் என) கடுஞ்சொல்லாக வார்த்து விட்டீர்களே இதை செவியேற்றபோது இது பற்றி பேச நமக்கு தகுதியில்லை என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா 24:16

சொல்வதற்கு நிறைய இருப்பினும் சிந்திப்பவர்களுக்கு இது போதும். அவதுறு சுமத்தியவர்களே அவதூறுக்கு பரிகாரமாக என்ன செய்யப்போகிறீர்கள்? கேட்டு விடைபெறுகிறேன்.

இப்படிக்கு
முஸ்லிம்களில் ஒருவன்.